Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
அபூர்வ கோலத்தில் முருகன் காட்சி தரும் கோவில்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

அபூர்வ கோலத்தில் முருகன் காட்சி தரும் கோவில்கள் :

Posted DateNovember 15, 2024

குமரன் ஒரு கையில் வில்லுடனும் மறு கையில் வேலுடனும் காட்சி தரும் இடம் திருவிடைக்கழி. மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலை தடத்தில் இருக்கிறது. இங்குள்ள முருகப்பெருமானுக்கு மயிலுக்குப் பதிலாக யானை வாகனமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சனி ஸ்தலமான திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் முருகப் பெருமான் கையில் மாம்பழத்துடன் காட்சி தருகிறார்.

ஸ்ரீ முருகப்பெருமான் இரண்டு முகங்களுடனும் எட்டு கரங்களுடனும் சென்னிமலையில் காட்சி தருகிறார். இந்த சந்நதிக்கு எதிரில் காகங்கள் பறப்பதில்லை.

முருகன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க, நஞ்சன் கூடு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கிறார். இந்த கோவில் கர்நாடகா மாநிலத்தில் உள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் விளத்தொட்டி பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் பாலமுருகனாக தொட்டிலில் தவழ்ந்து உறங்கும் கோலத்தில் காட்சி தருகிறார்.

கும்பகோணத்தில் உள்ள “வியாழ சோமேஸ்வரர்” ஆலயத்தில் ஸ்ரீ முருகப் பெருமான் காலில் பாதரட்சை அணிந்தபடி காட்சி அளிக்கிறார்.



திருவையாறு ஐயாரப்பன் சன்னதி பின்புறம் கையில் வில் அம்போடு முருகன் அருள்பாலிக்கிறார்


திருப்போரூரில் முருகப் பெருமான், இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை மயில் மீது வைத்து இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் ஏந்தியபடி போருக்கு தயாராவதை போல காட்சி தரும் முத்துக்குமார சுவாமி .

நாகப்பட்டினம் திருவிடைச்சுழியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் முருகன் தவக்கோலத்தில் காட்சி தருகிறார். முருகனுக்கும், தெய்வானைக்கும் நிச்சயதார்த்தம் நடந்த தலமாக இது கருதப்படுகிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் பொரவாச்சேரி கந்தசாமி கோவிலில் உள்ள மூலவர் கந்தசாமி சிலை ஒரே கல்லால் செதுக்கப்பட்டதாகும். மயில் மீது அமர்ந்த நிலையில் இருக்கும் முருகனின் திருமேனி, மயில், திருவாசி உட்பட மொத்த எடையையும் மயிலின் கால்கள் தாங்கி நிற்பது அதிசயமான காட்சியாகும்.

மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள நெய்குப்பை என்ற ஊரில் அம்மன் கையில் கைக்குழந்தையாக அமர்ந்தபடி காட்சி தருகிறார் பாலமுருகன்.

திருநனிப்பள்ளி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் உள்ள ஆலயங்களில் முருகப் பெருமான் மூன்று கண்களுடனும் எட்டு கரங்களுடனும் காட்சி தந்து அருள்புரிகிறார்.

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியில் முருகன் வேடன் வடிவில் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். இந்த முருகனின் சிலையில் வியர்வை துளிர்ப்பது அதிசய நிகழ்வாகும்.

கனககிரி எனும் இடத்தில் உள்ள முருகன் சந்நதியில் கந்த பெருமான் கரத்தில் கிளியை ஏந்தியபடி காட்சி தருகிறார்.

செம்பனார்கோவில் முருகப் பெருமான் ஜடாமகுடம் தாங்கி, இரண்டு கைகளிலும் அக்கமாலையுடன், தவக்கோலத்தில் காட்சி தருவது தனிச்சிறப்பாகும்.

தனது மாமன் திருமாலைப்போல் திருமுருகப் பெருமான் கரங்களில் சங்கு சக்கரம் ஏந்த காட்சி தரும் ஆலயம் கும்பகோணம் அருகில் அழகாபுத்தூர் என்ற இடத்தில் உள்ளது.

முருகப் பெருமான் பாம்பு வடிவில் காட்சியளிக்கும் கோவில் “காட்டி சுப்ரமணியா” எனும் குக்கே சுப்ரமண்யா தலம். இது கர்நாடகா மாநிலத்தில் உள்ளது. இப்பகுதியில் பாம்புகள் யாரையும் கடிப்பதில்லை. அதுபோல் பாம்பைக் காணும் யாரும் அதைத் துன்புறுத்துவதில்லை.

பூம்புகார் அருகே மேலையூரில் திருச்சாய்க்காடு (இலுப்பை வனம்) சாயாவனேஸ்வர்ர் கோவிலில் முருகன் வில் அம்பு ஏந்திய பஞ்சலோக சிலை வடிவில் உள்ளார்.

ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் ஜலகாம்பாறை என்னும் இடத்திலுள்ள முருகன் கோவிலில் விக்ரஹம் கிடையாது. ஏழு அடிவேல் வடிவில் வேலவனாக காட்சி தருகிறார் .

மகாபலிபுரம் அருகே வளவன் தாங்கல் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள முருகன் தண்டாயுதபாணியாய் காட்சி தருகிறார். அவர் கண்களிலிருந்து நீர் வருவது வியப்பளிக்கிறது.

புதுக்கோட்டைக்கு அருகே ஒற்றைக் கண்ணனூரில் , ஒரு கையில் ஜப மாலையுடனும், மறு கையில் சின் முத்திரையுடனும் காட்சி தருகிறார் முருகன்.

ஈரோடு மாவட்டம் காங்கேயம் பாளையம் நட்டாற்றீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களை நோக்கி அடியெடுத்து வைப்பதைப் போல முருகன் காட்சி தருகிறார்.

சிவகங்கை மாவட்டம் திருமலையில் அமைந்துள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில் முருகப் பெருமான் சற்று சாய்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு இடப்புறம் ஆடும், வலப்புறம் மயிலும் எதிரெதிரே இருக்கும் வகையில் காட்சி தருகிறார்.

திருவண்ணாமலை – வேலூர் சாலையில் உள்ள வில்வாரணி நட்சத்திர கிரி மலையில் சுயம்பு வடிவ லிங்க திருமேனியாக, நாகாபரணத்துடன் காட்சி தருகிறார். முருகனும், சிவனும் ஒரே வடிவமாக இங்கு தரிசிக்க முடியும்.

பெரம்பலூர் அருகில் செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவிலில் முருகன் கரும்போடு காட்சி தருகிறார்.