இந்திய பாரம்பரியத்தில் ஆன்மீகத்தையும் பக்தியையும் ஒருங்கே இணைக்கும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. ஒன்பது இரவுகளும் பத்து நாட்களும் கொண்ட இந்த திருநாள் சக்தி என்று போற்றப்படும் அம்பிகையின் அருளால் நமது உள்ளுணர்வை உயர்த்தும் சிறப்புமிக்க காலமாக கருதப்படுகிறது. “நவராத்திரி” என்ற சொல்லே “ஒன்பது இரவுகள்” என்பதைக் குறிக்கும். அதாவது நவ என்றால் ஒன்பது என்று பொருள். ராத்திரி என்பது இரவைக் குறிக்கும். எனவே நவராத்திரி என்பது ஒன்பது தெய்வீக இரவுகளைக் குறிக்கும். இந்நாட்கள் அனைத்தும் தெய்வ சக்தியின் வெவ்வேறு வடிவங்களை ஆராதித்து, வாழ்க்கையில் வெளிச்சமும் வெற்றியும் பெறுவதற்கான வழிகாட்டியாகும்.
நவராத்திரியின் அடிப்படைச் செய்தியாதெனில் தீமையை வென்று நன்மை நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதாகும். அசுரர்களின் அகங்காரத்தை அழித்து, தேவர்கள் மீண்டும் தெய்வீகச் சாந்தியை அடைந்த கதை தான் நவராத்திரி. துர்கா தேவி, மகிஷாசுரனை அழித்த மகத்தான நிகழ்வு இந்நாட்களுடன் தொடர்புடையது. இது வெறும் புராணக் கதை அல்ல, மனித மனத்தின் உள்ளே இருக்கும் அசுர குணங்களை வென்று, தெய்வீக குணங்களை வளர்த்துக் கொள்வதற்கான அடையாளமாகும். இந்த நாட்களில் நாம் அன்னையை வணங்குவதன் மூலம் அவளது அருளால் நம்முள் இருக்கும் அசுர குணங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம். தீமையை நன்மை வெல்வது போல நமது தீய குணங்கள் அகன்று நல்ல வழியில் நாம் நடப்போம்.
நவராத்திரியின் போது அம்பாளின் மூன்று முக்கிய வடிவங்கள் – துர்கை, லட்சுமி, சரஸ்வதி – தனித்தனியாக வணங்கப்படுகின்றன. துர்கை வடிவில் தாய் அசுர சக்திகளை அழித்து தீமையை வெல்லும் வீரத்தையும் தைரியத்தையும் அருள்கிறாள். லட்சுமி வடிவில் வளமும் செழிப்பும் தருகிறாள். சரஸ்வதி வடிவில் அறிவும் கலை நுணுக்கமும் தருகிறாள். இவ்வாறு ஒவ்வொரு நாளும் தாயின் தனித்தன்மையான சக்தி நம் வாழ்க்கையில் புது ஒளியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. பத்தாவது நாள் விஜயதசமி ஆகும். இந்த வருடம் திதி நேரம் நீடிப்பதால் நவராத்திரி பதினோரு நாட்கள் கொண்டாடப்படும் எனும் அரிய தகவலை ஆஸ்ட்ரோவேத் மூலம் நீங்கள் அறியலாம்.
முதல் நாள் – ஷைலபுத்ரி
∙ தெய்வீக அர்த்தம்: தைரியம், நிலைத்தன்மை.
∙ பூ: செம்பருத்தி.
∙ நைவேத்யம்: நெய் சாதம்.
∙ பயம், பலவீனங்களை அகற்றி தன்னம்பிக்கையை வளர்க்கும் நாள்.
இரண்டாம் நாள் – ப்ரஹ்மசாரிணி
∙ தெய்வீக அர்த்தம்: தன்னடக்கம், ஒழுக்கம்.
∙ பூ: மல்லிகை.
∙ நைவேத்யம்: சக்கரை பொங்கல்.
∙ கோபம், ஆவேசம் அகன்று அமைதி பெறப்படும் நாள்.
மூன்றாம் நாள் – சந்திரகாந்தா
. தெய்வீக அர்த்தம்: சாந்தி, சக்தி.
∙ பூ: வெள்ளை அரளி
∙ நைவேத்யம்: பால் பாயசம்.
∙ மன குழப்பம் நீங்கி தெளிவு கிடைக்கும் நாள்.
நான்காம் நாள் – கூஷ்மாண்டா
∙ தெய்வீக அர்த்தம்: படைப்பாற்றல், ஆரோக்கியம்.
∙ பூ: சாமந்தி.
∙ நைவேத்யம்: எலுமிச்சை சாதம்.
∙ சோர்வு நீங்கி ஆற்றல் பெருகும் நாள்.
ஐந்தாம் நாள் – ஸ்கந்தமாதா
∙ தெய்வீக அர்த்தம்: தாய்மை, பாசம்.
∙ பூ: செந்தாமரை.
∙ நைவேத்யம்: பருப்பு சாதம்.
∙ அகந்தை நீங்கி கருணை பெருகும் நாள்.
ஆறாம் நாள் – காத்யாயனி
∙ தெய்வீக அர்த்தம்: தைரியம், நியாய உணர்வு.
∙ பூ: செவ்வந்தி.
∙ நைவேத்யம்: எலுமிச்சை பச்சடி.
∙ பயம் நீங்கி செயல் வல்லமை பெறும் நாள்.
ஏழாம் நாள் – காலராத்திரி
∙ தெய்வீக அர்த்தம்: அறியாமை அழிப்பு.
