முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த நாள் அமாவாசை ஆகும். பிரதி மாதம் அமாவாசை வரும். அன்றைய தினம், எள்ளும் நீரும் இரைத்து முன்னோர்களை நினைத்து, விரதம் இருந்து அவர்களுக்கு படையல் இட்டு வழிபடுவது வழக்கம். என்றாலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகிய மூன்று மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.மாதந்தோறும் அமாவாசை சடங்கை பின்பற்ற முடியாதவர்கள் இந்த மூன்று அமாவாசை தினங்களிலாவது கண்டிப்பாக முன்னோர்களை வணங்க வேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்துதல் வேண்டும். அப்பொழுது தான் அவர்களது பரிபூரண ஆசிகள் நமக்கும், நமது வருங்கால சந்ததியினருக்கும் கிட்டும்.
ஒருவர் எந்த காரியங்களை செய்தாலும் செய்யாவிட்டாலும், முன்னோர்களை வணங்குவதை செய்யாமல் இருக்கக் கூடாது. அவர்களை வணங்காமல் வேறு எந்த தெய்வத்தை வணங்கியும் முழுப்பலன் கிட்டாது என்பார்கள். அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது முன்னோர் வழிபாடு. அவர்களுக்கு பூலோகத்தில் இருந்து கொண்டு நாம் அளிக்கும் எள்ளும் தண்ணீரும், ஸ்ரார்த்தம் அன்று நாம் அளிக்கும் பிண்டமும் எந்த ரூபத்திலாவது அவர்களை சென்று அடையும். அதில் மகிழும் அவர்கள் நமக்கும் நமது சந்ததியினருக்கும் ஆசிகளை அளிப்பதாக ஐதீகம். அவர்களுக்கும் முக்தி கிட்டும். நமக்கும் அவர்களின் ஆசிகள் கிட்டும். எனவே முன்னோர்களை வணங்க வேண்டியது அவசியம் ஆகும்.
புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசைக்கு பித்ரு லோகத்தில் இருந்து, பூலோகத்திற்கு வரும் நம் முன்னோர்கள் மீண்டும் தை அமாவாசைக்கு தான் பித்ரு லோகத்தில் செல்வார்கள்என்பது ஐதீகம். இந்த ஆண்டு, தை அமாவாசை ஆனது, தை 16 ஆம் தேதி (ஜனவரி 29) அன்று வருகிறது. அன்றைய தினம் நாம் முன்னோர்களுக்கான சில சடங்குகளை கண்டிப்பாக செய்ய வேண்டும். சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்றும் சாஸ்த்திரம் வாயிலாக அறிய முடிகிறது. அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம் வாருங்கள்.
தை அமாவாசையன்று என்ன செய்ய வேண்டும்:
அமாவாசை அன்று நீர்நிலைகளில் நீராடுவது நல்லது.
அன்று தர்ப்பணம் மற்றும் திதி கொடுக்கும் ஆண்கள் கண்டிப்பாக தலைக்கு நீர் ஊற்ற வேண்டும்.
பச்சை தண்ணீரில் தான் குளிக்க வேண்டும். சுடுநீரில் அதாவது வெண்ணீரில் குளித்தல் கூடாது.
அமாவாசை நாளில் பெற்றோரை இழந்தவர்கள் மற்றும் கணவரை இழந்த பெண் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்கலாம்.
சுமங்கலிப் பெண்கள் அமாவாசை இரவு கண்டிப்பாக உணவு உண்ண வேண்டும்.
தை அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பவர்கள் வீட்டில் எள், தண்ணீர் இரைத்து ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும்.
முன்னோர்களுக்கு பிடித்த உணவு வகைகளை சமைத்து அவர்களுக்கு படைக்க வேண்டும்.
அமாவாசை நாளில் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சிவன் கோயில் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.
தை அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுப்பவர்கள் கடல், ஆறு, குளம் போன்றவற்றின் கரையில் இருந்து உங்களின் மூன்று தலைமுறை முன்னோர்களின் பெயர்களை சொல்லி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஒருவேளை உங்களால் இங்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியவில்லை என்றால் இவ்வாறு வீட்டில் செய்யலாம்.
மாலை நேரத்திலும் முன்னோர்களின் திருவுருவ படத்திற்கு முன் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
இப்படி செய்வதினால் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
தை அமாவாசையன்று என்ன செய்யக் கூடாது:
தை அமாவாசை அன்று வீட்டை சுத்தம் செய்வது, துடைப்பது, விளக்கை கழுவுவது ஆகியவற்றை செய்யவே கூடாது.
அதுபோல் இந்த தை அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலமிடுதல், மணி அடித்து பூஜை செய்தல் போன்றவை செய்யவே கூடாது.
தை அமாவாசை நாளில், அசைவம், வெங்காயம், பூண்டு போன்றவற்றை சாப்பிட்டக் கூடாது.
தை அமாவாசை அன்று பெற்றோரை இழந்த பெண்கள் விரதம் இருக்கலாம் ஆனால் சுமங்கலி பெண்கள் தர்ப்பணம் கொடுக்கக் கூடாது.
தை அமாவாசை நாளில் காகத்திற்கு உணவு அளிக்க வேண்டும். காகம் உணவை எடுக்காமல், நீங்கள் உணவு சாப்பிடக் கூடாது
தர்ப்பணம், திதியை மாலை வேளையில் கொடுக்கக் கூடாது.
தர்ப்பணம் செய்யும்போது, கருப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக் கூடாது.
கிழக்கு திசை பார்த்து அமர்ந்து தான் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அன்றைய தினம் எந்தவொரு பூஜைகளையும் செய்ய கூடாது.
காகம் உணவு சாப்பிட பிறகே நாம் சாப்பிட வேண்டும்.
தாய் தந்தையை இழந்த பெண்கள் தை அமாவாசை விரதம் இருக்கலாம். ஆனால், சுமங்கலி பெண்கள் எள்ளும் தண்ணீரும் இறைக்கக்கூடாது.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025