AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now
63 Nayanmargal History in Tamil - 63 நாயன்மார்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

63 நாயன்மார்கள் வரலாற்று சுருக்கம்!

1.திருநீல கண்ட நாயனார்

கூடா நட்பின் விளைவால்,புற ஒழுக்கம் தவறிய காரணத்தால்  மனைவியை தீண்டாமல் வாழ்ந்து வந்தார் இவர்.  ஒரு நாள் சிவயோகி ரூபத்தில் வந்த சிவன் திருவோடு கொண்டு திருவிளையாடல் புரிந்தார். திருவோடு தானாகவே காணாமல் போய் விட்டது என்பதை மனைவியின் கரம் பிடித்து சத்தியம் செய்து தருமாறு கேட்டார் சிவ யோகி.  மனைவியை தீண்ட முடியாத  காரணத்தால்  முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி எழும் போது சிவனின் அருளால் இளமை பெற்றார்.

2. இயற்பகை நாயனார்:

நாயனாரின் அதீதமான தொண்டு வழிகள் இயற்கையின் உலக வழிகளுக்கு எதிராக இருந்ததால், “இயற்பகை” என்பது “இயற்கைக்கு எதிரானது” என்று பொருள்படும். சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை, முழுநம்பிக்கையுடன் அனுப்பியவர்.  இவரின் பக்தியை சிவபெருமான் பாராட்டி தம்பதியரை அவரது தெய்வீக இருப்பிடமான கைலாசத்திற்கு அழைத்துச் சென்றார்.

3. இளையான்குடிமாற நாயனார்:

இளையான்குடியில் பிறந்த காரணத்தால் இளையான்குடி மாறனார் என்று அழைக்கப் பெற்றார். எந்நேரமும் எம்பெருமானையும்   ஐந்தெழுத்தையும் சிந்தித்துக் கொண்டிருப்பார் மாறனார். அடியாரைப் போற்றிப் பேணும்  தன்மையுடையார் என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டி, அவ்வள்ளலார்க்கு வறுமையை உண்டாக்கினார் எம்பெருமான். நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.

4. மெய்ப்பொருளார்:

இவர் சேதிநாட்டுத் திருக்கோவலூரிலிருந்து அரசாண்ட குறுநிலமன்னர் குலத்தில் அவதரித்தார். மெய்யெல்லாம் திருநீறு பூசி, சடைமுடி தாங்கி, ஆயுதத்தை மறைத்து சிவவேடம் பூண்டு வந்து தன்னைக் கொன்றவனை சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்

5. விறல்மிண்டர்:

வேறெந்த நாயனாரும் இவர் பெற்ற  இறை பெருமை பெற்றாரில்லை.சிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர். திருத்தொண்ட தொகை பாட காரணமாக விளங்கியவர்.

6. அமர்நீதியார்:

நான் ஸ்நானம்பண்ணிக் கொண்டு வரும்வரைக்கும் நீர் இதை வைத்திருந்து தாரும்” என்று இவரிடம் ஈசன் பெருமான் கோவணத்தை கொடுத்து விட்டு, காவேரியிலே ஸ்நானம் செய்வதற்க்கு செல்கிறார்.ஸ்நானம் முடித்து வந்த சிவன் உம்மிடத்திலே தந்த கெளபீனத்தைக் கொண்டு வாரும்” என்றார்.சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, அதற்கு  ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் தந்தவர்.

7. எறிபத்தர்:

சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர்.பின் தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

8. ஏனாதிநாதர்:

விபூதி நெற்றியில் அணிந்து வந்த சிவபக்தர்களை மதித்து அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து ஈசனை வழிபட்டு வந்தார். அவர் அரசர்களுக்கு வாள் வித்தையைப் பயிற்றுவித்து, அதனால் வந்த வளங்கள் எல்லாவற்றையும் சிவனடியார்களுக்கு நாடோறும் கொடுத்தும் வந்தார்.கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக்கொல்லாமல், தான் உயிர் இழந்தவர். தன் உயிர் பிரியும் வேளையில் கூட “ஓம் நமசிவாய நாதன் திருபாதம் வாழ்க” என்று கூறி உயிர் துறந்தார் ஏனாதிநாதர்.

