AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now
வீரமாமுனிவர் வாழ்க்கை வரலாறு | veeramamunivar in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

வீரமாமுனிவர் வாழ்க்கை வரலாறு

முன்னுரை:

இவரது இயற் பெயர் கான்சுடான்சோ பெசுக்கி. இவர்  இத்தாலி  நாட்டிலுள்ள  கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவர்  இத்தாலிய நாட்டு கிறிஸ்துவ மத போதகர் ஆவார்.  கிறித்தவ சமயத் தொண்டுக்காகத் தமிழகம் வந்து, தமிழின் சிறப்பினால் ஈர்க்கப்பட்டு, தமிழ்த் தொண்டராகவும் தமிழறிஞராகவும் மாறிவிட்ட அவரது வாழ்வையும் பணியையும் பற்றிக் காண்போம்.

பெயர்மாற்றம்

மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். தமது பெயரினை “தைரியநாதசாமி”  என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர்  “வடமொழி” என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவிச் செந்தமிழில் “வீரமாமுனிவர்” என மாற்றிக் கொண்டார்.

தோற்றத்தில் மாற்றம்

வீரமாமுனிவர் பெயர் மாற்றம் செய்து கொண்டதோடு, இந்நாட்டில் இருந்த சமயத் தொண்டர்களைப் போலவே, தாமும் நெற்றியில் சந்தனம் பூசி, காதில் முத்துக் கடுக்கன் அணிந்து, காவி அங்கி உடுத்தி, புலித்தோல் பதிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொண்டார். இப்படி, தோற்ற மாற்றம் செய்துகொண்டது மட்டுமல்ல, காய்கறி உணவை மட்டுமே உண்டு, சைவ உணவினராகவும் மாறிவிட்டார். தமிழின் மீது இவருடைய பற்றை என்னென்பது! தோற்றத்தில் மட்டுமின்றி, உணவு முறையிலும் மாறியது மேலும் சிறப்பானது.

தமிழகத்தில் வீரமாமுனிவர்

 1710 ஜூன் மாதம்  கிறித்தவ மதப் பரப்புப் பணி செய்ய கோவா வந்து சேர்ந்தார்.சில நாட்கள் கோவாவில் தங்கியவர், தமிழ்நாடு செல்லத் திட்டமிட்டு, கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக அம்பலக்காடு வந்து தங்கி மதுரையில் காமனாயக்கன் பட்டி வந்து சேர்ந்தார். இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசு கிறிஸ்துவின்  வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப “தேம்பாவணி  என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.

ஆலயப் பணிகள்

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களைக் கட்டியுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் முகாசபரூர் பாளையக்காரரின் உதவிகொண்டு புனித பெரிய நாயகி அன்னைக்கு திருத்தலம் கட்டி எழுப்பியவர் வீரமாமுனிவர். கோனான்குப்பம் புனித பெரியநாயகி அன்னைக்குத் தமிழ் கலாச்சாரப்படி அன்னை மாமரிக்குப் புடவை உடுத்தியபடி மரத்தாலான சுரூபங்களைச் செய்து அன்னையின் பெருமையும் புகழும் உலகறியச் செய்துள்ளார் வீரமாமுனிவர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டத்தில் உள்ள தவளப்பள்ளம் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம், ஆவூர் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம், கடலூர் மாவட்டம் கோனான்குப்பம் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னைக்கு ஆலயம், ஏலாக்குறிச்சி கிராமத்தில் புனித அடைக்கல அன்னை ஆலயம் ஆகியவற்றைக் கட்டி உள்ளார். இவர் கட்டியுள்ள அனைத்து ஆலயங்களும் ஒரே வடிவில் இருக்கிறது. இவர் கட்டி எழுப்பியுள்ள ஆலயத்திற்குல் ஐம்பது பேர் மட்டுமே அமரலாம்.

