Maha Shivaratri: Invoke Shiva through the Super-Grand Invocation with 259 Sacred Rituals for Ultimate Life-Transforming Blessings Join Now
திருநள்ளாறு திருக்கோயில், Thirunallar Saneeswaran Temple, Thirunallar Sani Bhagavan Kovil
x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.

திருநள்ளாறு திருக்கோயில் | Thirunallar Saneeswaran Temple

அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில்

சனி பகவான், இந்தப் பெயரைக் கேட்டாலே சாதாரண மனிதர்கள் முதல் தேவர்கள் வரை நடுங்குவார்கள். நவகிரகங்களில் ஈஸ்வர பட்டத்தைப் பெற்றவர் இவர் ஒருவரே. அதனால் தான் இவருக்கு சனீஸ்வரன் என்ற பெயர். சனி கிரகம் பூமியை விட 750 மடங்கு பெரியது. சூரியனை சுற்றும் கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன், அதற்கடுத்து பெரிய கிரகம் சனி. சனீஸ்வரன் நீதிமானாக அறியப்படுகிறார். சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள். ஒருவரது கர்ம வினைகளுக்கேற்ப பலன்களை வழங்குபவர். சனி பகவானே ஆயுள்காரகன். சூரிய பகவானுக்கும், சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர் சனி பகவான். சிவபெருமானை வேண்டி பல்லாண்டு காலம் கடும் தவமிருந்து நவகிரக அந்தஸ்தைப் பெற்றவர். சனி பகவானின் பார்வையானது மிகவும் வலிமையானது. அதனால் தான் இன்றளவும் கோயில்களில் சனி பகவானை வணங்கும் போது நேருக்கு நேர் நின்று வணங்கக் கூடாது. ஒரு ஓரமாக நின்று வணங்க வேண்டும் என்று சொல்வார்கள். சனி பகவான் ஊனமுற்றவர், அதனால் மெதுவாக வலம் வருவார். இதனால் இவருக்கு மந்தன் என்ற பெயரும் உண்டு.

சனி பகவானுக்கான சிறந்த பரிகாரத் தலமாக புகழ் பெற்று விளங்குகிறது அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில். இத்திருத்தலம் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர். தாயார் பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள் ஆகிய நாமங்களைக் கொண்டு அருள்பாலிக்கிறாள். தல விருட்சம் தர்ப்பை. இத்திருக்கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. தேவாரப் பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் இது 115வது தேவாரத்தலமாகும். இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. சிவத்தலமாக இருந்தாலும் கூட, இங்கேயுள்ள சனி பகவான் சன்னதி மிகவும் பிரசித்திப் பெற்றது. ஒவ்வொரு சனி பெயர்ச்சியின் போதும் பல மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து பரிகார பூஜை செய்து சனி பகவானின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர்.

கோயில் அமைப்பு

அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் ஏழு நிலை ராஜகோபுரம் கொண்டு எழிலுடன் காட்சியளிக்கிறது. இத்தலத்தில் மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர் சன்னதிக்கும், இறைவி பிராணாம்பிகை சன்னதிக்கும் இடையில் சனீஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. இங்கே சனி பகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலிப்பதால் இக்கோயிலில் நவகிரகங்கள் கிடையாது. இத்தலத்தில் சனி பகவானின் வாகனமாக காக்கை வாகனம் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. விசேஷ காலங்களில் இந்த தங்க காகம் வாகனத்தில் அமர்ந்து சனி பகவான் வீதி உலா வருகிறார். இத்தல இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவர் தர்ப்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தி. சிவலிங்கத்தின் மீது முளைத்த தழும்பு உள்ளது. இத்திருக்கோயில் தருமை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தல வரலாறு

சேதி நாட்டு இளவரசியான தமயந்தியின் சுயம்வரத்தில் எண்ணற்ற தேவர்கள் கலந்து கொண்டு அவளை திருமணம் செய்ய விரும்பினர். ஆனால் தமயந்தி அவர்களைத் தவிர்த்து நிடத நாட்டின் மன்னான நளனை திருமணம் செய்து கொண்டாள். இதனால் பொறாமையும், கோபமும் கொண்ட தேவர்கள் சனீஸ்வரனிடம் நளனை துன்புறுத்துமாறு வேண்டினர். சனீஸ்வரன் நளனின் தூய்மையான குணத்தை அவர்களுக்கு உணர்த்த, நளனை ஏழரை ஆண்டுகள் பிடித்து துன்புறுத்தினார். மனைவி, மக்களையும், நாட்டையும், ஏன் உடுத்த துணியையும் கூட இழந்து துன்புற்ற மன்னன் நளன் எதற்கும் கலங்கவில்லை. ஒரு கட்டத்தில் நளன் திருநாள்ளாறு வந்து திருக்குளத்தில் நீராடி தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கினான். இதனால் அவனைப் பிடித்திருந்த சனி நீங்கியது.

நளனின் வேண்டுகோளின்படி இத்தலத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து ஈஸ்வர பட்டத்துடன் சனீஸ்வரன் என்ற பெயர் தாங்கி அருள்பாலிக்கிறார் சனி பகவான். கிழக்கு நோக்கிய சனீஸ்வரன் என்பதாலும், சிவனருள் பெற்றவர் என்பதாலும், இவரை வழிபட்டு சனியினால் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுபடலாம். நள சரித்திரத்தைப் படிப்பவர்களும் சனியின் தொல்லை நீங்கி தன்னம்பிக்கை பெறலாம்.

