Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
எண்கண் முருகன் கோயில் | Engan Murugan Temple
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

எண்கண் முருகன் கோயில்

Posted DateMarch 15, 2024

எண்கண் முருகன் கோயில் என்பது தமிழ்க் கடவுளான முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள எண்கண்னில் உள்ள எண்கண் பிரம்மபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் ஒரு தனி சன்னதியாக அமைந்துள்ளது. இது ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். எண்கண் திருவாரூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்ட கோவில் இது.  இது சிவன் கோவில் என்றாலும் முருகன் இங்கே பிரதானம். இங்குள்ள மூலவர் பிரம்மபுரீசுவரர் என்ற திருநாமத்துடனும் விநாயகர் நர்த்தன கணபதி என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.

எண்கண் பெயர்க்காரணம்

தனது சிருஷ்டி தொழிலை முருகனிடம் இருந்து மீண்டும் பெற பிரம்மா சிவனை தனது எட்டு கண்களால் பூஜித்த தலம். எட்டு கண்கள் தான் எண்கண் என்று கூறப்படுகிறது.

முருகனின் திருவுருவம்

முன்புறம் மூன்று முகங்கள் மற்றும் பின்புறம் மூன்று முகங்கள் மற்றும் பன்னிரு கரங்களுடன் முருகன் இங்கே காட்சி தருகிறார். அவரது பன்னிரு கரங்களில் வேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், சூலம், வில், அங்குசம், சேவற்கொடி,கேடயம் போன்ற ஆயதங்களைத் தரித்து இருக்கிறார். முருகப் பெருமானின் முழு எடையையும் மயிலின் இரண்டு கால்கள் தாங்கி நிற்கின்றன.

முருகனின் சிற்பம் உருவான கதை

முத்தரச சோழன் (பொரவச்சேரி) சிக்கல் ஆறுமுகனின் சிலை வடிக்க சில்பா முனிவன் என்னும் சிற்பக் கலைஞனின் உதவியை நாடினான். அந்த கலைஞன் தனது திறமையைக் காட்டி மயிலில் உலா வரும் வள்ளி தெய்வானை உடனான முருகனின் சிலையை உருவாக்கினான். அது மிகவும் அழகாக இருந்தது. இது போன்ற அழகிய சிலை உருவாக்கிய பெருமை தனக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று முத்தரச சோழன் சிற்பியின் கட்டை விரலை தானமாகக் கேட்டு வாங்கிக் கொண்டான். கட்டை விரலை இழந்தாலும் அந்த சிற்பி எட்டுக்குடியில் அதே போன்ற சிலையை உருவாக்கினான் அதனை அறிந்த முத்தரச சோழன் அவனது கண்ணை குருடாக்கி விட்டான்.

அந்த சிற்பியின் கனவில் முருகன் வந்து மீண்டும் சிலை செய்ய கூறினார் சிற்பி தனது மகளின் உதவியுடன் சிலையை உருவாக்கி கண் திறக்கும் போது உளி அவளின் விரல் மீது பட்டு ரத்தம் சிதறியது. அந்த ரத்தம் சிற்பியின் கண் மீது பட முருகன் அருளால் அவனுக்கு கண் பார்வை வந்தது.கட்டை விரலும் வந்தது;.அந்த சிற்பியின் சமாதி கோவிலில் உள்ள வன்னி மரத்தடியில் உள்ளது என்பர்.

பூஜை

இந்தக் கோவிலில் ஆறு கால பூஜை நடக்கின்றது. மாதந்தோறும் கார்த்திகை  நடசத்திரம் அன்று பூஜை விமரிசையாக நடை பெறும். பங்குனி எட்டு முதல் பதினொன்று வரையிலான நான்கு நாட்கள் சூரிய கதிர்கள் பிரம்மபுரீச்வரர் மீது விழுகிறது. அந்த நாட்களில் சூரிய பூஜை நடைபெறுகிறது.  கந்த சஷ்டி விழா, தைப்பூச விழா விமரிசையாக நடைபெறும். தைப் பூசம் பிரம்மோற்சவம் மிக விமரிசையாக நடைபெறும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களின் போது கோவிலில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். கந்த சஷ்டி தவிர ஆடி கார்த்திகை, திருக்கார்த்திகை, மாசி கார்த்திகை, மாசி மகம், மற்றும் பங்குனி உத்திரம் இங்கு மிகவும் விசேஷம்.

நேர்த்திக்கடன்

ஆறுமுகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. தேன் , பால், நல்லெண்ணய், மஞ்சள் பொடி, திரவியப் பொடி, தயிர், நெய், பழரசம், விபூதி, சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் முருகனுக்கு அபிஷேகம் நடக்கின்றன.  பக்தர்கள் காவடி எடுப்பதும் கோழி  சேவல் ஆகியவற்றை காணிக்கை தருவதும் வழக்கமாக உள்ளது.

பிரார்த்தனையின் பலன்

கண் பார்வை குறைந்தவர்கள் பிரதி தமிழ் மாதம் விசாகம் நட்சத்திரம் அன்று தொடர்ந்து பன்னிரண்டு மாதங்கள்  இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி அர்ச்சனை செய்து முருகப் பெருமானை வழிபட்டு வர கண் பார்வை பெறுவது இத்தலத்தின் அற்புதம் ஆகும்.  நோய்வாய்ப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று வழிபட்டு வர நோய்கள் குணமாகின்றன.  செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் முருகனை வழிபடுவதன் மூலம் திருமணத் தடைகள் நீங்குகிறது. புத்திரப் பேறு கிடைக்கின்றது. வியாழக்கிழமை விரதம் இருந்தால் குரு தோஷம் நீங்குகிறது. அறிவு, ஞானம், ஆயுள், ஆரோக்கியம். கண்பார்வை இவற்றுக்கு இந்த தலம் சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் ஆகும்.