Ashta Aishwarya Program- Join our 9-Month Program to Manifest Eight Types of Wealth in Life Join Now
கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி  

Posted DateDecember 1, 2023

பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர். தன்னை அண்டி வரும் பக்தர்களின் பாவங்களை நீக்குபவர். எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார். இவரை வைரவர் என்றும் கூறுவார்கள். நீல நிற மேனியுடன், காலில் சிலம்பும், அரைநாண் கயிறாக பாம்பையும், சூலம், மழு, பாசம் உடுக்கையும் ஏந்தியவராக நாயை வாகனமாகக் கொண்டு காட்சி தருபவர்.  பைரவர் காவல் தெய்வம். அதனால் தான் அவர் காவல் காக்கும் நாயை தனது வாகனமாக வைத்துள்ளார் என்பது ஐதீகம். 

மாதந்தோறும் வரும் அஷ்டமி பைரவருக்கு விசேஷம் தான். ஆனாலும் கார்த்திகை மாத அஷ்டமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி. இதை மகாதேவாஷ்டமி என்பார்கள். 

கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி  திதியன்று பைரவர் அவதரித்தார் என்று புராணங்கள் வாயிலாக அறிய முடிகிறது.  கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி  திதி சிவபெருமானின் அவதாரங்களில் ஒருவரான ஸ்ரீ பைரவர்  ஜெயந்தியாக கொண்டாடப்படுகின்றது. இதன் காரணமாக தான் கால பைரவரை வழிபட ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி மிக உகந்த நாளாக பார்க்கப்படுகின்றது.

மகா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது. மேலும் சுவர்ண பைரவர் போன்ற சிறப்பு பைரவ தோற்றங்களும் காணப்படுகின்றன.

பைரவரின் உடம்பில் நவக்கிரகங்களும், அனைத்து ராசிகளும் அடங்கியுள்ளன. எனவே அவரை வணங்குவதன் மூலம் கிரக தோஷங்கள் நீங்குகின்றன. குறிப்பாக அவரை வணங்குவதன் மூலம் சனி தோஷம் மற்றும் சனியால் ஏற்படும் பாதக விளைவுகள் நீங்குகின்றன. ஏனெனில் அவர் சனி பகவானின் குருவாக விளங்குகிறார்.

தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு பூஜைகள், யாகங்களில் கலந்து கொள்வது என்பது சகல வித செல்வங்களையும் அள்ளித்தரும். அதிலும் குறிப்பாக கார்த்திகை மாதம். இன்றைய தினம் பைரவருக்கு வில்வம் அல்லது செவ்வரளி மாலை அணிவித்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். தேங்காயில் மூன்று கண்கள் இருக்கும் தேங்காய் மூடியில் ஐந்து எண்ணெய் ஊற்றி விளக்கிடுவதும் விசேஷம். நெய் தீபமும், மிளகுத் திரி தீபமும் பக்தர்கள் பைரவருக்கு ஏற்றி வணங்கலாம். மிளகு வடை நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். செந்நிற  மலர்கள், அரளி மாலை கொண்டு பைரவருக்கு அணிவித்து பிரார்த்தனை செய்தால் வேண்டியது நிறைவேறும். வெண் பொங்கல் நைவேத்தியம் வழங்கி, பைரவ வழிபாடு செய்தால், கடன்  தொல்லையில் இருந்து விடுபடலாம். எதிர்ப்புகள் அகலும். தீய சக்திகள் அண்டாது.

ஜென்ம அஷ்டமி நாளில் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது. கடன் பிரச்சினை தீர இவரை சரணடையலாம். இந்த விசேஷமான நாளில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபடுவதால் நினைத்த காரியம் வெற்றி பெரும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளிப்புஷ்பத்தால் பூஜித்து வந்தால் நல்ல குழந்தைச் செல்வம் கிடைக்கும். பைரவரை வழிபட்டால் தொழிலில் லாபம், பதவி உயர்வு மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றமும் கிடைக்கும்.

நவகிரங்களும் பைரவரும்:

சூரியன்- சுவர்ணாகர்ஷன பைரவர்

சந்திரன் – கபால பைரவர்

செவ்வாய் – சண்ட பைரவர்

புதன் – உன்மத்த  பைரவர் 

குரு – அசிதாங்க பைரவர்

சுக்கிரன் – ருரு பைரவர்

சனி – குரோதன பைரவர்

ராகு – சம்ஹார பைரவர்

கேது –  பீஷன பைரவர்

ஒருவரின் ஜாதகத்தில் எந்த கிரகம் பலவீனமாக உள்ளதோ அதற்குரிய பைரவரை வணங்குவதன் மூலம் அந்த கிரகத்தின் பாதக விளைவுகள் குறையும். வாழ்க்கையில் இன்பமும் மனதில் நிம்மதியும் பெருகும்.