Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
விபூதி பூசுவதால் ஏற்படும் நன்மைகள்; விபூதி பற்றிய சுவாரசிய தகவல்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

விபூதி பூசுவதால் ஏற்படும் நன்மைகள்; விபூதி பற்றிய சுவாரசிய தகவல்கள்

Posted DateOctober 26, 2023

விபூதி என்னும் ரட்சை

சிவபெருமான் ஆலயங்களில் நமக்கு பிரசாதமாக திருநீறு எனப்படும் விபூதி வழங்கப்படும். நீறில்லாத நெற்றி பாழ் என்று கூறுவார்கள். விபூதி மகிமை நிறைந்தது. மகத்துவம் வாய்ந்தது விபூதி என்றால் ஐஸ்வர்யம் என்று பொருள். விபூதியின் மகிமை இன்று நேற்றல்ல. புராண காலத்தில் இருந்தே இருந்து வந்துள்ளது. இந்த விபூதி நம்மைக் காக்கும் ரட்சையாக விளங்குகிறது.

மனித உடலில் நெற்றி மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.  நெற்றியில் தான் அதிக வெப்பம் வெளியிடப்படுகின்றது. உள் இழுக்கப்படுகின்றது.  சூரியக் கதிர்களின் சக்தியை இழுத்து சரியான  முறையில் அதிர்வுகளை உள்ளனுப்பும் செயலை திருநீறு செய்கிறது. எனவே தான் திருநீறை பட்டையாக நெற்றியில் பூசுகிறார்கள்.

விபூதியை எப்படி அணிய வேண்டும்?

விபூதியை நாம் தரித்துக்கொள்ளும்பொழுது கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு திசை பார்த்தோ அணிந்துகொள்ள வேண்டும். வலக்கையின் நடுவிலுள்ள மூன்று விரல்களால் விபூதியை பவ்யமாக எடுத்து தலையை நிமிர்த்தி அணிந்துகொள்ள வேண்டும். காலையிலும், மாலையிலும் கோவிலுக்குச் செல்லும்பொழுதும், இரவு படுக்கப் போகும் முன்பும் விபூதி அணிந்து கொள்ளலாம்.

விபூதியை ஏன் மூன்று விரல்களால் அணிய வேண்டும்?

நான் எனது என்னும் எண்ணம் (ஆணவம்) முற்பிறவி மற்றும் இப்பிறவியின் செயல்களால் ஏற்படும் விளைவுகள் (கர்மா) ஆன்மீக பாதையை மறந்து உலக சுக போக இன்பங்களில் திளைப்பது (மாயை) என்னும் மூன்றும் நம்மை விட்டு நீங்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் அல்லது அதனை குறிப்பிடத்தான் மூன்று விரல்களால் விபூதியை நாம் அணிந்து கொள்கிறோம்.

விபூதியை எந்த விரலால் தரிக்க வேண்டும்:

விபூதியை எந்த விரல்களில் பூச வேண்டும். எந்த விரல்களில் பூசக் கூடாது அவ்வாறு விரல்களின் மூலம் பூசினால் என்ன பலன் என்பதயும் நமது முன்னோர்கள் அழகாக கூறியுள்ளனர்.

விபூதியை எடுக்க சில விரல்களை பயன்படுத்தும் போது தீமையும் சில விரல்களை பயன்படுத்தும் போது அதீத நன்மையும் ஏற்படுகிறது. ஆகவே விபூதியை எடுக்கும்போது கீழே குறித்துள்ள முறைகளை பயன்படுத்தி மிகவும் கவனமாக விபூதி அணிய வேண்டும்.

கட்டை விரல்: கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிவதால் தீராத வியாதி தீரும்.

ஆள் காட்டி விரல் : ஆள்காட்டி விரலால் விபூதியை தொட்டு  அணிந்தால் பொருட்கள் நாசம்

நடுவிரல்: நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக் கொண்டால் நிம்மதியின்மை.

மோதிர விரல்: மோதிர விரலால் விபூதியை தொட்டுக் கொண்டு பூசும் போது மகிழ்ச்சியான் வாழ்க்கை

சுண்டு விரல்: சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரக தோஷம் ஏற்படும் 

மோதிர விரலாலும் கட்டைவிரலும் சேர்ந்து விபூதியை எடுத்து மோதிர விரலால் இட்டுக் கொண்டால் உலகமே வசப்படும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை அளிக்கும்.  

விபூதி தரிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

நமது முன்னோர்கள் வெளியில் கிளம்பும் போது விபூதியை பூசிக் கொண்டு செல்லச் சொல்வார்கள். நாம் எதையாவது கண்டு பயந்தால் கூட  விபூதியை தலையிலும்  நெற்றியிலும் வைத்து விடுவார்கள்.  பசு மாட்டின் எருவைக் கொண்டு தான் விபூதி தயாரிக்கிறார்கள். முறைப்படி தயாரிக்கப்பட்ட . இந்த திருநீற்றில் தீய நீரை உறிஞ்சி எடுக்கும் சக்தி உண்டு.தலையில் நீர் கோர்த்துக் கொண்டு இருந்தாலும் விஷக் காய்ச்சல் இருந்தாலும் விபூதி அணிவதன் மூலம் சரியாகும்.  

விபூதியை உச்சியில் தரிப்பதன் மூலமாக கண்டத்துக்கு மேல் செய்த பாவம் நீங்குமெனவும், விபூதியை நெற்றியில் தரிக்கும்பொழுது நான்முகனால் எழுதப்பட்ட கெட்ட எழுத்துகளின் தோஷம் நீங்குமெனவும், விபூதியை மார்பில் தரிக்கும்பொழுது மனதினால் செய்த குற்றம் விலகுமெனவும், விபூதியை நாபியில் தரித்தால் பீஜத்தினால் செய்த தோஷம் நீங்குமெனவும் சொல்லப்படுகிறது.

விபூதியை முழந்தாள்களில் தரித்தால் கால்களால் செய்த பாவம் நீங்குமெனச் சொல்லப்படுகிறது. விபூதியை முதுகின் கீழுள்ள முச்சந்தியில் தரித்தால் சூதத்தினால் செய்த பாவம் விலகுமெனவும், விபூதியை புயங்களில் தரித்தால் அந்நிய மாதரிடம் தவறாக நடந்த பாவம் நீங்குமெனவும், சொல்லப்படுகிறது.

பொதுவாக விபூதியை தரிப்பதன் மூலம் நோய்க் கிருமிகள் அழியும்; உடல் சுத்தமாகும்;வியாதிகள் தீரும்;பில்லி சூனியம் நீங்கும்;முகத்திற்கு அழகு கூடும்;ஞாபக சக்தி வளரும்;புத்தி கூர்மை பெருகும்;ஞானம் உண்டாகும்; பாவங்கள் தீரும்; பரமனடி சேர்க்கும். லட்சுமி கட்டாட்சம் கிட்டும். முக வசியம் ஏற்படும்.