Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
ஆடி மாத கொண்டாட்டங்கள் | Aadi Month Festival in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ஆடி மாத கொண்டாட்டங்கள்

Posted DateJuly 17, 2024

ஆடி மாதம் 2024

தமிழ் நாட்டில் ஆடி மாதம் பருவ கால மாற்றத்தின் கொண்டாட்டமாக இருந்தாலும் அதில் பக்தி நிறைந்து இருக்கும்.  பருவமழையை வரவேற்கும் கலாச்சார கொண்டாட்டமாகவும்  இருக்கிறது. தமிழ் மாதங்களில் நான்காவது மாதமான ஆடி மாதத்தில் தான் எத்துனை விழாக்கள். மேலும் இந்த மாதம் பல்வேறு தெய்வங்களின் வழிபாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக அன்னை பார்வதி தேவி தனது பக்தர்களுக்கு ஆரோக்கியம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியுடன் ஆசீர்வதிப்பதாக நம்பப்படுகிறது. ஆடி என்பது தமிழ் சமூகம் ஒன்று கூடி தெய்வீகத்தை போற்றும் நேரம், செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்காக வழிபாடுகள் நடத்தப்படுகிறது. ஆடிப் பண்டிகை தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் மத நிகழ்வாகும், இது மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதத்தின் சிறப்பம்சங்கள்

ஆடி மாதம் வழிபாட்டிற்கு உகந்ததாக கருதப்படுகிறது குறிப்பாக அம்மன் வழிபாடு.  மற்றும் பல முக்கிய பண்டிகைகள் மற்றும் சடங்குகளை மக்கள் இந்த மாதத்தில் மேற்கொள்கிறார்கள். செழிப்பான வாழ்வு வேண்டி தெய்வத்தின் ஆசிகளை நாடுகிறார்கள். பிரபஞ்சத்தை காத்து நிற்கும் அன்னையிடம் பாதுகாப்பு வேண்டி விரதம் இருக்கிறார்கள். மேலும் இந்த மாதம் பருவ மழையுடன் தொடர்புடையது.  விவசாயத்திற்கு முக்கியமான மழையை வரவேற்க பல சடங்குகள் செய்யப்படுகின்றன.

களைகட்டும் ஆடிமாத கொண்டாட்டம்

ஆடி வெள்ளிக்கிழமைகளில் பல பூஜைகள் நடத்தப்படுகின்றன.  குடும்பத்தின் நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்யப்படுகிறது.  ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், பெண்கள் கோயிலில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து தாங்களும் உண்டு பிற பக்தர்களுக்கும் விநியோகிப்பார்கள்.

ஆடி மாதத்தில் கோயில்கள் மற்றும் அவற்றின் அருகாமையில் இருக்கும் தெருக்களில் மின்விளக்குகளை ஒளிரச் செய்வார்கள். ஒலிப் பெருக்கிகளில் பக்திப் பாடல்களை ஒலிபரப்புவார்கள். மேலும் பெரிய வாசகங்கள் மற்றும் கட்-அவுட்கள் வைப்பார்கள்.  அழகாக அலங்கரிக்கப்பட்ட தேர்களில் தெய்வங்களின் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள்.  கொண்டாட்டங்களில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள். சுறுசுறுப்பாக இணைந்து, கலகலப்பான மற்றும் பண்டிகை சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். கோவிலைச் சுற்றி வித விதமான பொருட்களை விற்பார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு தேவையான பலூன், பொம்மை போன்ற  விளையாட்டு பொருட்கள் அதில் இருக்கும். மேலும் சுவாமி படங்கள் விக்கிரகங்கள் என கடை வீதி களை கட்டும். தின்பண்டங்களும் விற்பனைக்கு இருக்கும். கோவிலைச் சுற்றி இருக்கும்  வீதி முழுவதும்  திருவிழாக்  கொண்டாட்டமாக இருக்கும்.

செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை பூஜைகள்

ஆடி மாதம் பல கோவில்களில் தண்ணீர், பால், தயிர், தேன் சந்தனம் மற்றும்  பல்வேறு அபிஷேகப் பொருட்களால் தெய்வங்களுக்கு குறிப்பாக அம்மனுக்கு தினசரி அபிஷேகம்  செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக செவ்வாய்க் கிழமையும், வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.அன்றைய தினம் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறும்.    புது வஸ்திரங்கள் அம்மனுக்கு சாற்றப்படும். நகைகளைக் கொண்டு அம்மனை அலங்கரிப்பார்கள். பூக்களாலும் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும்.

தீ மிதித் திருவிழா   

ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமை அன்று சில அம்மன் ஆலயங்களில் தீ மிதி திருவிழா கோலாகலமாக  நடை பெறும். இதில் கலந்து கொள்பவர்கள் மூன்று நாட்கள் கோவிலில் தங்கி விரதம் இருந்து  தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வார்கள். இந்த திருவிழாவிற்காக வளர்க்கப்படும் நெருப்பிற்கு பல பக்தர்கள் கட்டைகளை வாங்கி அளிப்பார்கள்.