பன்மொழிப் புலமை

தத்தம் தாய்மொழியிலே புலவர்கள் பல்வேறு இலக்கியங்களைப் படைப்பது பொதுவழக்கு. தமது தாய்மொழி யல்லாத பிறமொழிகளை அறிஞர்கள் கற்று அதில் ஆழ்ந்த புலமை பெறுவதும் உலகில் காணக்கூடியதே. எனினும் ஒருவருக்குத் தம் தாய்மொழியல்லாத பிறமொழியில் இலக்கியம், இலக்கணம், அகராதி முதலிய அனைத்துத் துறைகளிலும் அரிய நூல்கள் பல படைக்கும் அளவுக்கு ஆற்றலும் அரும் புலமையும் அடைவது மிகமிக அரிய செயலாகும். செயற்கரிய அச்செயலைச் செய்து, உலக வரலாற்றிலேயே தனித்து நிற்பவருள் ஒருவராக வீரமாமுனிவர் திகழ்கிறார்.

அகராதி மற்றும் மொழிபெயர்ப்பு நூல்கள்

கான்ஸ்டன்டைன் முதல் தமிழ் அகராதியைத் தொகுத்தார் – ஒரு தமிழ்-லத்தீன் அகராதி. அவர் விரிவான சதுரகராதியையும்  தொகுத்துள்ளார், இது சொற்கள், ஒத்த சொற்கள் மற்றும் ரைம்களின் வகைகளைக் கொண்ட நான்கு மடங்கு அகராதியாகும். தமிழ்-லத்தீன், தமிழ்-போர்த்துகீசியம் மற்றும் தமிழ்-தமிழ் ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டு தமிழ் இலக்கணங்களையும் மூன்று அகராதிகளையும் பெஸ்சி இயற்றினார்.

திருவள்ளுவரின் காவியமான “திருக்குறள்” லத்தீன் மொழியில் மொழிபெயர்த்து விளக்கினார். இந்த லத்தீன் படைப்பு ஐரோப்பிய அறிவுஜீவிகளின் கண்களைத் திறந்து, தமிழ் இலக்கியத்தில் உண்மையையும் அழகையும் கண்டறிய உதவியது. தேவாரம் , திருப்புகழ், நன்னூல், மற்றும் ஆத்திசூடி போன்ற பல முக்கியமான தமிழ் இலக்கியப் படைப்புகளை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்துள்ளார்.

இலக்கியத் தமிழ் இலக்கணப் படைப்பை இயற்றுவதைத் தவிர, அவர் தமிழின் பொதுவான பயன்பாட்டிற்கான இலக்கணத்தையும் எழுதினார் (உரை நடை இல்லக்கியம்), இது சில சமயங்களில் அவரை ‘தமிழ் உரைநடையின் தந்தை’ என்று குறிப்பிடுவதற்கு வழிவகுத்தது.

முன்னதாக தமிழ் எழுத்துக்கள் மெய் எழுத்துக்களுக்கு புள்ளி இல்லாமல் எழுதப்பட்டன, மேலும் நீண்ட உயிரெழுத்துக்களைக் குறிக்க ர என்ற குறியீடு பயன்படுத்தப்பட்டது. தமிழ் மெய் எழுத்துக்களில் (க், ங், ச், … ) புள்ளியிட்டு நீண்ட உயிரெழுத்துக்களை அர என்பதற்குப் பதிலாக ஆ, கர என்பதற்குப் பதிலாக கா, போன்றவற்றை எழுதும் முறையை அறிமுகப்படுத்தியவர் வீரமாமுனிவர்.

இயற்றிய நூல்கள் ;

இத்தாலி நாட்டில் பிறந்து, தமது முப்பதாம் வயதிலேயே தமிழகம் வந்த அவர், தமிழில் சிற்றிலக்கியங்கள், இலக்கணம், உரைநடை, அகராதி, இசைப்பாடல்கள் முதலிய பல துறைகளில் நூல்கள் படைத்தார். அதோடு மட்டுமல்லாமல் இலக்கியப் படைப்புகளுள் மிக அரியதாகக் கருதப்படும் தேம்பாவணி எனப்படும் காப்பியம் ஒன்றையும் இயற்றி வெற்றி கண்டுள்ளார்.  மேலும் அவர், திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரியம்மாள் அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களையும், சதுரகராதி எனப்படும் அகராதியையும், தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலையும் எழுதியுள்ளார். இவற்றுள் தொன்னூல் விளக்கம், குட்டித் தொல்காப்பியம் என அழைக்கப்படும் பெருமையுடையது. இப்படிப் பல்வேறு வகையான நூல்களைப் படைத்த ஒரு புலவரைக் காண்பது, தமிழில் மட்டுமன்று; உலகின் பிற மொழிகளிலும் கூட மிக அரிய ஒன்றாகும்.

