நவ என்றால் ஒன்பது ராத்திரி என்பது இரவைக் குறிக்கும். இந்த ஒன்பது ராத்திரிகளும் அம்மனுக்கு மிகவும் உகந்த நாட்கள் மற்றும் இரவு ஆகும். இந்த விழாவை பல குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக வீட்டில் கொலு வைத்து கொண்டாடி வருவது வழக்கமாக இருக்கும். ஒரு சிலர் புதிதாக கொண்டாட நினைக்கலாம். அதிலும் குறிப்பாக திருமணமான புதுமணத் தம்பதிகள் மனதில் அந்த ஆசை எழும். நவராத்திரி வழிபாட்டினை வீட்டில் புதிதாக துவங்க வேண்டும் என நினைப்பவர்கள் எவ்வாறு துவங்க வேண்டும், கொலு எந்த முறையில் அமைக்க வேண்டும் எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
நவராத்திரிக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஸ்ரீராமநவமி, விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி, மஹாசிவராத்திரி என்று வருகின்ற விசேஷ நாட்களில் அந்தந்த நாளுக்குரிய தெய்வங்களை மட்டும் பூஜை செய்கிறோம். ஆனால் இந்த நவராத்திரி நாட்களில் மட்டும் எல்லா கடவுளர்களின் திருவுருவங்களையும் பதுமைகளாக படிகளில் வைத்து பூஜை செய்கிறோம். மகிஷாசூரனை அழிக்க வேண்டி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள், முப்பெருந்தேவியர், விநாயகர், சுப்ரமணியர், நவகிரஹங்கள், ஏனைய தேவர்கள் மற்றும் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகள் என அனைவரின் அம்சங்களிலிருந்தும் தோன்றிய ஒளிச்சக்தியானது ஒன்றிணைந்து அகில உலகத்தையும் காக்கும் தாயாக அம்பிகை உருவானாள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக புல், பூண்டு தாவரங்கள், நீரில் வாழ்பவை, ஊர்வன, பறப்பன, நிலவாழ் மிருகங்கள், மனிதர்கள், தேவர்கள், கடவுளர்கள் என வரிசையாக படிக்கட்டுகளில் பதுமைகளை வைத்து மத்தியில் நடுநாயகமாய் அம்பிகையின் பொம்மையையும் வைத்து வழிபடுகிறோம்.
கொலு வைக்கும் போது 5,7,9 என்ற கணக்கில் படி அமைக்கின்றனர். ஒன்பது படிகள் வைப்பது பொருத்தமானதாக இருக்கும். கொலு மேடை படிகளை கிழக்கு அல்லது மேற்கு திசையில் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும்.
* முதல் படியில் செடி, கொடி, காய், கனி பொம்மைகளை வைக்க வேண்டும். மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
* இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம். எதையும் நிதானமாகச் செய்து உயர் இடத்தை பிடிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.
* மூன்றாம் படியில் பூச்சி வகை பொம்மைகள், கரையான் புற்று, சிலந்தி வலை, களிமண்ணில் செய்த எறும்பு, வண்ணத்துப்பூச்சி (காதிகிராப்ட் கடைகளில் மரத்தால் செய்தது கிடைக்கிறது) பொம்மைகளை வைக்க வேண்டும். எறும்பு போல் சுறுசுறுப்பு, கரையான் புற்றையும், சிலந்தி வலையையும் கலைத்தாலும் திரும்பத் திரும்பக் கட்டும் திடமனப்பான்மையை அம்பாளிடம் வேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும்.
* நான்காம் படியில் நண்டு,வண்டு, தேனீ பொம்மைகள் இடம்பெற வேண்டும். ஆழமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதை இது குறிக்கும்.
* ஐந்தாம் படியில் மிருகங்கள், பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட்டு, பறவைகள் போல் கூடி வாழ வேண்டும் என்பது இதன் பொருள்.
* ஆறாம் படியில் மனித பொம்மைகள் வைக்க வேண்டும். முதல் ஐந்து படிகளில் வைக்கப்பட்ட பொம்மைகளுக்கு கூறப்பட்ட குணநலன்களைக் கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம்.
