Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
ஆடி மாதத்தின் சிறப்புகள் என்னென்ன? | ஆடி மாத சிறப்புகள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ஆடி மாதத்தின் சிறப்புகள் என்னென்ன?

Posted DateJuly 17, 2024

தமிழில் மாதங்கள் மொத்தம் 12. அதில் மிக முக்கியமானதாகவும் ஆன்மீக தொடர்புடையதாகவும் கருதப்படுகிற பக்தி மயமான மாதமாக ஆடி மாதம் விளங்குகின்றது. அப்படி மற்ற மாதங்களுக்கு இல்லாத பெருமையும் சிறப்பும் இந்த ஆடி மாதத்துக்கு ஏன் வந்தது என்று தெரியுமா?

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை, அமாவாசை போன்ற தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். ஆடி மாதம் சூரியன்   வடக்கிலிருந்து தெற்கு திசை நோக்கி செல்லும் காலம் ஆகும். ஆடி மாதம் மழை பொழிவின் தொடக்கத்தை குறிப்பதால் தமிழர்கள் ஆடிப்பிறப்பை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். அந்த மாதம் முழுவதும் இறை வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

தட்சினாயன புண்ணிய காலம்

தட்சிணாயன புண்யகாலத்தின் முதல் மாதமான ஆடி என்பது சூரியபகவான் தனது திசையை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி மாற்றும் காலம்.  எனவே இந்த மாதம் பாரம்பரியமாக தட்சிணாயனத்துடன் தொடர்புடையது, இது தெற்கு நோக்கிய தருணம். இந்த காலம் இந்து தெய்வங்கள் மற்றும் தேவர்களின் இரவாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் இருள், எதிர்மறை மற்றும் தீய சக்திகளின் ஆற்றல் வலுவடையும் என்று கூறப்படுகிறது.

ஆடி மாத திருவிழாக்கள்

ஆடி செவ்வாய்க்கிழமை

ஆடி வெள்ளிக்கிழமை போலவே ஆடி மாத செவ்வாய்க் கிழமை அம்மனுக்கு உகந்த நாள் ஆகும்.. அன்றைய தினம் அம்மனுக்கு விமரிசையாக பூஜை மற்றும் வழிபாடுகள் நடை பெறும்.  அன்னையின் அருளாசிகளைப் பெற பெண்கள் விரதம் இருந்து வழிபடுவார்கள். ஆடி மாதத்தில் வரும் நான்கு செவ்வாய்க்கிழமைகளிலும், அம்மன் கோவில்களுக்கு சென்று, பெண்கள் வழிபட்டால், எண்ணிய காரியம் ஈடேறும். இந்நாளில், பெண்கள் அதிகாலையில் குளித்து, குலதெய்வ வழிபாடு நடத்திய பின், துர்க்கை அம்மன், முருகன் கோவில்களுக்கு சென்று வழிபடுவது சிறப்பு.* ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள்.ஆடி -செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்களகௌரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும். இந்த பூஜைக்கான விக்கிரகம் வெள்ளியில் கிடைக்கும். ஆடி மாதம் ஐந்து செவ்வாய்க்கிழமை ஐந்து வருடங்கள் வரை தொடர்ந்து இந்த பூஜையை மேற்கொள்ள வேண்டும். கடைசி நாளன்று ஐந்து சுமங்கலிகளுக்கு தங்களால் இயன்ற அளவிற்கு தானம் வைத்து தாம்பூலம் அளிக்க வேண்டும்.

ஆடி வெள்ளிக்கிழமை

ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் முன்னோர்களை நினைத்து வழிபட உகந்தவை. இந்நாட்களில் காலையில் நீராடிவிட்டு வேப்ப மரத்தை வழிபடுவது வழக்கம். மரப்பட்டையில் மஞ்சள் மற்றும் குங்குமம் பூசி, அகல் விளக்கை ஏற்றி வைத்து பூஜை மேற்கொள்வார்கள். இது எளிமையான பூஜை ஆகும்.  ஆடி வெள்ளி, சக்தி வடிவான அம்மனுடன் தொடர்பு உள்ளதன்  காரணமாக, மாதம் முழுவதும் ஐந்து வெள்ளிக் கிழமைகளில் கொண்டாடப்படும் பூஜை மற்றும் வழிபாடுகள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் அம்மனை வழிபட்டு அவளின் அருளாசிக்ளைப் பெறுகிறார்கள். அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

ஆடிப்பூரம்

ஆடிப் பூரம் அம்பாளுக்குரிய விசேட நாளாகும். ஆடித் திங்களில் வரும் பூர நாளில் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப் பூரம் என்று கூறப்படுகிறது. ஆடிப் பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடித் திங்களில் வரும் பூர நாள் ஆகும். பூமா தேவியே ஆடிப் பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள். ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிப்புத்தூரில் தேரோட்டம் நடத்தப்படுகிறது. ‘ஆடிப்பூரம்” நாளில் ஆண்டாளை வணங்கிடும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மேலும் அன்று அம்மனுக்கு வளையல் சார்த்தி பூஜைகளை மேற்கொள்வார்கள்.

