Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
கஞ்சனூர் சுக்கிரன் கோவில், Kanjanur Sukran Temple, Kanjanur Sukran Koil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கஞ்சனூர் சுக்கிரன் கோவில் | Kanjanur Sukran Temple

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்

நவகிரகங்களில் ஆறாவது கிரகமாக அறியப்படுபவர் சுக்கிர பகவான் (வெள்ளி). பிரம்மாவின் மானஸ புத்திரரான பிருகு முனிவருக்கும், பிலோமிசைக்கும் பிறந்தவர் சுக்கிரன். இதனால் இவர் பார்கவன் எனும் பெயர் பெற்றார். இவருக்கு கவி என்ற மற்றொரு பெயரும் உண்டு. சுக்கிரன் மிகச் சிறந்த சிவபக்தர். சிவபெருமான் அருளால் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவி மந்திரத்தை கற்றவர். வெள்ளை நிறம் கொண்டவர். கிரகங்களில் சுபர் கிரகமாவார். அசுரர்களுக்கு குருவானதால் சுக்ராச்சாரியார் என அழைக்கப்படுகிறார். பூமிக்கு அருகில் உள்ள கிரகம் சுக்கிரன். ஜாதகத்தில் வாழ்க்கைத் துணையை பற்றிக் கூறும் கிரகம் என்பதால் களத்திர காரகன் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். ஆடம்பர வாழ்வு, பணம், பொருள் மீது ஆசையைத் தூண்டுதல், உழைக்காமல் சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் போன்ற எண்ணங்களை உருவாக்குபவர். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் அவர் வாழ்க்கையில் பூரண சுகங்களையும் அனுபவித்து விடுவார்.

தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், கஞ்சனூரில் அமைந்துள்ள அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் சுக்கிரனுக்குரிய தலமாகும். மூலவர் அக்னீஸ்வரர், தாயார் கற்பகாம்பாள். தல விருட்சம் பலா, புரசு. அக்னி தீர்த்தம், பராசுர தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் இத்தலத்தில் அமைந்துள்ளது. கஞ்சானூருக்கு புராணத்தில் பலாசவனம், பராசபுரம், பிரமபுரி, அக்கினிபுரம், கம்சபுரம், முத்திரிபுரி என்ற பெயர்களும் உண்டு. கஞ்சமாரன் நாயனார் இவ்வூரில் பிறந்ததால் கஞ்சனூர் என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற வடகரைத் தலங்களில் இது 36வது தலம். பராசர முனிவருக்கு சிவபெருமான் தாண்டவம் ஆடி முக்தியளித்த தலம். எனவே இங்குள்ள நடராஜர் முக்தி தாண்டவ மூர்த்தி என அழைக்கப்படுகிறார். அதோடு இத்தலத்தில் பிரம்மனுக்கு சிவபெருமான் தன் திருமணக் கோலத்தை காட்டி அருளியுள்ளார்.

கோயில் அமைப்பு

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரத்தைக் கொண்டது. மிகப்பழமையான கோயில் இது. தெற்கு வாயில் வழியாக உள்ளே வந்தால் உள் மண்டபம் உள்ளது. பிரகாரமாக வலம் வந்து மண்டபத்தை அடைந்தால் இடது புறம் விநாயகர் தரிசனம், வலதுபுறம் விசுவநாதர் சன்னதி, அடுத்து அம்பாள் சன்னதி. உள் வாயிலைத் தாண்டி சுவாமி சன்னதிக்கு செல்லும் போது இடது புறம் விநாயகர், மயூரசுப்பிரமணியன், மகாலட்சுமி சன்னதிகள் உள்ளன. சுக்கிரனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சிவபெருமான் உயர்ந்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு

முன்பொரு சமயம் கஞ்சனூரில் வாசுதேவர் எனும் வைணவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு சுதர்சனர் என பெயர் சூட்டினார். பிறப்பால் வைணவராக இருந்தாலும் கூட அக்குழந்தை மிகுந்த சிவபக்தியைக் கொண்டிருந்தது. திருநீரு, ருத்திராட்சம் அணிந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக் கொண்டிருந்தது. பின்பு அவ்வூரில் உள்ள அக்னீஸ்வரர் திருக்கோயிலுக்கும் சென்று இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வந்தது. தந்தை வாசுதேவர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதைக் கேட்கவில்லை. ஊர் மக்களுக்கும் இது பிடிக்கவில்லை. அதன் பின்பு அவ்வூர் மக்கள் அக்குழந்தையை பழுக்க காய்ச்சிய இரும்பு முக்காலியின் மீது அமரச் சொன்னார்கள். அக்குழந்தையும் அதன் மீது அமர்ந்து சிவமே பரம்பொருள் என்ற மும்முறை கூறியதைக் கண்டு அனைவரும் வியப்படைந்தனர். இந்தக் காட்சியை சித்தரிக்கும் உருவம் இவ்வூர் பெருமாள் கோயிலிலும், அக்னீஸ்வரர் கோயிலில் உள்ள நடராஜர் சன்னதியிலும் உள்ளது. ஹரதத்தருக்கு உபதேசித்து அருள்புரிந்த தட்சிணாமூர்த்தி உருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது. இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு ஹரதத்தர் என்ற பெயர் அளித்து சிவநாம தீட்சை செய்தவர் என்பது வரலாறு.