9. கண்ணப்பர்:

அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர்.காளத்தி நாதன் (சிவலிங்கம்) கண்களில் ரத்தம் வடிகிறது என்று தெரிந்தவுடன் தன் இரு கண்களையே அம்பு கொண்டு எடுத்து சிவலிங்கத்தில் வைத்தவர். இன்றும் தினமும் சூரியன் மறையும் மாலை நேரத்தில் கண்ணப்பர் காளத்திநாதனை வணங்குவதாக நம்பப்படுகிறது.

10. குங்கிவியக்கலயர்:

சாய்ந்த லிங்கத்தை தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர். பின் இறைவரருளால் உலகில் நிறைந்த செல்வமுடையவராகி அடியவர்களுக்கெல்லாம் நல்ல இனிய அமுதூட்டியும் உதவியும் வாழ்ந்திருந்தவர்.

11. மானக்கஞ்சறார்:

தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.

12. அரிவாட்டாயர்:

சுவாமிக்குத் திருவமுது செய்விக்கும் பொருட்டுச் செந்நெல்லரிசியும் செங்கீரையும் மாவடுவும் கூடையில் வைத்துச் சுமந்துகொண்டு போகும் போது கால் தவறி சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால்  தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர். தம் கழுத்தை அரிவாள் பூட்டி அறுத்த காரணத்தால் அரிவாட்டாய நாயனார் எனும் திருநாமத்தைப் பெற்றார்.

13. ஆனாயர்:

திருமங்கலம் என்ற மூதூர். அம்மூதூரில் வாழும் பெருங்குடிகளுள் ஒன்றாகிய ஆயர் குலத்தின் குலவிளக்குப்போல ஆனாயர் என்ற பெரியார் அவதரித்தார்.
அவர் தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர்; மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களாலும்சிவபெருமான் திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் பேசாதவர்.புல்லாங்குழல் ஓசையில் சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.

14. மூர்த்தி நாயனார்:

சந்தனக் கட்டைகள் கிடைக்காது தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு, உருத்திராட்சம், சடைமுடியைத் தன்னுடையசின்னமாகக் கொண்டவர்.

15. முருக நாயனார்:

வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்கு பூமாலையாம் பாமாலையை (பாட்டினால்) சாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார்.

16. உருத்திரபசுபதி:

இவர் சிவபெருமானது திருவடிகளில் நிறைந்த அன்பினையே பெருஞ்செல்வமெனக் கொண்டிருந்தார். ஐம்புலன்களை அடக்கி, சிவனை மறவாத சிந்தையோடும் ருத்ரம் ஓதினமையால், முத்திபெற்றவர். கழுத்தளவு நீரில் பகல் இரவு பாராமல் ருத்ரம் ஓதியவர்.

17. திருநாளைப்போவார்:

தாழ்ந்த குலமென்பதால் கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.

18. திருக்குறிப்புத் தொண்டர்:

சிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால் தன் தலையைக் கல்லில் மோதியவர்.

19. சண்டேசுர நாயனார்:

சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்த தனது தந்தையின் காலை வெட்டியவர்.

20. திருநாவுக்கரசர் சுவாமிகள்:

நாயன்மார்களில் பல்வேறு பெயர்களைக் கொண்டவர் இவர். இயற்பெயர், மதம் மாறியமையால் பெற்றமை, செயல்களாலும், கவியாலும் பெற்றவை எனப் பல பெயர்கள் இவருக்கு உள்ளன. தேவாரம் பாடி உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம் சிவனருளைக் கண்முன் காட்டியவர்.

