நாம் எந்தவொரு காரியத்தை செய்தாலும் தடை வராமல் இருக்க இறைவனை வழிபடுகிறோம். ஆனால் அந்த இறை வழிபாட்டிலேயே நாம் சில சமயங்களில் தடைகளை சந்திக்க நேருகிறது. நாம் பூஜை செய்ய உட்காரும் போது நமது மனதில் சஞ்சலம் வருகிறது. மனது ஒரு நிலைப்படாது அலைகிறது. மந்திரங்களை ஜெபிக்கும் போது கொட்டாவி வருகிறது என இப்படிப்பட்ட பல தடைகளை நாம் சந்திக்க நேருகிறது. இதற்கு காரணம் என்ன? இதனை எப்படி தடுப்பது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம் வாருங்கள்.
பொதுவாக ஒரு காரியத்தை உற்சாகத்துடனும் ஈடுபாட்டுடனும் செய்யும் போது அதை நம்மால் சரியாக செய்ய முடியும். எனவே ஒரு காரியம் சரியாக செய்வதற்கு நமது மனதை நாம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மனதில் வைராக்கியம் இருந்தால் நம்மால் எதையும் முழுமையாக செய்ய முடியும். பூஜையில் அமரும் போதும் இந்த உற்சாகம் மற்றும் ஈடுபாடு இருந்தால் நமக்கு மன நிறைவு ஏற்படும்.
சில பேருக்கு இறை வழிபாடு செய்யும்போதுதான் கொட்டாவி மேல் கொட்டாவி வரும். தூக்கம் வரும். அதற்கு காரணம் பிராண வாயுவின் குறைபாடு என்று கூறலாம். நமது உடல் தச வாயுவால் இயங்குகின்றது. பிராணன் உயிர் காற்றாகவும் அபானன் மலக் காற்றாகவும் வியாணன் தொழில் காற்றாகவும் உதானன் ஒலி காற்றாகவும் சமானன் நிரவு காற்றாகவும் நாகன் தும்மல் காற்றாகவும் கூர்மன் விழிக் காற்றாகவும் கிருகரன் கொட்டாவிக் காற்றாகவும் தேவதத்தன் இமைக் காற்றாகவும் தனஞ்செயன் வீங்கல் காற்றாகவும் செயல்படுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் தேவையான காற்று ஓட்டம் சரியாக இருந்தால் தான் நம்மால் சரியாக செயல்பட முடியும். எனவே பூஜைக்கு அமருவதற்கு முன் நம் மனதையும் உடலையும் நாம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மனதை வேறு எதிலும் திசை திருப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிராணாயாமம் போன்ற உடற்பயிற்சி அல்லது சுவாசப் பயிற்சி செய்து நமது உடலையும் மனதையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அது மட்டும் இன்றி உங்கள் வீட்டில் தங்கியிருக்கும் எதிர்மறை ஆற்றலும் தடை ஏற்பட காரணமாக இருக்கலாம். கெட்ட சக்திகளை, வெளியேற்ற என்ன செய்வது. முதலில் பூஜை செய்வதற்கு முன்பு வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போட்டு விடுங்கள். கீழே தரையில் அமராதீர்கள். மனைப் பலகை அல்லது கடைகளில் கிடைக்கும் தர்ப்பை புல் விரிப்பு வாங்கிக் கொள்ளுங்கள். அதன் மேல் அமர்ந்து மந்திரத்தை சொல்லுங்கள். பூஜை செய்யுங்கள் நிச்சயமாக தூக்கம் கொட்டாவி வருவதை தவிர்க்க முடியும். பூஜைக்கு முன்பு, மந்திரத்தை சொல்வதற்கு முன்பு, இரண்டு துளசி இலைகளை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்துவிட்டு மந்திரத்தை உச்சரிக்கும் போதும் கொட்டாவி வருவதை தவிர்க்கலாம். உங்கள் பூஜை பற்றி அதாவது நான் இத்தனைக்கு மணிக்கு எழுந்தேன், இவ்வாறு பூஜை செய்தேன், அதற்காக இதை செய்தேன் அதனை செய்தேன் என்று பெருமை அடித்துக் கொள்ளாதீர்கள். அதன் மூலம் திருஷ்டி தாக்க வாய்ப்புள்ளது. மேலும் திருஷ்டி தாக்காமல் இருக்க பூஜைகள் முடிந்த பின் ஆரத்தி எடுங்கள். இவ்வாறு செய்யும்போது எந்த ஒரு தடையும் ஏற்படாமலும் இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான விஷயங்களை பின்பற்றி பலன் பெறவும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025