கலியுகத்தின் கண் கண்ட தெய்வமாக விளங்கும் கந்தப் பெருமானாம் முருகனுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் உள்ளன். அந்த பல்வேறு கொண்டாட்ட காலங்களுள் விரத காலமாக நாம் கொண்டாடும் திருநாள் அல்லது விரத நாள் தான் தைப் பூசத் திருநாள். முருகனின் வழிபாடு நமக்கு வேண்டியதை பெற்றுத் தரும் வல்லமை மிக்கது. எதை நினைக்கிறோமோ அது நியாயமாக இருக்கும் பட்சத்தில் அது நமக்கு கிடைக்கும்.
வந்த வினையும் வருகின்ற வல் வினையும் கந்தன் என்று சொல்லக் கலங்கி நிற்குமே என்று பெரியோர்கள் கூறுவார்கள். இந்த பிறவியே நமக்கு வினைப் பயனால் தான் ஏற்பட்டுள்ளது. அந்த வினைப் பயனை நீக்கி நமக்கு நல்லருள் புரியும் முருகனை, தைப் பூசம் அன்று வழிபடுவது மிகவும் சிறப்பு. வினை என்பது நாம் செய்யும் கர்மா அல்லது செயல்கள். கடந்த கால செயல்களின் பயனைக் கூட இந்த காலம் நாம் அனுபவிக்க நேரலாம். அது தீய வினையாகவும் இருக்கலாம். நல்ல வினையாகவும் இருக்கலாம். நமது தீய வினைகளை நாம் அனுபவிக்கும் காலமாக, குறிப்பாக ஏழரை சனி காலம் அமைகிறது என்றால் அது மிகை ஆகாது. நாம் செய்த செயலுக்கு ஏற்ப பலன்களை நமக்கு தவறாமல், சிறிதும் தப்பாமல், சிறு துளியும் பிசகாமல் அளிப்பவர் சனி பகவான். நாம் எல்லாருக்கும் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி என சனியின் எந்தக் காலம் என்றாலும் பயம் தான். என்ன பிரச்சினைகளை நாம் சந்திக்க வேண்டியிருக்குமோ என்று அஞ்சி நடுங்கும் காலம் என்று கூறலாம். ஆனால் இந்தக் காலம் நமக்கு படிப்பினையை வழங்கும் காலம் எனலாம். . நாம் செய்த நல்லது கெட்டதற்கு ஏற்ப, நமக்கு பரீட்சை நடத்தப்படும் காலம் தான் இந்த ஏழரை சனிக்காலம். வல்வினையை கலங்கச் செய்யும் கந்தனாம், முருகப் பெருமானை தைப்பூசம் அன்று விரதம் இருந்து வழிபட சனி தோஷங்கள் கூட நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம்.
தை மாதத்தில் வரக்கூடிய பூசம் நட்சத்திரத்தில், முருகப்பெருமானை நினைத்து எவர் ஒருவர் எளிமையாக வழிபாட்டை மேற்கொள்கிறார்களோ, அவர்களுக்கு சனி பகவான் அதிக கஷ்டங்களை அளிப்பதில்லை.அன்றைய தினம் முருகன் கோவிலுக்கு சென்று, வரிசையில் நின்று முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். வழபாடு முடிந்த உடன் ஏழை எளியவர்களுக்கும், சாது சந்நியாசிகளுக்கும் உங்களால் முடிந்த அளவு அன்னதானம் செய்வது சிறப்பு, முருகன் உங்களை சனி தோஷத்தில் இருந்து காத்தருள்வார். குறிப்பாக அன்றைய தினம் விரதம் இருப்பது சிறப்பு. வீட்டிலும் முருகப் பெருமான் படத்திற்கு விளக்கேற்றி மாலைகள் சூட்டி நைவேத்தியங்கள் செய்து, தூப, தீப ஆராதனை மேற்கொள்ள வேண்டும். பிறகு கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் ஓரு பொழுது இருக்கலாம். அசைவம் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
முருகனுக்கு அறுபடை வீடுகள் உண்டு. அனைத்து தலங்களிலும் தைப் பூசம் அன்று வழிபாடு நடக்கும். என்றாலும் பழனி முருகனுக்கு நடைபெறும் தைப்பூச வழிபாடு மிகவும் விசேஷம் ஆகும். அங்கு இத்திருவிழா கோலாகலமாகவும் விமர்சையாகவும் நடைபெறும். காரணம் என்ன தெரியுமா? முருகன் வெவ்வேறு தலங்களில் வெவ்வேறு வடிவில் காட்சி அளிக்கிறார். அரச கோலத்தில், சாது கோலத்தில், என பல்வேறு வடிவங்களில் காட்சி தருகிறார். ஆனால் பழனி மலையில் இந்தக் கோலம் உலக மாயையை உணரத்துகிறது. நேற்று இருப்பது இன்று இல்லை. இந்த மாயையான, போலியான வாழ்வில், எதுவுமே இல்லாமல் இந்த பூமிக்கு வந்து, எதுவுமே இல்லாமல் பூமியிலிருந்து செல்கின்றோம். இதுவே முருகன் உணர்த்தும் தத்துவம். இதை தான் பழனி மலையிலும் சொல்லப்படுகிறது. எதுவுமே நிலை இல்லை. இந்த மாய உலகத்தில். தேவைக்கு ஏற்ப மட்டும் வைத்துக் கொண்டு தேவைக்கு அதிகமாக இருப்பதை இல்லாதவர்களுக்கு உதவி செய் என்று சொல்கிறது முருகன் வழிபாடு. நீங்களும் வரவிருக்கும் தைப்பூசத் திருநாளன்று மிக மிக எளிமையான முறையில் முருகப் பெருமானை வழிபாடு செய்து உங்களால் இயன்ற அளவுக்கு அடுத்தவர்களுக்கு அன்னதானத்தையும், உதவியும் செய்யுங்கள். முருகனின் அருளைப் பெற்று நலமாக வாழ்ந்திடுங்கள்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025