முருகனின் வேலுக்கு அப்படி என்ன சிறப்பு.
வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை” முருகப்பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம்.
நாம் வணங்கும் தெய்வங்கள் பெரும்பாலானவை ஆயுதம் ஏந்திய தெய்வங்களே. அந்த வரிசையில் பார்வதி, சிவபெருமான், முருகன் மற்றும் காவல் தெய்வங்களை குறிப்பிட்டு சொல்லலாம். முருகன் என்றாலே நம் நினைவிற்கு வருவது மயிலும், வேலும் தான். புராணங்களின் படி அதிக முக்கியத்துவம் வாய்ந்த மிக முக்கியமான ஆயுதமாக முருகனின் வேல் கருதப்படுகிறது.
சூரபத்மன் எனும் அரக்கனை அழிக்க பார்வதிதேவி தன்னுடைய சக்திகள் அனைத்தையும் திரட்டி வேலை வடிவமைத்து, அதனைக் கொண்டு சூரனை வதைக்கச் சொன்னதாக புராணங்கள் கூறுகின்றன. அதாவது வேல் என்பதே சக்தியின் அம்சம். அதனாலேயே வேலிற்கு சக்திவேல் என்ற பெயரும் உண்டு. முருகப்பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு ‘வெற்றிவேல்” என்ற பெயரும் உண்டு.
“வெல்” என்ற வினைச்சொல்லே நீண்டு ‘வேல்” என்ற பெயர்ச்சொல் ஆகிறது. ஆகவே, வேல் என்றால் வெற்றி என்று பொருள்படும். பராசக்தியின் வடிவமே வேலாயுதம் என்பார்கள். அறிவு, ஞானம், பொருள், இன்பம், திருவருள், திருவருட்சக்திமுதலிய சொற்கள் வேலின் உருவமாக உள்ள பராசக்தியையே குறிப்பனவாகும்.
வேல் உணர்த்துவது என்னவென்றால்… வேலின் அடிப்பகுதி ஆழமாகவும், இடைப்பகுதி விசாலமாகவும், நுனிப்பகுதி கூர்மையாகவும் திகழ்கிறது. வேலைப்போன்று அறிவானது கூர்மையானதாகவும், அகன்றும், ஆழமாகவும் இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துவதாக இருக்கிறது.
முருக வழிபாட்டில் தொன்மை வாய்ந்தது வேல் வழிபாடு. இன்றும் பல முருகன் கோவில்களில் வேலுக்கு மட்டுமே பூஜை செய்து கொண்டிருக்கின்றனர். வேல் வழிபாட்டின் எளிமைப்படுத்தப்பட்ட நவீன வடிவமே சக்திவேல் வழிபாடு. சக்திவேலை வணங்குவது என்பது அன்னை பராசக்தியையும், தனயன் முருகனையும் ஒருசேர வணங்குவதாகும்.
மனம் பாரமாக இருக்கும் நேரங்களில் மனதுக்குள் சக்திவேலை நினைத்துக் கொண்டு ‘ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க” என்று சொன்னால், மனம் லேசாகி விடும்.
வேல் வழிபாட்டின் பலன்கள்:
காரிய தடைகள் விலகி திருமணம் கைகூடும், குழந்தைப்பேறு கிடைக்கும்.
கல்வியில் மேன்மை, மன பயம் நீங்கி வலிமை உண்டாகும்.
வியாபாரத்தில் இலாபம், பில்லி சூனியம், நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.
சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மரண பயம் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம்.
சொந்தமாய் வீடு மற்றும் நினைத்த காரியம் நினைத்தப்படியே நிறைவேறும்.
கலைகளில் தேர்ச்சி, பாவங்கள் தீர்ந்து புண்ணியம் பெருகும்.
வெற்றிவேல், வீரவேல் என முழங்கும் இடத்தில் வேலின் ஆற்றலும், முருகனின் ஆசியும் அனைவருக்கும் கிடைக்கும்
வேலை வழிபடுவது எப்படி?
நம் வசதிக்கு ஏற்ப ஏதாவது ஒரு உலோகத்தால் ஆன வேலை முதலில் வாங்கி வர வேண்டும்.பிறகு நாம் அதற்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்ய வேண்டும். முதலில் எப்படி அபிஷேகம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம். அபிஷேகம் செய்வதற்கு காய்ச்சாத பால், விபூதி, பன்னீர், சந்தனம், குங்குமம் தேவைப்படும்.