சமயப் பணி

இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குருக்கள்பட்டி மற்றும் ஏலாக்குறிச்சி, கோனான்குப்பம் முதலிய பல இடங்களில் சமயத் தொண்டு புரிந்தார். தாம் சமயப்பணி புரிந்த இடங்களிலேயே, பல்வேறு தமிழ் இலக்கிய இலக்கண நூல்களையும் அகராதிகளையும் எழுதி வெளியிட்டார்.

தமிழ்நாட்டுக்கு வந்து தமிழராகவே வாழ்ந்தார் வீரமாமுனிவர்.உலகில் வாழ்ந்த சமய மற்றும் மொழித்தொண்டர்கள் வரிசையிலே இவ்வாறு தமக்கென ஓர் அழியாத, தனித்துவமான இடத்தைத் தேடிக் கொண்டார் பெஸ்கி எனப்பட்ட வீரமாமுனிவர்.

வீரமாமுனிவரின் இறப்பு :

1742இல் மதுரைப் பணித்தளம் விட்டுச்சென்ற வீரமாமுனிவர், கடற்கரையில் 1745 வரை பணிபுரிந்தபின், 1746-47 ஆண்டுகளைக் கேரள நாட்டிலுள்ள அம்பலக்காட்டில் அமைந்த குருமடத்தில் செலவழித்து, 1747ஆம் ஆண்டு பிப்ரவரி நான்காம் நாளில் தமது 67ஆம் வயதில் உயிர்துறந்தார். திப்பு சுல்தான் காலத்தில் நடந்த வேதகலாபனையில் பல கிறித்துவ நிறுவனங்கள் இடம் தெரியாமல் அழிந்து போயின. வீரமாமுனிவரது கல்லறைக்கும் அந்தக் கதி நேர்ந்திருக்கிறது. தமிழுக்கு இவ்வளவு தொண்டு செய்த பெரியார், தமிழ் நாட்டை விட்டுக் கேரள நாடு சென்று செத்ததும், அங்கு அவரை அடக்கம் செய்த கல்லறையும் தெரியாத நிலையில் இருப்பதும், தமிழ் மக்களுக்கு வருத்தமளிக்கும் செய்திகள். சிலர் இவர் மணப்பாட்டில் இறந்தார் என்றும், வேறு சிலர் மணப்பாறையில் உயிர் துறந்தார் என்றும் கூறுவது வரலாற்றுச் சான்றுக்குப் புறம்பானது. 1746-47 ஆண்டுகளில் கேரள நாட்டு அம்பலக்காட்டில் முனிவர் வாழ்ந்தார் என்பதையும், அங்கே மரித்தார் என்பதையும் அக்கால அதிகாரபூர்வமான அறிக்கையின் வாயிலாக உறுதியாக அறியலாம்.

அங்கீகாரம்:

1968 ஆம் ஆண்டில், தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்கான அங்கீகாரமாக, சென்னை நகரின் மெரினா கடற்கரையில், பெஸ்சிக்கு தமிழ்நாடு அரசு ஒரு சிலையை அமைத்தது.

பெஸ்கியின் 300வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், 1980 ஆம் ஆண்டில் அவரது சொந்த இடமான காஸ்டிக்லியோன் டெல்லே ஸ்டிவியேரில் ஒரு சிலை நிறுவப்பட்டது. அதில், தமிழ் மொழியின் டான்டே என்று பெச்சி அழைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

1981 ஜனவரியில் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழர் பேரவை சென்னை மாநகரில் அவரது சிலையை நிறுவியது.