21. குலச்சிறையார்:

புகழ்பெரும் சிறப்புடைய பாண்டிநாட்டின் வளம்பல பெருக்கிய ஓர் ஊர் மணமேற்குடி. இவ்வூரினது தலைவராகத் திகழ்ந்தவர் குலச்சிறையார். இவர் நம்பியாரூரரால் பெருநம்பி எனப் போற்றப்பட்ட பெருந்தகையாளர். பாண்டி நாட்டில் சிவநெறி விளங்குமாறு அரசுதருமம் செய்து ஆலவாய் இறைவனின் அருட்தாள் சேர்ந்தார் குலச்சிறை நாயனார்.

22. பெருமிழலைக் குறும்பர்:

சிவனடியார்களுக்கு நாள் தோறும் திருவமுது செய்வித்து, அவர்களுக்கு வேண்டுந் திரவியங்களைக் கொடுப்பவர். அவர் சுந்தரமூர்த்தி நாயனாருடைய பெருமையை அறிந்து அவருடைய திருவடிகளை மனம் வாக்குக் காயங்களினாலே சிந்தித்துத் துதித்து வணங்குதலே பரமசிவனுடைய திருவடிகளை அடைதற்கு உரிய நெறியென்று அப்படிச் செய்து வந்தார். சுந்தரருடன் கயிலை சென்றவர்.

23. காரைக்கால் அம்மையார்:

காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார்.இவரின் இயற்பெயர் புனிதவதி.  இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தார். இறைவனிடமிருந்து பெற்ற மாங்கனி நிகழ்வை நினைவு கூறுமுகத்தான், காரைக்கால் கோயிலில் மாங்கனி திருவிழா இன்றளவும் ஆனி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.  இறைவனே துடிக்க பேய் வடிவம் எடுத்தவர். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.

24. அப்பூதி அடிகள்:

திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால் கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாது என்ற அச்சத்தால் இறந்த மகனை மறைத்துவைத்தவர். பின் இறந்த மகனை சிவன்அருளால் உயிர் பெற செய்தவர்.

25. திருநீலநக்கர்:

திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர்.ஈசன் இவருக்கு கனவில் காட்சியளித்தது அருள்புரிந்தார்

26. நமிநந்தி அடிகள்:

நமிநந்தியடிகள் நாயனார்  அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். அவர் இரவும் பகலும் பிரியாது சிவபெருமானைப் பூசித்து மகிழும் ஒழுக்கமுடையவர். ஒரு நாள் திருவாரூர்த் திருக்கோயிலை வழிபடச் சென்றார். வழிபட்ட மகிழ்ச்சியில் எழுந்த அன்பினாலே கோயில் தொண்டுகள் பலவும் செய்து கொண்டிருந்தார். அங்கு விளக்கேற்றி வழிபட வேண்டும் என்ற விருப்பம் அவருள்ளத்தெழுந்தது. திருவாரூரிலேயே ஒரு வீட்டிற்குச் சென்று விளக்கிற்கு எண்ணெய் வேண்டினார். நெய் இங்கு இல்லை. விளக்கெரிப்பீராயின் நீரை அள்ளி எரிப்பீராக’ என்றனர். ஈசன் அருளால் குளத்தின் நடுவே சென்று நாதர் நாமமாகிய திருவைந்தெழுத்தோதி நீரை அள்ளிக்கொண்டு கரையேறிக் கோயிலையடைந்தார். உலகத்தார் அதிசயிக்கும் வண்ணம் அகலில் திரியிட்டு நீர் வார்த்து விளக்கேற்றினார்.

27.திருஞானசம்பந்தர்:

ஞானக் குழந்தை. பல அற்புதங்கள் செய்தவர். பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர். சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர்.

28. ஏயர்கோன் கலிக்காமர்:

இறைவனை தூதுதவராய் அனுப்பிய சுந்தரநாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநோய் பெற்றார். பின் சிவன் அருளால் நோய் நீக்கப்பட்டது.

