Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
அம்மன் அருளின் அற்புதம்: நவராத்திரி கொண்டாடும் ரகசியங்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

அம்மன் அருளின் அற்புதம்: நவராத்திரி கொண்டாடும் ரகசியங்கள்

Posted DateSeptember 12, 2025

நமது இந்து மதத்தில் பரம்பரை பரம்பரையாக நவராத்திரி ஒரு அற்புதமான ஆன்மீகத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஒன்பது இரவுகளும் பத்து நாட்களும் நீடிக்கும் இந்தப் பெருவிழா, சக்தியின் வெளிப்பாடு, தெய்வீக அன்னையின் அருள் மூலம் நமது மனம் தூய்மை அடைகிறது. இது நல்ல எண்ணம் மற்றும் மாற்றம் ஆகியவற்றை நமக்குக் கற்றுத் தருகிறது. நவராத்திரியின் போது அம்பாளின் மூன்று முக்கிய வடிவங்கள் – துர்கை, லட்சுமி, சரஸ்வதி – தனித்தனியாக வணங்கப்படுகின்றன. துர்கை வடிவில் அன்னை அசுர சக்திகளை அழித்து தீமையை வெல்லும் வீரத்தையும் தைரியத்தையும் அருள்கிறாள். லட்சுமி வடிவில் வளமும் செழிப்பும் தருகிறாள். சரஸ்வதி வடிவில் அறிவும் கலை நுணுக்கமும் தருகிறாள். இவ்வாறு ஒவ்வொரு நாளும் அன்னையின்  தனித்தன்மையான அருள் நம் வாழ்க்கையில் புது ஒளியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. நவராத்திரி ஒன்பது நாட்களும் எந்த வடிவில் அம்பிகையை வணங்க வேண்டும் மற்றும் வழிபாட்டின் மூலம்  என்னென்ன பலன்கள் கிட்டும் என்பதை விளக்கமாக  ஆஸ்ட்ரோவேத் இணையதளத்தில் வழங்கியுள்ளனர்.

கோவிலாக மாறும் இல்லங்கள்

நவராத்திரி என்பது வழிபாட்டிற்கு மட்டும் உரிய காலமல்ல; ஆன்மீகப் பயிற்சிக்கான, மனம் சுத்திகரிக்கப்படும் பருவமாகும். பழைய நூல்களில் சொல்லப்பட்டதுபோல், நம் உள்ளத்தில் இருக்கும் காமம், கோபம், பொறாமை, அகந்தை போன்ற அசுர சக்திகளை அழிக்க நவராத்திரி வழிபாடுகள் துணைபுரிகின்றன. ஒவ்வொரு நாளும் ஜபம், பூஜை, தியானம் செய்வதன் மூலம் நம் உள்ளம் தூய்மையடைந்து, புதிய ஆற்றலுடன் திகழ்கிறது. இதனால்தான் நவராத்திரி ஒரு ஆன்மீக யோகப் பயணமாகக் கருதப்படுகிறது. இந்த விழாவின் போது கலை, கலாச்சாரம், சமூக உறவு ஆகியவை புதிதாய் மலர்கின்றன. தென்னிந்தியாவில் கொலு வைக்கும் வழக்கம் மிகப் பிரபலமானது. படிப்படியாக வைத்த பொம்மைகள், சின்னஞ் சிறு படிமங்கள் அனைத்தும் உலகின் பல்வேறு பரிமாணங்களையும், சமுதாய வாழ்வையும் சித்தரிக்கின்றன. இதனால் வீடு ஒவ்வொன்றும் சிறிய கோவிலாக மாறுகிறது. நண்பர்கள், உறவினர்கள் வீடு வீடாகச் சென்று பாராட்டுவதும், பாடல்களும், பக்தி இசைகளும் அந்தக் காலத்தில் சிறப்பாகக் கேட்கப்படுவதும் ஆனந்தம் அளிக்கின்றன. கொலுவின் பின்புலம், பகிர்வும் பாசமும் என்பதைக் குறிப்பது.