தீர்த்தங்கள் நிறைந்த தலம்

திருநாள்ளாறு என்றாலே தீர்த்த ஸ்தலம் என்று கூறுவார்கள். கோயிலைச் சுற்றிலும் நளதீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம் ஆகியவை உள்ளன. இதிலே நளதீர்த்தத்தில் நீராடினால் சனியின் தொல்லை நீங்கும். பிரம்ம தீர்த்தத்தில் நீராடினால் முன்வினை சாபங்கள் யாவும் விலகும். வாணி தீர்த்தம் எனப்படும் சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் மூடனாக இருந்தால் கூட கவிதை பாடுவான் என்பது நம்பிக்கை. இதோடு இன்னும் சில தீர்த்தங்களும் உள்ளன.

சனி பகவானை வணங்கும் முறை

இத்தலத்தில் உள்ள சனி பகவானை வணங்கும் முறையானது, காலை 5 மணிக்கு நளதீர்த்தத்தில் நீராடி, கரையிலுள்ள நளவிநாயகர் மற்றும் பைரவரை வணங்க வேண்டும். பின்பு கோயிலின் உள்ளே அமைந்துள்ள கங்கா தீர்த்தத்தை தரிசித்து, கோபுர வாசலுக்கு வந்து, ராஜகோபுர தரிசனம் முடித்து, உள்ளே நுழையும் போது முதல் படிக்கட்டை வணங்கி முதல் பிரகாரத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் சுவரில் வரையப்பட்டுள்ள நள சரித்திரத்தை பக்தியுடன் பார்த்த பிறகு காளத்திநாதரை வணங்க வேண்டும். அதன் பின் மூலவர் சன்னதிக்குள் சென்று தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, தியாகவிடங்கர் சன்னதிக்கு செல்ல வேண்டும். பின் அங்குள்ள தெய்வங்களை வணங்கி கட்டைக் கோபுர வாசல் சென்று அன்னை பிராணேஸ்வரியை வழிபட வேண்டும். அதற்கு பிறகு தான் சனீஸ்வரர் சன்னதிக்கு செல்ல வேண்டும். ஆனால் சிலர் முதலிலேயே சனீஸ்வரர் சன்னதிக்கு சென்று விடுகின்றனர். இது சரியல்ல. இங்குள்ள இறைவனை தரிசித்த பின்பே சனீஸ்வரனை வணங்க வேண்டும். அப்போது தான் சனி விமோசனம் கிடைக்கும்.

சோமஸ்கந்த மூர்த்தி வடிவம்

திருநாள்ளாறில் வீற்றிருக்கும் தர்ப்பாரண்யேஸ்வரரும், அம்பிகை பிராணேஸ்வரியும் குழந்தையில்லாத தம்பதியருக்கு அருள்புரிகின்றனர். திருமாலுக்கு குழந்தை இல்லாமல் இருந்த வேளையில் இத்தல தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி மன்மதனை மகனாகப் பெற்றார். அதற்குப் பரிசாக முருகப்பெருமானை சுவாமி, அம்பாள் இடையே அமர்த்தி சோமஸ்கந்த மூர்த்தி என்று புதிய வடிவத்தை உருவாக்கினார் திருமால். இந்த வடிவத்தை தேவலோகத்திற்கு எடுத்துச் சென்று வழிபட்ட இந்திரன் ஜெயந்தன், ஜெயந்தி என்ற குழந்தைகளைப் பெற்றான் என்று புராணம் கூறுகிறது.

ஒதுங்கியிருக்கும் நந்தி

இத்திருக்கோயிலில் நந்தியும், பலிபீடமும் சுவாமிக்கு நேரே அமையாமல் சற்று விலகியிருப்பதை இன்றளவும் காண முடியும். இதற்கு ஒரு கதை உண்டு. இடையன் ஒருவன் அரசனின் ஆணைப்படி கோயிலுக்கு தினமும் பால் அளந்து கொடுத்து வந்தான். ஆனால் கணக்கனோ அந்தப் பாலை தன் வீட்டுக்கு அனுப்பி விட்டு, பொய் கணக்கு எழுதி வந்தான். இடையனையும் அச்சுறுத்தி வந்தான். இந்த செய்தியை அறிந்த மன்னன் கடும் கோபம் கொண்டான். அப்போது இறைவன், இடையனைக் காக்கவும், கணக்கனைத் தண்டிக்கவும் எண்ணி தன்னுடைய சூலத்தை ஏவினார். அந்த சூலத்திற்கு வழிவிடவே இக்கோயிலில் உள்ள நந்தியும், பலிபீடமும் சற்று விலகி அமைந்துள்ளது. சூலம் கணக்கனின் தலையைக் கொய்தது. இடையனுக்கு இறைவன் காட்சி தந்து அருள்புரிந்தார் என்பது ஐதீகம்.

கோயில் திறந்திருக்கும் நேரம்

அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் காலை 5 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோயிலுக்கு எப்படிச் செல்வது?

இத்திருத்தலம் காரைக்காலில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. பேரளம், காரைக்கால், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய இடங்களிலிருந்து இத்தலத்திற்கு அடிக்கடி பேருந்துகள் செல்கின்றன.