29.திருமூலர்:

திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். சித்தர்.விடம் தீண்டி மூலன் என்பவர் இறந்தார் இதனால் பசுக்கள் துயரம் கொண்டன. பசுவின் துயரம் தீர்க்க மூலன் உடலில் புகுந்து பசுக்களை காத்தார்.

30. தண்டி அடிகள்:

கண் குருடாக இருந்தாலும் சமுதாய நோக்கம் கொண்டு குளம் தோண்டியவர்.சமணர்கள் சவால் விட சிவஅருளால் கண் பார்வை மீண்டும் பெற்றவர். சமணர்கள் பார்வை இழந்தனர்.

31. மூர்க்கர்:

பல பதிகளிலும் சென்று சிவனை உள்ளுருகிப் பணிந்து அங்கங்கும் சூதாடுதலினால் வந்த பொருளைக் கொண்டு தமது நியமமாகிய அடியார் பணியினைச் செய்து வந்தார். கும்பகோணத்தைச் சேர்ந்து அங்கு தாம்வல்ல சூதினால் வந்த பொருளைத் தாம் தீண்டாது. நாடோறும் அடியார்க்கு அமுதூட்டி வந்தார். . சூதினில் வல்ல இவர், முதற்சூது தாம் தோற்றுப் பிற்சூது பலமுறையும் தாம் வென்று பெரும்பொருள் ஆக்கினார். சூதினால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்துதலினால் இவர் நற்சூதர் – மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்று உலகில் விளங்கினார்.

32. சோமாசிமாறர்:

நிறைய யாகம் நடத்தி சிவ பூஜை செய்தவர்.லோகம் சுபிட்சம் பெற பல சிவயாகம் நடத்தி ஈசனை மகிழ்வித்தார். சுந்தரரின் நண்பர்.

33. சாக்கிய நாயனார்:

தாம் இருக்கும் இடத்திற்கு அண்மையில் வெட்ட வெளியிலே அமைந்துள்ள சிவலிங்கத்தினைச் சென்று கண்டு பெருமகிழ்ச்சி கொண்டவராய், அம்மகிழ்ச்சியின் விளைவாய் ஒன்றுந் தோன்றாது அருகிற்கிடந்த செங்கற்சல்லியை எடுத்து லிங்கத்தின் மேல் எறிந்தார். இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறின.

34. சிறப்புலி:

சிவனடியார்கள் மேல் பேரன்புடையவராக விளங்கினார். அடியார்களை எதிர்கொண்டு வணங்கி இன்சொல் கூறித் திருவமுது அளிப்பார். அவர்கள் விரும்புவதை குறைவறக் கொடுத்து மகிழ்வார். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.

35.சிறுத்தொண்டர்:

பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.

36. சேரமான் பெருமாள்:

சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். சிவனடியாரை சிவனாக பாவித்து உபசரித்தார்.

37. கணநாதர்:

சீர்காழிப்பதியில் அந்தணர் குலத்தில் அவதரித்தார் கணநாத நாயனார்.
அவர் திருத்தோணியப்பருக்கு நாளும் அன்போடு தொழும்பு செய்தார். தொழும்பு செய்தலில் தேர்ச்சி பெற்றிருந்த இத்தொண்டரை நாடிப்பலரும் தொண்டு பயிலவந்தனர். கிருகஸ்தாஸ்சிரமத்தில் இருந்து சிவனடியார்களை வழிபடுவார். சமய குரவராகிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரைத் தினந்தோறும் முப்பொழுதினும் பேராசையோடு விதிப்படி பூசை செய்துகொண்டு வந்தார். அந்தப் பூசாபலத்தினாலே திருக்கைலாசமலையை அடைந்து சிவகணங்களுக்கு நாதராயினார்.

38.கூற்றுவர்:

நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால் தன்சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர். ஒரு நாள் இரவிலே “எம்பெருமானே! அடியேனுக்குத் திருவடியையே முடியாகத் தந்தருளல் வேண்டும்” என்று பிரார்த்தித்துக் கொண்டு நித்திரை செய்தார்.ஆடல்வல்லவன் அவருக்குச் சொப்பனத்திலே தோன்றி தம்முடைய திருவடிகளை முடியாகச் சூட்டியருளினார்; கூற்றுவநாயனார் அவைகளையே முடியாகச் சூடி, பூமி முழுதையும், பொதுநீக்கி ஆண்டார்.