* ஏழாம் படியில் மகான்கள், முனிவர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும். மனித நிலையில் இருந்து தெய்வீக நிலைக்கு உயர பக்தி அவசியம் என்பதை இது உணர்த்துகிறது. விவேகானந்தர், ராமகிருஷ்ணர், ராகவேந்திரர் பொம்மை கடைகளில் கிடைக்கிறது . வியாசர் போன்ற முனிவர்களின் படங்களைப் பார்த்து பொம்மை செய்யலாம். கிடைக்காத பொம்மைகளுக்கு பதிலாக சுவாமி சிலைகள் வைக்கலாம்.
* எட்டாம் படியில் நாயன்மார்கள் (அப்பர், சம்பந்தர், சுந்தரர்), ஆழ்வார்கள் (ஆண்டாள்,பெரியாழ்வார்), சூரியன், நாகர் போன்ற தேவர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகானாக உயர்ந்தவர் தவம், யாகம் முதலான உயர்நிலை பக்தியைக் கடைபிடித்து தேவர் அந்தஸ்துக்கு உயர வேண்டுமென்பதை இது காட்டுகிறது.
* ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்கும் வகையிலான சிலைகளை வைத்து, நடுவில் ஆதிபராசக்தி சிலையை சற்று பெரிய அளவில் வைக்க வேண்டும். தேவநிலைக்கு சென்ற உயிர்கள் தெய்வநிலையை அடைய வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
இந்த காலத்தில் துர்க்கையின் ஒன்பது விதமான வடிவங்களாகவும், துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என்ற முப்பெரும் தேவியர்களாகவும் வழிபடுவது வழக்கம். இந்த விழாவானது மகாளய அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் ஆரம்பித்து தசமி வரை பத்து நாட்கள் நீடிக்கும்.இந்த விழாவின் போது ஒரு சிலர் துர்கையின் 9 வடிவங்களை 9 நாட்கள் கொண்டாடி மகிழ்வார்கள். ஒரு சிலர் முதல் மூன்று நாட்கள் துர்கை, அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி வழிபாடு மற்றும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை வழிபட்டு பத்தாம் நாள் விஜயதசமியாகக் கொண்டாடுவார்கள்.
இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 03ம் தேதி வியாழக்கிழமை துவங்குகிறது. அக்டோபர் 11ம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையும், அக்டோபர் 12ம் தேதி விஜயதசமி அல்லது தசரா பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே அக்டோபர் 02ம் தேதி மகாளய அமாவாசை நாளிலேயே கொலு பொம்மைகளை அடுக்கி வைக்க வேண்டும். கலசம் வைத்து வழிபடுபவர்கள் அன்று இரவே கலசத்தை தயார் செய்து வைத்து விட வேண்டும். மறுநாள் பிரதமை அன்று பூஜைகளை ஆரம்பிக்க வேண்டும். இந்த வருடம் அக்டோபர் 03ம் தேதி தான் நவராத்திரியின் முதல் நாள் வழிபாட்டினை துவக்க வேண்டும்.
இந்த ஒன்பது நாட்களும் அம்பிகையை காலை மாலை என இரு வேளையும் வழிபட வேண்டும். முப்பெரும் தேவியர்களை நாம் வழிபட வேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்கை வழிபாடும் அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மி வழிபாடும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபட வேண்டும். பெண் சக்தியை போற்றும் உன்னத பண்டிகையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்களும் அம்பிகையை இச்சா சக்தி, கிரியா சக்தி மற்றும் ஞான சக்தி ரூபங்களாக வழிபட்டு, நிறைவாக பத்தாவது நாளில் அம்பிகையின் வெற்றி திருநாளாக விஜயதசமி திருநாளையும் கொண்டாட வேண்டும். தினமும் கொலுப் படி முன் கோலமிட்டு விளக்கேற்ற வேண்டும். மஞ்சள் குங்குமம், வஸ்திரம் மற்றும் பூ சாற்ற வேண்டும். முடிந்தால் ஒவ்வொரு நாள் அம்பிகைக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யலாம். ஒவ்வொரு நாளும் அம்பிகைக்கு உரிய ஒவ்வொரு நைவேத்தியத்தை படைக்க வேண்டும். மாலையில் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வீட்டில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் போன்ற தாம்பூலம் பொருட்கள் வாங்கி வைத்து, வீட்டிற்கு வருகிறவர்களுக்கு கொடுப்பது சிறப்பானதாகும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025