∙ பூ: கருவிளை மலர்.
∙ நைவேத்யம்: வெண் பொங்கல்.
∙ சோம்பல் நீங்கி அறிவு வளரும் நாள்.
எட்டாம் நாள் – மகாகௌரி
∙ தெய்வீக அர்த்தம்: தூய்மை, எளிமை.
∙ பூ: மல்லிகை, வெள்ளை அரளி
∙ நைவேத்யம்: தேங்காய் சாதம்.
∙ பொறாமை நீங்கி கருணை பெறப்படும் நாள்.
ஒன்பதாம் நாள் – சித்திதாத்ரி
∙ தெய்வீக அர்த்தம்: ஆன்மிக பூரணத்துவம்.
∙ பூ: அனைத்து வித மலர்களும்.
∙ நைவேத்யம்: வன்னி இலையுடன் சாம்பார் சாதம்.
∙ ஆன்மிக முன்னேற்றமும் ஆனந்தமும் பெறப்படும் நாள்.
தசமி – விஜயதசமி
ஒன்பது நாட்களும் சக்தியை துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி வடிவில் வணங்கி வழிபட்ட பிறகு, பத்தாம் நாள் “விஜயதசமி” எனக் கொண்டாடப்படுகிறது. இது தீமையின் மீது நன்மை வெற்றி பெறும் நாளாகவும், புதிய தொடக்கங்களைச் செய்ய ஏற்ற நாளாகவும் கருதப்படுகிறது. கல்வி, தொழில், கலை – எதிலும் இந்த நாளில் ஆரம்பித்தால் வெற்றி உறுதி என்ற நம்பிக்கை உள்ளது.நவராத்திரி ஒவ்வொரு நாளும் நமக்குள் மறைந்திருக்கும் அசுர குணங்களை அழித்து, நல்ல குணங்களை வளர்க்கும் ஆன்மீகப் பயணமாக மாறுகிறது. ஒன்பது நாட்களும் உள்மாற்றத்தை ஏற்படுத்தி, பத்தாம் நாள் வெற்றியை உறுதி செய்கிறது. அம்பாளின் அருளால் வாழ்க்கை சிரமங்களிலிருந்து விடுபட்டு, ஆனந்தத்திலும் செழிப்பிலும் ஒளிரும் என்பதை நவராத்திரி மறுபடியும் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.
கலாச்சார மற்றும் குடும்ப ஒற்றுமை
நவராத்திரி என்பது வெறும் மதபூர்வ கொண்டாட்டம் மட்டுமல்ல. இது குடும்பங்களையும் சமூகத்தையும் இணைக்கும் பண்டிகை. நண்பர்கள், உறவினர்கள் வீட்டிற்கு வந்து கொலு பார்க்கும் வழக்கம், பெண்களுக்கு வழங்கப்படும் வெற்றிலையும் பாக்கு, சுண்டல் வகைகளும், பரிசுகளும் அன்பையும் பகிர்வையும் உணர்த்துகின்றன. குழந்தைகளுக்கு பாடல், நடனம், கலைக் கற்றுக் கொடுக்கப்படும் நேரமாகவும் இது திகழ்கிறது.
வாழ்க்கைப் பயணத்தில் நவராத்திரியின் பாடங்கள்
நவராத்திரியின் முக்கியமான பாடம், ஒவ்வொரு மனிதரும் தன்னுள் மறைந்திருக்கும் அசுர குணங்களை வென்று, தெய்வீக குணங்களை வளர்க்க வேண்டும் என்பதுதான். பேராசை, அகங்காரம், சோம்பேறித்தனம், கோபம் போன்றவை வாழ்க்கையை இருட்டடிக்கின்றன. அவற்றைத் துர்கையின் சக்தியால் ஒவ்வொரு நாளும் நீக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வாழ்வில் ஒளி, ஆரோக்கியம், ஆனந்தம் ஆகியவை வந்து சேரும்.
ஒன்பது இரவுகள் – ஆன்மீகப் பயணம்
நவராத்திரி என்பது வெறும் பண்டிகை அல்ல, ஒரு ஆன்மீகப் பயணம். பராசக்தியின் ஒவ்வொரு வடிவமும் நம்மை படிப்படியாக ஆன்மீகம் நோக்கி இட்டுச் செல்கிறது. ஆன்மீக ரீதியாக நம்மை உயர்த்துகிறது. உதாரணமாக முதல் நாளில் வெளிப்புற வாழ்க்கையை சுத்தப்படுத்தி, கடைசி நாளில் உள்மனதை தெய்வீக சக்தியுடன் ஒன்றிணைக்கிறது. இது மனிதனை சாதாரண வாழ்க்கையிலிருந்து உயர்ந்த ஆன்மீக நிலைக்குக் கொண்டு செல்லும் படிக்கட்டாகத் திகழ்கிறது.
முடிவுரை
நவராத்திரி – ஒன்பது இரவுகள், ஒன்பது சக்திகள், ஒரு ஆன்மீகப் பயணம் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல, வாழ்க்கையின் உண்மைச் செய்தியாகும். ஒன்பது நாட்களும் நம்மை மறுமலர்ச்சியடையச் செய்து, தெய்வ சக்தியின் அருளால் நம்மைச் சிறந்த பாதைக்கு இட்டுச் செல்கின்றன. அம்பிகையின் அருளால் வாழ்வில் ஒளியும் வெற்றியும் நிறைந்திடும் என்பதில் ஐயமில்லை.
September 11, 2025
September 10, 2025
September 10, 2025