சுக்கிரன் தலம்

நவகிரகத் தலங்களில் இத்தலம் சுக்கிரனுக்குரிய தலம். சுக்கிரன் வழிபாடு செய்த தலங்களுள் இதுவும் ஒன்று. மகாபலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார். எந்த துன்பம் வந்தாலும் தன்னை நம்பி வந்தவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இவரது அருள் பெற இத்தலத்திற்கு வந்து வழிபடுவது சிறப்பு. ஒருமுறை சுக்ராச்சாரியாரால் விஷ்ணுவுக்கு சுக்ர தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷத்தை நீக்க விஷ்ணு ஹரதத்தர் என்ற நாமத்துடன் இங்குள்ள சிவனை வழிபட்டு சுக்கிர தோஷம் நீங்கப் பெற்றார் என்கிறது புராணம். சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் சுக்கிரனுக்கு அருகில் உள்ள ஐம்பொன்னால் ஆன சிவனை வழிபாடு செய்வது சிறப்பு என்று கூறப்படுகிறது.

ஹரதத்தர் சிறப்புகள்

கஞ்சனூரில் ஒரு செல்வந்தர் தினமும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்து வந்தார். தினமும் அவரது கனவில் அந்த நைவேத்தியத்தை ஏற்றுக் கொண்டு இறைவன் உணவு உண்பது போல காட்சி தந்திருக்கிறார். ஒருநாள் அக்கனவு அவருக்குத் தோன்றவில்லை. குழப்பமடைந்த செல்வந்தருக்கு, அன்று அக்னீஸ்வரர் ஹரதத்தரிடம் ஏழை பிராமணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கி உண்டதாகவும், அதனால் வயிறு நிரம்பிவிட, செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்று உணரச் செய்தார் இறைவன். இதன் வாயிலாக ஹரத்தரின் பெருமையை உணர்ந்த அந்த செல்வந்தர் ஹரதத்தரை நாடிச் சென்று வணங்கியதாக வரலாறு கூறப்படுகிறது. இன்றளவும் கோயிலில் ஹரதத்தரின் குடும்பமும், ஏழை அந்தணராக வந்த இறைவனின் திருவுருவமும் உள்ளன.

கல் நந்தி புல் உண்ட கதை

பிராமணர் ஒருவர் தெரியாமல் புல் கட்டைப் போட்டுவிட்டதால் பசுங்கன்று ஒன்று இறந்துவிட்டது. இதனால் அவருக்கு பசுதோஷம் பிடித்து விட்டது அவ்வூரில் உள்ள பிராமணர்கள் அவரை தங்களிடமிருந்து விலக்க வைத்தனர். செய்வதறியாமல் திகைத்த அந்த பிராமணரும் ஹரத்தரிடம் முறையிட்டார். முறையிடும் போது பஞ்சாட்சாரத்தை சொல்லியவாறே சென்றார். அதைக் கேட்ட ஹரதத்தர் சிவபஞ்சாட்சரத்தை சொல்லியதால் அந்த தோஷம் நீங்கிவிட்டதாக கூறினார். பிராமணர்கள் அதை ஏற்காமல் தங்களுக்கு நிரூபிக்க வேண்டினர். ஹரதத்தரும் உடனே அந்த பிராமணரை அழைத்து, காவிரியில் நீராடி ஒரு கைப்புல் எடுத்து வந்து அதை கல் நந்தியிடம் தருமாறு கூறுகிறார். அவரும் அவ்வண்ணமே செய்தார். ஹரதத்தர், “கல் நந்தி புல் சாப்பிடுமானால் பஞ்சாட்சரத்தால் தோஷம் நீங்கும்” என்று புல்லைத் கல் நந்திக்கு தர, அந்த நந்தியும் அதை உண்டதாக வரலாறு கூறப்படுகிறது.

கோயில் திறந்திருக்கும் நேரம்

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் காலை 7.30 முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கோயிலுக்கு எப்படிச் செல்வது?

இத்திருக்கோயில் கும்பகோணத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்திலும், சூரியனார் கோயிலில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலும், மயிலாடுதுறையில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.