முதலில் வேலை சுத்தமான தண்ணீரால் கழுவவேண்டும். பிறகு ஒரு செம்பு தட்டை வைத்து அதன் மேல் வெள்ளிக் கிண்ணம் அல்லது செம்பாலான பாத்திரத்தை வைத்து அதில் பச்சரிசியை நிரப்பி அதன் நடுவே வேல் நிற்பது போல வைக்க வேண்டும்.பிறகு காய்ச்சாத பாலை ஊற்றி அபிஷேகம் செய்து, வேலின் நடுவில் சந்தனம் குங்குமம் வைத்து கற்பூர ஆராதனை காட்ட வேண்டும்.
பிறகு தண்ணீரை ஊற்றி அதை கழுவி விட வேண்டும். அடுத்ததாக விபூதியை வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு பன்னீரையும் சந்தனத்தையும் ஒன்றாக கரைத்து அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் முடிந்த பிறகு வேலை அரிசியில் இருந்து எடுத்து சுத்தமான துணியைக் கொண்டு துடைக்க வேண்டும். பிறகு செம்பு பாத்திரத்தில் இருக்கும் அரிசியை எடுத்து வேறொரு தட்டில் கொட்டிவிட்டு, செம்பு பாத்திரத்தை சுத்தமான துணியை கொண்டு துடைத்துவிட்டு அதில் புதியதாக பச்சரிசியை நிரப்பிவிட்டு வேலை மீண்டும் அதில் நிற்க வைக்க வேண்டும். தட்டில் இருக்கும் அபிஷேக நீரை நாம் தீர்த்தமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
அபிஷேகம் முடிந்த பிறகு நாம் வேலுக்கு அலங்காரம் செய்ய வேண்டும். அலங்காரம் முடிந்த பிறகு அர்ச்சனை செய்ய துவங்கலாம். அர்ச்சனை செய்ய செவ்வரளி பூ அல்லது பன்னீர் ரோஜா சிறந்தது. வேல் பதிகத்தை பாடி அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் 108 முறை “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்யலாம். நெய்வேத்தியமாக வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் மற்றும் தேங்காய் வைக்கலாம். தங்கள் வசதிக்கேற்ப சர்க்கரைப் பொங்கல், பாசிப்பருப்பு பாயாசம் என்றும் கூட செய்யலாம். இந்த வேல் வழிபாட்டில் கடைசியாக நாம் மறக்காமல், கண்டிப்பாக கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
இந்த வழிபாட்டை நாம் காலையிலோ அல்லது மாலையிலோ செய்யலாம். மேலும் இந்த வழிபாட்டை செய்யக்கூடிய நாட்களாக கருதப்படுவது முருகனுக்கு உகந்த நாட்களான சஷ்டி, கிருத்திகை, விசாக நட்சத்திரம் உள்ள நாட்கள், பரணி நட்சத்திரம் உள்ள நாட்கள், செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை போன்றவை ஆகும். இந்த நாட்கள் அனைத்திலும் செய்ய இயலாதவர்கள் மாதம் ஒரு முறையோ அல்லது வாரத்தில் ஒருமுறையோ இந்த பூஜையை மேற்கொண்டு வரலாம்.
மேற்கூறிய முறையில் முருகனின் வேலுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் 21 நாட்கள் செய்து வருவதால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சனைகளும் தீருவதற்கான வழி பிறக்கும். தொழில், வியாபாரம் அல்லது இன்ன பிற விஷயங்களில் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். செவ்வாய் தோஷம் ஏற்பட்டு நீண்டகாலமாக திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு நல்ல அழகான, ஆரோக்கியமான குழந்தைப் பேறு கிடைக்கும். உங்களையும் வீட்டையும் பீடித்திருக்கும் துஷ்ட சக்திகள் ஒழியும். காரியத் தடை, தாமதங்கள் நீங்கும்.
எந்த நாட்களில் கடவுள் முருகனின் வேல் வழிபாடு செய்வது நல்லது?
“வேலுண்டு வினையில்லை” என்ற கூற்றுக்கு ஏதுவாக, வேலை வணங்குபவர்களுக்கு எந்த தீவினைகளும் நெருங்காது என்பார்கள்.
முருகனுக்கு வேலை அருளியவர் சிவபெருமான். அந்த வேலுக்குச் சக்தியை அளித்தவர் பராசக்தி. இதனால் இரட்டைச் சிறப்புகள் வேலுக்குக் கிடைக்கின்றன.முருகனின் ஆறாம்படை வீடான சோலையில் இன்றும் வேல்தான் மூலவராக உள்ளது.வேலைத் தினமும் வழிபடுவது நல்லது. குறிப்பாக செவ்வாய்க் கிழமைகளிலும், வெள்ளிக் கிழமைகளிலும் வேலை நிச்சயம் வழிபடவேண்டும். மேலும், கிருத்திகை பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதல் முருகனுக்குரிய நாட்களில் வேல் வழிபாடு மிக அவசியம் ஆகும்.
September 12, 2025
September 12, 2025
September 11, 2025