39. புகழ்ச்சோழ நாயனார்:

எறிபத்தர். தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து சிவனை நினைத்து தன் உயிரை விட நினைத்த மன்னர்.சிவனாடியார் தலை கொய்திய காரணத்தால் யாகத்தில் உயிர் துறந்தவர்.

40. நரசிங்க முனையரையர்:

சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர். சிவாலயம் பல கட்டி சைவம் வளர்த்தார். திருவாதிரை நாடோறும் சிவபெருமானுக்கு நியமமாக விசேட பூசை செய்து, அன்று வந்தணையும் அடியார்கள் ஒவ்வொருவருக்கும் நூறு பொன் குறையாமல் கொடுத்துத் திருவமுது அளித்து வழிபட்டு வந்தார்.

41. அதிபத்தர்:

பரதவர் குலத்திலே பிறந்தவர். வலையில் மீன் பிடிக்கும் போது அகப்படும் மீன்களிலே தலைமீனை “இது பரமசிவனுக்கு” என்று மிகுந்த அன்பினோடு எப்பொழுதும் விட்டு வந்தார். ஒருநாளிலே ஒருமீனே வரினும் அதனைப் பரமசிவனுக்கு என்றே விடுவார். ஒரு நாள் ஒருபொன் மீன் கிடைத்தும் அதனை சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.

42. கலிக்கம்பர்:

சிவலிங்கத்தை வழிபட்டாலும் சிவனடியார்களை வழிபடாதொழியின் அவ்வழிபாடு சிறிதும் சிறக்காது என்று சிவாகமஞ் செப்புதலால் தினந்தோறும் சிவனடியார்களைப் பேராசையோடு திருவமுது செய்வித்து, அவர்களுக்கு வேண்டுந் திரவியங்களெல்லாவற்றையுங் கொடுப்பார்.இப்படி யொழுகுநாளிலே, முன்பு தமக்குப் பணிவிடைக்காரராய் இருந்து பணிவிடையை வெறுத்துச் சென்ற ஒருவர் சிவவேடந் தாங்கிவர அவருடைய திருவடிகளை விளக்கப்புகுந்தார். மனைவியார் ‘இவர் எங்களிடத்திலே பணிவிடைக்காரராய் இருந்து போனவர் போலும்” என்று கூறி சிந்தித்தலால் கரகநீர் வார்க்கத் தாழ்க்க செய்தார். முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.

43. கலியர்:

வறுமையில் தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில் தன் மனைவியை விற்க முயன்றவர். வாங்குவார் இன்மையால் மனந்தளர்ந்து, ஆலயத்தை அடைந்து, திருவிளக்கேற்றுஞ் சமயத்திலே, “திருவிளக்குப்பணி மாறில் நான் இறந்துவிடுவேன்” என்று துணிவுகொண்டு, திரியிட்ட அகல்களைப் பரப்பி, எண்ணெய்க்குப் பிரதியாகத் தமது இரத்தத்தை நிறைக்கும் பொருட்டு ஆயுதத்தினாலே கழுத்தை அரிந்தார்.

44. சத்தி:

எங்கும் சிவம் எதிலும் சிவம் என்பதற்கு இனங்க சிவனடியார்களை துன்புறுத்தியும் இகழ்ந்து பேசுவதும் மாபெரும் குற்றமாகும் என்று கருதியவர்.. சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர். அன்பினாற் செய்யும் இந்த அரிய ஆண்மைத் திருப்பணியைப் பலகாலம் வீரத்தாற் செய்திருந்து சிவனடியார்களை காத்தமையால் பரமசிவனுடைய திருவடி நிழலை அடைந்தார்.