ஆடி கிருத்திகை

ஆடி கிருத்திகை முருகப் பெருமானைக் கொண்டாடுவதற்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. கிருத்திகை என்பது முருகனின் நட்சத்திரம். அன்றைய தினம் விரதம் இருந்து முருகப் பெருமானை வணங்க எண்ணிய காரியங்கள் கை கூடும்.

ஆடித் தபசு

ஒருமுறை பார்வதிதேவிக்கு, ‘பரமன்- பரந்தாமன் இருவரில் பெரியவர் யார்?’ என்ற சந்தேகம் எழுந்தது. ‘பூவுலகில் புன்னைவனம் சென்று தவமியற்றினால், அங்கே காட்சி தந்து உன் சந்தேகம் தீர்ப்போம்’ என்று வழிகாட்டினார் சிவனார்.அதன்படி பூமியில் புன்னைவனமான சங்கரன்கோவில் தலத்துக்கு வந்து தவமிருந்தாள் அன்னை பார்வதி. நாட்கள் நகர்ந்தன. ஆடி மாதம், உத்திரட்டாதி நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடிய நன்னாளில் அம்பிகைக்குச் சங்கரநாராயணராகக் காட்சி கொடுத்தார் இறைவன். அரியும் சிவனும் ஒன்றே என்றுணர்ந்தாள் அம்பிகை. ஆடித்தபசு என்ற பெயரில் நெல்லை மாவட்டத்தில் இவ்விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது.சங்கரன்கோவிலின் பிரசித்திபெற்ற திருவிழா ஆடித்தபசு வைபவம். இந்த நாளில்  சங்கரநாராயணராக காட்சி தரும் சுவாமியையும், கோமதி அம்பாளையும் தரிசித்து வழிபடுவதால் சகல சுபிட்சங்களும் கைகூடும்.

ஆடிப் பூரம்

ஆடிப் பூரம் ஆண்டாள் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. அன்று ஆண்டாளுக்கும் அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் பெரும்பாலான அம்மன் கோவில்களில் அம்மனுக்கு வளையல் சாற்றி பூஜை மேற்கொள்வார்கள். பிறகு அதனை அடுத்த நாளில் சுமங்கலிப் பெண்களுக்கு அளிப்பார்கள். ஆடித் திங்களில் பூர நாள் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். சித்தர்களும், முனிவர்களும் இந்நாளில்தான்  தங்களுடைய தவத்தை தொடங்குவதாகவும் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப் பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள்.

ஆடிப் பெருக்கு :

ஆடிப் பெருக்கு என்பது உயிர் வாழ அவசியமான தண்ணீரின் தாகம் தீர்க்கும் மற்றும் பிற உபயோகங்களின் பண்புகளை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது. இது அனைத்து மனித இனத்திற்கும் கிடைத்த இயற்கையின் பரிசாக கருதப்படுகிறது. ஆடி மாதம் தமிழகத்தில் பருவமழையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. பருவமழை காலங்களில் ஆறுகளில் நீர்வரத்து அதிகரிக்கும். அதனைக் கொண்டாடுவதே ஆடிப் பெருக்கு ஆகும். விவசாயத்தை காத்து வரும் காவிரித்தாயை வணங்கும் வகையில் ஆடி மாதம் பதினெட்டாம் நாளை ஆடிப்பெருக்கு விழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

ஆடி மாத சிறப்புகள்

ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும்.

ஆடி மாதம் அம்மனின் சக்தி  இந்த பிரபஞ்சத்தில் எங்கும் வியாபித்து இருக்கும். எனவே இந்த மாதம் அம்மனைக் கொண்டாடுவார்கள்.

இந்த மாதம் தான் நதிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும். எனவே புனித நதிகளில் நீராடுவது விசேஷம்

ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். ஆடி மாதம் விவசயாத்திற்கு ஏற்ற மாதம் ஆகும்.

ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதம் ஆகும். அனைத்து அம்மன் கோவில்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும்.

ஆடி மாதம் காவல் தெய்வம் அல்லது எல்லை தெய்வங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இந்த மாதத்தில் தான் தீ மிதி திருவிழாவை விமரிசையாக கொண்டாடுவார்கள்.

அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் என்னும் விசேஷத்தையும் இந்த மாதம் தான் மேற்கொள்வார்கள்.

ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.

ஆடி மாதம் சைவத் தலங்களில் மட்டும் இன்றி வைணவத் தலங்களிலும்  கொண்டாடுவார்கள். ஆடிப்பூரம் ஆண்டாள் அவதரித்த தினமாக கொண்டாடப்பட்டுகிறது.

ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாட நடைபெறும்.

கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்ற கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது.

ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உப வாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

ஆடி மாதம் கிராம தேவைதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனை  வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதா சகஸ்ரநாமம் சொல்ல வேண்டும்.

ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம்.