தீமையின் மீது நன்மையின் வெற்றி

வட இந்தியாவில் இக்காலத்தில் ராம்லீலா நாடகங்கள் நடத்தப்படும். ராமனின் கதையை மேடையில் நடித்து, அசுர சக்திகளின் அழிவையும், தர்மத்தின் வெற்றியையும் மக்கள் கற்றுக்கொள்வர். அத்துடன், தசமி நாளில் ராவணனின் சிலை எரிக்கப்பட்டு தீமையை ஒழிக்கும் சின்னமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் நவராத்திரியை தனித்தன்மையுடன் கொண்டாடினாலும், அதன் மையக் கருத்து – “தீமையின் மீது நன்மையின் வெற்றி” – என்பதே. நவராத்திரியின் போது நோன்பு நோற்பது ஒரு முக்கிய பகுதி. பலர் முழு நோன்போ, பழம், பால், காய்கறி போன்ற சாத்வீக உணவை மட்டுமே உட்கொள்வர். இதனால் உடல் இலகுவாகி, மனம் தெளிவாகும். உணவில் சுத்தம், மனதில் சுத்தம் என்பதே நோன்பின் நோக்கம். நவராத்திரியில் நோன்பு கடைப்பிடிப்பவர்கள் அதிகமாக தியானம் செய்து, மந்திரங்களைச் சொல்லுவதால் அவர்களின் உள்ளத்தில் ஆன்மிக நாட்டம் பெருகுகின்றது.

பெண்மைக்கு அளிக்கப்படும் மரியாதை

அதே நேரத்தில், இந்த விழா பெண்களின் சக்திக்கு அளிக்கப்படும் மரியாதையாகவும் பார்க்கப்படுகிறது. “அன்னை இல்லாத இடம் ஆலயம் ஆகாது” என்று கூறுவதைப் போல, சக்தியில்லாமல் உலகமே இயங்காது. அந்த சக்தியின் பல்வேறு வடிவங்களைக் கண்டு வணங்குவதற்கான அழகான வாய்ப்பே நவராத்திரி. அம்பிகை ஒவ்வொரு வீட்டிலும் அருள்புரிவாள் என்ற நம்பிக்கையால் வீடு வீடாக வளமும் அமைதியும் பரவுகிறது.இந்தப் பண்டிகை, வெளிப்புறச் சடங்குகள் மட்டுமல்ல; உளவியல் ரீதியாகவும் நம் வாழ்க்கையை மாற்றுகிறது. நவராத்திரி ஒன்பது நாட்களும் ஒவ்வொரு நாளும் நம் உள்ளத்தில் ஒரு எதிர்மறை சக்தியை வென்று, ஒரு நேர்மறை சக்தியை வளர்த்துக் கொள்ளும் நாட்களாகக் கருதலாம். உதாரணமாக, முதல் நாளில் பயத்தை வென்று தைரியத்தைப் பெறுவது, அடுத்த நாளில் அகந்தையை வென்று பணிவை வளர்ப்பது போன்ற உளவியல் மாற்றங்களை நமக்குக் கற்றுத் தருகிறது.

அற்புத அனுபவங்களை அளிக்கும் நவராத்திரி

அம்பாளின் அருளை நம்பி நவராத்திரியை அனுஷ்டிப்பவர்கள் வாழ்வில் அற்புத அனுபவங்களைச் சந்தித்திருக்கிறார்கள். பலரின் மனதில் நம்பிக்கையும் உற்சாகமும் அதிகரித்து, சிக்கலான பிரச்சினைகளும் எளிதில் தீர்ந்துபோகும் அனுபவங்கள் நிகழ்ந்துள்ளன. “அம்மன் அருள்” என்பது காணாத சக்தி; அது ஒருவனை உள்மனதிலிருந்து மாற்றும் வல்லமை. இதனால் தான், நவராத்திரி வழிபாடுகள் ஆன்மீக சக்தியை மட்டுமல்லாமல், வாழ்க்கையில் நேர்மறையான முன்னேற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

முடிவுரை :

இவ்வாறு நவராத்திரி, அம்பிகையின் அருள் பெருகும் காலமாகவும், மனித மனத்தின் உள்ளிருக்கும் அசுர சக்திகளை அழிக்கும் காலமாகவும், குடும்பங்களின் உறவை வலுப்படுத்தும் காலமாகவும், சமூக ஒற்றுமையை உயர்த்தும் காலமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒன்பது இரவுகள் நம் வாழ்வை ஆன்மீக ஒளியால் நிரப்பி, அடுத்த ஆண்டுக்கான நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருகின்றன. அம்பாளின் அருளால் வாழ்க்கை சிரமங்களிலிருந்து விடுபட்டு, ஆனந்தத்திலும் செழிப்பிலும் ஒளிரும் என்பதை நவராத்திரி மறுபடியும் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.