45. ஐயடிகள் காடவர்கோன்:

இவர் குறுநில மன்னராகக் காஞ்சிபுரத்தில் அரசாட்சி செய்து வந்தார்.. இம்மன்னர் அரசுரிமையை தன் சிவனடித் தொண்டிற்கு இடையூறாகும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வன்பால் ஒப்புவித்து தலயாத்திரை மேற்கொண்டார் ஐயடிகள் நாயனார் தமது தலயாத்திரையின்போது தலத்திற் கொன்றாகப் பாடியருளிய திருவெண்பாக்களின் தொகுதி க்ஷேத்திரத் திருவெண்பா என்ற பெயரால் வழங்கும்.

46. கணம்புல்லர்:

சிவபக்தியிற் சிறந்தவராகவும் பெருஞ்செல்வருமாக இவர் இருந்தார். செல்வம் பெற்றதினால் அடையும் பயன் இதுவே என்று, சிவாலயத்தினுள்ளே திருவிளக்கேற்றித் தோத்திரம்  செய்து வந்தார். நெடுங்காலஞ்சென்றபின், வறுமைஎய்தி, சிதம்பரத்தை அடைந்து தம்முடைய வீட்டில் உள்ள பொருள்களை விற்று, அங்குள்ள திருப்புலிச் சரமென்னும் ஆலயத்திலே திருவிளக்கேற்றி வந்தார். பொருட்கள் தீர்ந்த பின் விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர். அப்பொழுது பரமசிவன் பெருங்கருணை செய்தருள, கணம்புல்லநாயனார் சிவலோகத்தை அடைந்தார்.

47. காரி:

காரிக்கோவை என்ற நூல் இயற்றி வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.  மூவேந்தர் முன்னிலையில் அரங்கேற்றி அவர்களால் மகிழ்ந்துதவப் பெற்ற பெரும் பரிசுத்தொகை முழுவதும் சிவதலங்கள் நிருமாணித்தலினும் சிவனடியார்க்கு வெகுமதி செய்தலினும் விரயமாக்குஞ் சிவ தொண்டு நெறிநின்றவர் காரி நாயனார்

48. நின்றசீர் நெடுமாறனார்:

திருஞான சம்பந்தாரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப்பெற்று சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.

49. வாயிலார்:

இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.

50. முனையடுவார்:

சிவபெருமான்  திருவடியில் நிறைந்த பேரன்புடையவர்; பகைவர்களைப் போர்முனையில் வென்று பெற்ற பெருநிதியங்களைச் சிவனடியார்க்கு மாறாதளிக்கும் வாய்மை உடையவர்;பகைவனால் தோற்கடிக்கப் பெற்ற அரசருக்காகப் போர் புரிந்து வரும் வருமானத்தில் சிவனாடியார்கள் அனைவருக்கும் உணவு அளித்தார்.

51. கழற்சிங்க நாயனார்:

பரமசிவனுடைய திருவடிகளையேயன்றி மற்றொன்றையும் அறியாதவராக வாழ்ந்து வந்தவர்  கழற்சிங்கநாயனார். அவர் பரமசிவனது திருவருள் வலிமையினால் வடபுலத்தரசர்களைப் போரிலே வென்று, அவர்கள் நாடுகளைக் கவர்ந்து எங்குஞ் சைவசமயந் தழைத்தோங்கும்படி அரசாண்டார்.ஒரு நாள் அவரது துணைவி திருமாலைகட்டும் மண்டபத்தின் பக்கத்திலே விழுந்து கிடந்த ஒரு புதுப்பூவை எடுத்து மோந்தாள். சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டினார்.

52. இடங்கழி:

சர்வமும் சிவனுக்கு சிவபக்தர்களுக்கு என்று அளித்து அறுபதுமூவரில் ஒருவராக ஈசன் அருள்புரிந்த ஒரு சிற்றரசர். அரசனாய் இருந்தாலும்  தன்னுடைய நெல் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.