கூழ் விநியோகம் :

ஆடி மாதம் என்றாலே கூழ்  என்பது நமது நினைவில் வரும். கோவில்களிலும் வீடுகளிலும் சத்தான ராகி கூழை தயாரிப்பார்கள். அதன் சுவையை அதிகரிக்க,  நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் மோர் சேர்க்கப்படும். தங்கள் பிரார்த்தனை முடிந்தவுடன்  அதனை பகதர்களுக்கு விநியோகிப்பார்கள்.

அன்னதானம்

அபிஷேகம், பூஜை அர்ச்சனை முடிந்த பிறகு நைவேத்தியம் தடைபெறும். அம்மனுக்குப் பல வகை உணவுகளை நைவேத்தியமாக படைபார்கள். அதில் சர்க்கரைப் பொங்கல் முக்கியத்துவம் பெறும். பின்னர் அவை பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு  பிரசாதமாக விநியோகிக்கப்படுகின்றன. பல கோயில்கள் அன்னதானம்  ஏற்பாடு செய்து  பக்தர்களுக்கும் தேவைப்படுபவர்களுக்கும் இலவச உணவை வழங்குவார்கள்.

திருவிழாக்கள் 

ஆடிப்பெருக்கு : 03,ஆகஸ்ட் 2024 

ஆடி மாதத்தின் 18ஆம் நாள் ஆடிப் பெருக்கு கொண்டாடப்படுகிறது. பெருக்கெடுத்து ஓடும்  நதிகளுக்கு, குறிப்பாக காவேரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த  பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடுவார்கள்.  இந்த நேரத்தில், மக்கள் ஆற்றங்கரைகளுக்குச் சென்று, பிரார்த்தனை செய்து, புனித நீரில் நீராடுவார்கள்.  இந்த திருவிழா தண்ணீரின் முக்கியத்துவத்தையும், பருவமழையின் தொடக்கத்தையும் குறிக்கிறது, இது நிலத்திற்கு வளத்தை அளிக்கிறது. அன்று பெண்கள் தங்கள் மாங்கலியத்தை மாற்றிக் கொள்வார்கள்.

ஆடி கிருத்திகை: 29, ஜூலை 2024:

கிருத்திகை பெண்களால் முருகப் பெருமான் வளர்க்கப்பட்டதால் கிருத்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நாளாகும். அதிலும் குறிப்பாக ஆடி கிருத்திகை முருகப்பெருமானுக்கு சிறப்பு வாய்ந்ததாகும். முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த திருவிழாவில் விளக்கு ஏற்றி சிறப்பு பூஜைகள்  மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் முருகன் கோயில்களுக்குச் சென்று செழிப்பு மற்றும் வெற்றிக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.

ஆடிப்பூரம் : 07,ஆகஸ்ட்  2024: 

ஆடிப்பூரம் என்பது அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாவாகும். தமிழ் மாதங்களில் நான்காவது மாதமாக வரும் ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திர நாள் அன்று ஆண்டாள் அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றது. ஆண்டாள் அவதரித்த நாள் என்பதால் இது  ஆண்டாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருவிழா. அன்று  பக்தர்கள் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் ஏராளமான செல்வம் பெற சிறப்பு பிரார்த்தனை செய்கிறார்கள். இத்திருவிழாவின் போது ஒரு பிரபலமான சுவையான நைவேத்தியம்  அக்காகரவடிசல் ஆகும், இது அரிசி, பால், வெல்லம் மற்றும் நெய் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் இனிப்பு ஆகும்.

ஆடி அமாவாசை : 04, ஆகஸ்ட் 2024:

ஆடி மாதத்தில் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாகும். மூதாதையர்களின் ஆசி பெறுவதற்காக, தர்ப்பணம் எனப்படும் விசேஷ சடங்குகளை மேற்கொண்டு அவர்களின் முக்திக்கு வழி வகுக்கிறார்கள். முன்னோர்களுக்கு பிண்டம் படைப்பதன் மூலம் அவர்களின் ஆன்மா சாந்தி அடைகிறது. அவர்கள் முக்தி பெறுவதாக நம்பப்படுகிறது. அதன் மூலம்  அவர்களின் ஆசிகள் நமக்கும் நமது சந்ததிக்கும் கிடைக்கிறது.

ஆடி திருவிழா என்பது பக்தி, கலாச்சார நடைமுறைகள், விவசாய முக்கியத்துவம் மற்றும் சமூக பிணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பன்முக கொண்டாட்டமாகும். தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பாரம்பரியங்களை மதிக்கவும், தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறவும், பருவமழையின் இயற்கையான அருளைக் கொண்டாடவும் ஒன்றுகூடும் நேரம் இது. எனவே, இந்த ஆண்டில் ஆடி மாத விழாக்களை உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடி இறைவனின் ஆசிகளைப் பெற்று நீடூழி வாழுங்கள்.