Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
கம்பர் வணங்கிய காளி அன்னை கோவில்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கம்பர் வணங்கிய காளி அன்னை கோவில்

Posted DateMarch 15, 2024

கம்பர் தமிழ்க்கவிஞர். அவரது புலமை உலகம் அறிந்த விஷயம். கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்ற சொலவடையில் இருந்தே நாம் கம்பரின் கவித்திறமை பற்றி அறிந்து கொள்ளலாம். இவர் இயற்றித் தலைப்பிட்ட நூலுக்கு ‘இராமாவதாரம்’ என்று பெயரிட்டார். பிற்காலத்தில் அது கம்பராமாயணம் என அழைக்கப்பட்டது.  கம்பராமாயணத்தினை படித்த பலரும் கம்பரின் கவித்திறனைப் பாராட்டியுள்ளார்கள். கம்ப ராமாயணத்தில் அவர் கையாண்ட சொற்கள் மிகவும் நயமானது. படிப்போரை  வியக்க வைக்கிறது. கம்பருக்கு “கல்வியிற் பெரியோன் கம்பன்”, “கவிச்சக்ரவர்த்தி” போன்ற பட்டங்களை சூட்டியுள்ளனர். கம்பர் பிறந்த ஊர் திருவழுந்தூர்.

கம்பர் இராமாயணம் எழுத மூல காரணமாக இருந்தவர் சடையப்ப வள்ளல் அவர்கள். ராமாயணம் படைக்க உதவி செய்து கடை ஏழு வள்ளல்களுக்கு இணையாக வாழ்ந்தவர் சடையப்ப வள்ளல் அவர்கள்.

காங்கேயனிடம் பல நாள்கள் பட்டினியால் வாடிய முகத்துடன் வயிற்றுப் பிழைப்பிற்காக வேலை கேட்டு வந்த, கம்பரையும் அவரது தாயாரையும் தெரு வாயிற்படியில் கண்ட சடையப்பர், உள்ளே அழைத்து உபசரித்து தன்னுடைய மாளிகையிலேயே தங்க வைத்துக் கொண்டார்.சடையப்ப வள்ளல் தினமும் அதிகாலையில் எழுந்து தனது வயல்வெளிகளைச் சுற்றிப் பார்ப்பது வழக்கம். அதேபோல் காலையில் வீட்டிலிருந்து கிளம்பியதும், ஊருக்கு மேற்கில் அமைந்துள்ள ஏரியில் குளித்துவிட்டு, ஏரியின் வடமேற்கில் குடியிருக்கும் காளிகாம்பாளை மனம் உருக வேண்டி உலக மக்கள் அனைவரும் பசியின்றியும், பிணியின்றியும் வாழ பிரார்த்தனை செய்ததாக கூறப்படுகிறது.

கம்பரின் எழுத்தாற்றலுக்கு பேருதவியாக இருந்தது இந்த காளி அன்னை தான். இவள் அளித்தஞானம் தான் கம்பன் காவியம் எழுதக் காரணமாக இருந்தது.  இந்தக் காளியின் முன்னிலையில் கம்பர் வால்மீகி ராமாயணத்தை மொழி பெயர்க்க வேண்டும் என்று சடையப்பர் விருப்பம் தெரிவிக்க கம்பரும் ஒப்புக் கொண்டார். இந்த இடத்தில் தான் இராமகாதையின் திறப்பு விழா நடந்தது.

கம்பர் வழிபாடு செய்த கோவில் இன்று திருவெண்ணெய் நல்லூர் சின்ன சேவலை கிராம பகுதியில் வயல் காட்டின் நடுவே அமைந்துள்ளது. முதலில் இந்தக் கோவில் இயற்கை எழில் சூழ்ந்த வயல் வெளியில் இருந்தது. தற்போது சிலர் இந்த அன்னைக்கு  கோவில் எழுப்பி உள்ளனர். காளியின் இருபுறத்திலும் முறையே பிள்ளையார் முருகர் கற்சிலைகள் உள்ளன.

இந்தக் கோவில் திருவெண்ணெய் நல்லூர் கிராம எல்லையின் வயல் வெளியில் நடுவில் சரியான பாதைகள் ஏதும் இன்றி அமைந்துள்ளது. விநாயகர்,  முருகன் மற்றும் நாகபுற்று உள்ளன. நடுவில் காளி திறந்த வெளியில் மேடை மீது கிழக்கு முகமாக காட்சி தருகிறாள். அன்னை காளி நான்கு அடி உயரத்தில் எட்டு கரங்களுடன் காட்சி அளிக்கிறாள்.  

இக்கோயிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற தினங்களில் சிறப்பாக இருக்கும் என்றும், அன்றைய தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் .

கம்பர் வழிபட்ட காளி கோயில் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலாக இக்கோயில் கருதப்படுகிறது.

இக்கோயிலில் பக்தர்கள் வேண்டிய வேண்டுதல்கள் நிச்சயமாக நடைபெறும் எனவும், ஒன்பது நாட்கள் தொடர்ந்து விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் நினைத்தது நிச்சயமாக நிறைவேறும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இத்தகைய சிறப்புமிக்க கோயிலை பாதுகாக்க வேண்டியது நமது கடமை ஆகும்.