வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாகவும் சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இந்த மலையில் சிவன் வீற்றிருப்பதாக ஐதீகம் உள்ளதால் இதை தென் கைலாயம் என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள். இது மேகங்கள் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் “வெள்ளியங்கிரி” என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது. இந்த அடிவாரப் பகுதியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. ரத்தினகிரி, தக்ஷின கைலாசம், பூலோக கயிலாயம் என்றெல்லாம் இக்கோவில் அழைக்கப்படுகிறது. பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்ற ஐம்பூதங்களுக்கு உரிய திருத்தலங்கள் வெவ்வேறாக உள்ளன. ஆனால் வெள்ளியங்கிரி திருத்தலம் ஒன்றே பஞ்சபூதத்தலமாகவும், பஞ்சமுகக் கிரிகளைத் தன்னுள் அடக்கியதாகவும் காட்சியளிக்கிறது. இங்குப் பெருமான் பஞ்சலிங்கேஸ்வரராகவும், இறைவி மனோன்மணி என்ற பார்வதியாகவும் இருக்கின்றார்கள்.பிரபஞ்சத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த இடமாக இம்மலை கருதப்படுகிறது.
பூண்டி, அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோயிலானது கோவை மாநகரிலிருந்து மேற்கே சுமார் 36 கி.மீட்டதூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமையப்பெற்றுள்ளது. இது கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றாகும். இங்கு வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. தாயார் மனோன்மணி அம்மன் என்ற திருநாமத்துடன் காட்சி தருகிறார். இங்கு தியான லிங்கமும் உள்ளது. மலையேறி செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வெள்ளியங்கிரி ஆண்டவரை வழிபட்டு செல்கின்றனர். அதோடு ஐந்து விநாயகர்கள் காட்சி தரும் பஞ்ச விநாயகர் மண்டபம், பக்தர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்கான மண்டபம் உள்ளிட்டவைகளும் அமைந்துள்ளன. வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்கள் முதலில் இங்கு வந்து வழிபட்ட பிறகே மலையேறி செல்கின்றனர். இதற்கு மேல் 3500 அடி உயரம் கொண்ட ஏழு மலைகள் காணப்படுகின்றன. இதன் ஏழாவது மலையின் உச்சியில் உள்ள குகையில் சுயம்பு லிங்கம் ஒன்று உள்ளது. இந்த ஏழுமலை ஏறிச் செல்வது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. இந்த மலையில் வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை ஆகிய இடங்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய இடங்களாகும்.
இறை தன்மையும் எழிலும் மிகுந்து காணப்படும். இந்த இடம் கொங்கு நாட்டின் மேற்கு எல்லையாக விளங்குகிறது. வெள்ளிபொருப்பு, தென்கைலாயம் என பல்வேறு பெயர்களில் வழங்கப் பெறுகிறது. ஆறு ஆதாரங்களையும் கடந்து அப்பால் சிவசோதி நடனத்தைக் காண்பது போல,ஆறு மலைகளையும் கடந்து முடிவில் ஏழாவது மலையாக வெள்ளியங்கிரி விளங்குகிறது. ஆறாயிரம் அடி உயரமுள்ள இம்மலையின் உச்சியிலள்ள குகையில் சிவபெருமான் வெள்ளியங்கிரி ஆண்டவர், ஐந்து (சுயம்பு) இலிங்கங்களாக எழுந்தருளியுள்ளார். இத்தலத்திற்கு கோடைகாலமாகிய தை,மாசி, பங்குனி, சித்திரை ( பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ) மாதங்களில் இலட்சக்கணக்கான மக்கள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், நாட்டின் பிற மாநிலங்களில் இருந்தும் வந்து கடினமாக முயன்று மலைமீது ஏறி வழிபடுகின்றனர். மலையின் மீது ஏறி வழிபட இயலாதவர்கள் மலையின் அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி நாதரை தரிசித்து செல்கின்றனர்.மலையின் அடிவாரத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அருள்மிகு பூண்டி விநாயகர், வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மன் திருமேனிகளும் எழுந்தருளச் செய்யப்பெற்று பின்னர் கற்கோயிலும் எழுப்பப் பெற்றுள்ளது
வெள்ளியங்கிரியின் ஏழாவது மலையில் அமைந்துள்ள சிவலிங்கம், சுயம்புவாக தோன்றியதாகும். இங்கு பல சித்தர்கள் ஸ்தூல வடிவிலும், சூட்சும வடிவிலும் இன்னும் வசித்து வருகிறார்கள். இந்த மலையில் பயணம் செய்வது ஈசனை படிப்படியாக நெருங்கிச் செல்வதற்கு சமமானதாகும். இந்த ஏழு மலைகளும், மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்களை குறிப்பதாகும். இங்குள்ள ஆண்டி சுனையில் நீராடி விட்டு, சிவனை சென்று வழிபட்டால் உடலில் உள்ள நோய்கள் பலவும் நீங்குவதாக சொல்லப்படுகிறது. சில முக்கிய நாட்களில் இங்கு திடீரென சிவ பூஜைக்கான பிரணவ மந்திரமும் ஓலிக்கும் சத்தம், சிவனுக்குரிய பஞ்ச வாத்தியங்கள் முழங்கும் சத்தமும் கேட்பதாக பக்தர்கள் பலர் கூறுகின்றனர். இந்த சத்தங்கள் பூமிக்கு அடியில் வாசிப்படுவதாகவும், அந்த சத்தம் ஏழாவது மலை வரை கேட்பதாகவும் சொல்லப்படுகிறது. இது தவிர சங்கின் ஒலி, வேத மந்திரங்கள் ஒலிக்கும் சத்தமும் அவ்வப்போது கேட்பதாகவும் பக்தர்கள் கூறுவதுண்டு.
வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்தால் கைலாயத்திற்கு சென்று சிவனை தரிசித்த பயன் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இக்கோவிலை அடைந்து ஈசன் முன் நிற்கும் போது நாம் அடையும் மகிழ்ச்சி, பூரிப்பு ஆகியவற்றை சொல்ல இயலாது. ஏழு மலைகளை சிரமப்பட்டு ஏறி வந்த உடல் களைப்பு, மனச்சோர்வு, அசதி கால்வலி அனைத்தும் ஈசனைக் கண்ட அந்த ஒரு நொடிப் பொழுதில் மறைந்து விடுகிறது.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025