Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
கோயிலில் திருமணம் செய்தால் இப்படியெல்லாம் நன்மைகள் நடக்குமா?
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கோயிலில் திருமணம் செய்தால் என்ன நன்மைகள்

Posted DateSeptember 27, 2024

கோயிலில் திருமணம் செய்து கொள்வது எவ்வளவு நல்ல பலன்களை தரும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

இரு மனம் இணையும் திருமண நிகழ்வை நாம் அனைவரும் விமரிசையாக கொண்டாட விரும்புகிறோம். திருமணம் நடத்த மண்டபம் பார்த்து அனைவரையும் அழைத்து ஆரவாரமாக நடக்கும் பல திருமணத்தை நாம் கண்டிருப்போம். மண்டபம் எடுத்து திருமணம் செய்ய வசதி இல்லாதவர்கள் கோவிலில் திருமணம் நடத்துவார்கள். ஒரு சிலர் நல்ல வசதி இருந்தும் ஜாதக தோஷம் நீக்க கோவில் திருமணம் நடத்துவார்கள்.

திருமணம் நடக்கும் நேரம் மேள தாள வாத்தியங்களை முழங்க வைப்பார்கள். நாதஸ்வரம் ஒலிக்க வைப்பார்கள்.  மங்களகரமான காரியம் நடக்கும் போது மங்களகரமான ஒலி முழங்க வேண்டும் என்பதே அதன் தாத்பரியம்.

முற்காலத்தில் அனைவரும் தனித்தனி வீடுகளில் வசித்து வந்தார்கள். வீடுகளும் பெரியதாக இருக்கும். எனவே அக்காலத்தில் திருமணத்தை தங்கள் இல்லத்தில் வைத்து நடத்தினார்கள். இன்றளவும் கிராமப்புறங்களில் தங்கள் வீட்டிலேயே பந்தல் அமைத்து திருமணத்தை நடத்துபவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறு சொந்தமாக இடவசதி இல்லாதவர்கள் ஆலயங்களில் வைத்து திருமணத்தை நடத்தினார்கள். ஆலயத்தில் வைத்து திருமணம் நடக்கும்போது இறைவனின் சந்நதியில், அதாவது இறைசக்தி நிறைந்திருக்கும் இடத்தில் தம்பதியர் தாங்கள் வாழ்வினில் இணையும்போது இறையருள் நிறைந்து இருக்கும் அதனால் தவறு ஏதும் நடந்துவிடாது, தம்பதிகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று நம்பினார்கள். எனவே தான் நமது முன்னோர்கள் பெரும்பாலும் திருமணங்களை கோவிலில் தான் நடத்தினார்கள். கோவிலில் இருக்கும் நேர்மறை ஆற்றலும் ஒரு காரணம் ஆகும்.  அது மட்டும் இன்றி நமது வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் இறை அருள் நமக்கு அவசியம் தேவை. அந்த வகையில் இரு உயிர்கள் இணையும் திருமணம் பந்தம் இறை அருளுடன் இனிதே தொடங்க வேண்டும் என்பதே.  எனவே தான் இறைவனுக்கு முன்னால் வாழ்க்கைத் துணையின் கரம் பிடிப்பது வழக்கமாகவே இருந்து வந்தது.

திருமணம் என்னும் வைபவம் புனிதமானது. திருமணம் செய்து கொள்பவர்கள் மட்டும் இன்றி அந்த வைபவத்தில் கலந்து கொள்பவர்களும் நல்ல எண்ணத்துடன் புது மணத் தம்பதிகளை வாழ்த்த வேண்டும். மேலும் வைபவம் தூய்மையாக நடக்க அந்த காலங்களில் திருமணத்தின் போது ஹோமம் போன்ற சடங்குகளையும் நடத்தினார்கள். காலம் செல்லச் செல்ல இந்த வைபவத்தின் புனிதத்துவம் குறைந்து கொண்டே வருகிறது எனலாம்.

தற்காலத்தில் திருமண மண்டபங்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்வடைந்து வருகிறது. திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடத்துவதையும் நாம் குறை சொல்ல முடியாது. என்றாலும்  முறையான சடங்குகளைப் பின்பற்றி செய்கிறோமா என்றால் அங்கு தான் கேள்விக்குறியாகிறது. சடங்கு சம்பிரதாயங்களை விட  ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள ஆடம்பரமும் அலங்காரமும் மட்டுமே பெருகி வருகிறது. மணவறைக்கு மணமக்களை வாழ்த்த வருபவர்கள் காலணிகளை அணிந்துகொண்டே மேடையேறி வருகிறார்கள். புகைப் படம் மற்றும் வீடியோவிற்காக செயற்கையாக சிரிக்கிறோம், நடிக்கிறோம். மாறாக சம்பிரதாயங்களில் நம் மனம் ஈடுபட மறுக்கிறது. ஆலயத்தில் வைத்து திருமணத்தை நடத்தினால் மணமக்களின் ஜாதகங்களில் ஏதோ தோஷம் இருக்கிறது, தோஷ நிவர்த்திக்காகத்தான் கோவிலில் வைத்து திருமணத்தை எளிமையாக முடித்துவிட்டார்கள் என்று வாய்கூசாமல் பேசுவோரும் இருக்கிறார்கள். கோவில் கல்யாணங்களில் வீண் ஆடம்பரம் இடம் பிடிப்பதில்லை. ஆலயங்கள் இறைவனின் இருப்பிடம் என்பதால் பயபக்தியுடன் சம்பிரதாயங்களில் நம் கவனத்தை செலுத்துகிறோம். கோவிலுக்குள் காலணி அணிந்து வந்து மணமக்களை வாழ்த்துவதில்லை. இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஆலயத்தில் வைத்து திருமணத்தை நடத்துவதே சிறந்தது என்று நமக்குத் தோன்றுகிறது. திருமண மண்டபத்தில் வைத்து திருமணத்தை நடத்துவது தவறு அல்ல. எங்கே நடத்துகிறோம் என்பது முக்கியமல்ல. எப்படி நடத்துகிறோம் என்பதே முக்கியம்.

கோயிலில் திருமணம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். தம்பதிகளின் வாழ்வில் நேர்மறை மாற்றங்கள் தான் உண்டாகும். கோயில் என்பது மந்திரங்கள், ஸ்லோகங்கள், இறைவனுக்கு ஆராதனை, பாடல்கள் என ஆன்மீக காரியங்கள் அதிகம் நடக்கும் இடம். இது கோயிலில் நேர்மறை ஆற்றலை தக்க வைத்திருக்கும். இங்கு திருமணம் செய்து கொண்டு தம்பதிகளாக வாழக்கை தொடங்குவதன் மூலம் வாழ்வு சிறக்கும்.