இந்த கோவில் மதுரையிலிருந்து சுமார் 7 கி.மீ. தூரத்தில் சிவகங்கை செல்லும் ரோட்டின் வடபுறம் ரிங்ரோட்டில் இருக்கிறது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனே மறுபிறவி எடுத்து வந்து ஈசனை வழிபட்டு இறைவனாக ஆனதாக புராண வரலாறு மூலம் அறிய முடிகிறது. சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த இயற்கை சூழலில் இந்த இடம் அமைந்துள்ளது. மன்னர் அரண்மனை பகுதியும் இப்பகுதியில் இருந்ததென்றே தொல்லியல் கூற்றுகளும் இருக்கிறது. அதனாலேயே இந்த பாண்டீஸ்வரரை ‘பழமதுரை பாண்டீஸ்வரர்’ என்றழைக்கின்றன
இக்கோயிலைச் சுற்றிய, வயல்வெளி வரப்புகளில் பெரிய, பெரிய செங்கற்களைக் கொண்ட கோட்டைச் சுவர்கள், மதில்கள் இன்றும் இருக்கின்றன.இவர் உலகின் பிற காவல் தெய்வங்களைப் போல் அல்லாமல், பத்மாசனமிட்டு யோக நிலையில் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார்.
இந்த ஆலயம் சுமார் இருநூறு ஆண்டுகள் பழமையானது. வள்ளியம்மாள்-பெரியசாமி தம்பதியினர் முத்தரையர் வம்சத்தை சார்ந்தவர்கள். இவர்கள் கரூரில் வாழ்ந்து வந்தார்கள். இருநூறு ஆண்டுகளுக்கு முன் இவர்கள் கரூரில் இருந்து மதுரைக்கு தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொள்ள பயணம் மேற்கொண்டனர். அவ்வாறு பயணம் செய்த போது இருண்டு விட்டதால் வழியில் தற்போதுள்ள மாட்டுத் தாவணிக்கு அருகே உள்ள மேலமடையில் தங்க முடிவெடுத்து அங்கேயே உறங்கினார்கள். அப்பொழுது இரவில் வள்ளியம்மாள் கனவில் முனிவர் ஒருவர் தோன்றினார். அவர் தன்னை, தான் மதுரையை ஆண்ட பாண்டிய நெடுஞ்செழியன் எனவும் கண்ணகியின் கணவன் கோவலனுக்கு அநீதி இழைத்த பாவச் செயலுக்கு நிவர்த்தி செய்யும் வகையில் மறுபிறவி எடுத்து இந்த இடத்தில் ஈசனை நோக்கி எட்டடி மண்ணுக்குள் தியானம் செய்வதாகவும் தன்னை மீட்டெடுத்து வழிபட்டால் உங்கள் வம்சத்தை வாழ வைப்பதாகவும் கூறியுள்ளார். அந்த அம்மையாரும் தனது கனவைப் பற்றி கணவனிடம் கூற இருவரும் சேர்ந்து எட்டடி மண்ணுக்குள் புதையுண்ட சிலையை வெளியே எடுத்தனர். அதன்பின், பாண்டி முனீசுவரராக வழிபடத்தொடங்கி இங்கேயே ஒரு கோயிலையும் எழுப்பினர். வள்ளியம்மாளின் சமூகமே இக்கோயிலை இன்று வரை பூசை செய்தும், பராமரித்தும் வருகின்றனர்.
இக்கோயிலின் உபதெய்வமாக சமய கருப்பசாமியை வழிபடுகின்றனர். ஒரு சமயம் ஆங்கிலேயர் ஒருவர் வேட்டைக்கு செல்ல முற்பட்டார். அவ்வாறு செல்லும் போது இந்தக் கோவிலுக்கு வந்தார். சமய கருப்பசாமியிடம் தான் அன்றைய தினம் வேட்டையாடும் மிருகங்களின் எண்ணிக்கையைப் பற்றி குறி கேட்டுள்ளார். ஆனால் கருப்ப சாமி எந்த பதிலும் உத்தரவும் தரவில்லை. அதற்கேற்றார் போல அன்றைய தினம் அவரால் வேட்டையாட இயலவில்லை. அதே கோபத்தில், சாமியின் கரம் மற்றும் சிரத்தை துண்டித்தார். பின்னர் தனது இருப்பிடத்திற்குச் சென்று கொண்டிருந்த அந்த ஆங்கிலேயர், கிராம எல்லையைத் தாண்டும் முன்பே அவரும் அவரது குதிரையும் கல்லாயினர். இதன் காரணமாகவே சமய கருப்பசாமி இன்று வரை கரம் மற்றும் சிரமின்றி காணப்படுகின்றார்.
இக்கோயிலில், பாண்டி முனீசுவரர் மூல கடவுளாக வழிபடப்படுகிறார். மேலும் விநாயகர், சமய கருப்பசாமி, ஆண்டிச்சாமி, சுப்பிரமணியர் ஆகியோர் உப கடவுளர்களாக அமைந்துள்ளனர்.
கோயிலுக்கு வருபவர்கள், முதலில் விநாயகரை வழிபட்டு பின்னர் பாண்டி முனீசுவரரை வழிபடுகின்றனர்.மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் பாண்டி முனீஸ்வரரை தேடிவந்து தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அவருக்கு வெண்ணாடை சார்த்தி, பால், மணமிகு தைலம், சந்தனம், சவ்வாது, சர்க்கரையில்லா பொங்கல், பழங்கள் மற்றும் தேங்காய் போன்றவைகளைக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். மேலும் இங்குள்ள சமய கருப்பசாமிக்கு, ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டும் சாராயம், சுருட்டு போன்றவைகளை படைத்தும் வழிபடுகின்றனர்.
இக்கோயிலில் ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து சமபந்தி விருந்தாக உணவுண்ணும் ‘ஒற்றுமைத் திருவிழா’ நடப்பதும், இக்கோயிலின் மிக உன்னத நிகழ்வாக இருக்கிறது. இங்கு நடக்கும் கூட்டு வழிபாடும் சிறப்பாகும். தென் மாவட்டத்தினர் மட்டுமல்லாது, தமிழகம் கடந்தும் வெளிமாநிலத்தவர், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பாண்டி முனீஸ்வரர் கோயிலுக்கு வந்தவண்ணம் உள்ளனர். ‘கிடாய்’ வெட்டி, ‘பொங்கல் வைத்து’ வழிபாடு செய்வதே இந்தக் கோவிலின் சிறப்பம்சம் ஆகும்.
மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து இராமேசுவரம், சிவகங்கை, மானாமதுரை, தூத்துக்குட, திருநெல்வேலி, இராஜபாளையம் நோக்கி செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார், புறநகர் பேருந்துகளும் பாண்டி கோவில் வழியாக செல்வதால் கோவில் வாசலில் நிற்கும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025