53. செருத்துணை நாயனார்:

பூசையில் அர்ப்பணிக்கப்படுவன அனைத்தும் சகலவிதத்திலும் நிர்மலமாயிருக்க வேண்டுமென்பது; அவையொவ்வொன்றும் அசுத்தமற்ற சூழ்நிலையிலிருந்து சமயாசார ரீதியான அகப்புறச் சுத்தி உடையோரால் எடுக்கப்பட்டுச் சிவ சிந்தனையோடு கையாளப்படவேண்டும் என்பது பூசைநியம விதிகளில் ஒன்று.சிவ பூஜைக்குரிய மலரை மோந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.

54. புகழ்த்துணை:

வறுமை வந்தாலும் கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பஞ்சம் வந்த நேரத்திலும் தொண்டு செய்வதில் தவறாமல் இருந்தால். பஞ்சம் நீங்கும்வரை இறைவர் நாடோறும் அளித்த காசு கொண்டு துன்பம் நீங்கி, இறைவரது வழிபாடு செய்து வாழ்ந்திருந்து பின் சிவனடி சேர்ந்தனர்.

55. கோட்புலி:

ஒரு முறை அரசனது ஏவலினால் போர்முனையிற் செல்லவேண்டி, சுவாமிக்குத் திருவமுதின் பொருட்டுத் தான் திரும்பி வரும் வரைக்கும் வேண்டும் நெல்லைக்கட்டி, அதில் எடுத்துச் செலவழியாதிருக்கும்படி தம்முடைய சுற்றத்தார்களெல்லாருக்குந் தனித்தனியே ஆணையிட்டுக் கொண்டு போருக்குப் போயினார். ஆனால் பஞ்சம் வந்த காரணத்தால் உறவினர்கள் அதை எடுத்து செலவழித்தனர். சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களை வாளினாலே வெட்டியவர்.

56. பூசலார்:

பொருள் இல்லாததால் மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு இறைவன் முதலில் பூசலாரின்மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.

57. மங்கையர்க்கரசியார்:

சைவத்தைப் பரப்பிய பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.

58. நேசர்:

சிவனாடியார்களுக்கு உடையும் கோவணமும் அளித்தார்.எப்பொழுதும் சிவனின் நாமத்தை நினைத்தவர்.

59. கோச்செங்கட் சோழர்:

முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின் மன்னராய் நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம்கட்டினார்.

60. திருநீலகண்ட யாழ்ப்பாணர்:

ஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம் சிவனைப் போற்றியவர்

61. சடையனார் நாயனார்:

சமயகுரவராகிய சுந்தரமூர்த்தி நாயனாரையை தமக்கு மகனாகப் பெறும் புண்ணியம் பெற்றார். சிவனடிமை நெறியில் வாழ்ந்து திருவருளுக்குப் பாத்திரமாய் விளங்கியவர் இந்த சடைய நாயனார்.

62. இசைஞானியார்:

அறுபத்துமூன்று நாயன்மார்களில் பெண் மொத்தம் மூவர். அவர்களில் ஒருவரே இசைஞானியார் ஆவார்.தனக்கு பிறக்கும் குழந்தை தர்ம வழியில் வாழ வேண்டும் என்பதற்காக;குழந்தை கருவில் சுமக்கும் போதே சிவமந்திரங்கள் மற்றும் சிவபோற்றிகளை கற்பித்த மிகச் சிறந்த சிவபக்தை.சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.

63. சுந்தரமூர்த்தி நாயனார்:

சிவபிரானுடைய அடியார்களில் ஒருவர் ஆலாலசுந்தரர். இறைவனுக்கு மலர் கொய்தலும் மாலை தொடுத்தணிதலும் திருநீற்றை ஏந்தி நிற்றலுமாகிய தொண்டினை மேற்கொண்டவர். தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர். சிவபெருமான் மேல் இவர் கொண்டிருந்த பக்தி “சக மார்க்கம்” என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக் கொண்டு கயிலை அடைந்தார்.