தோரணமலை தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் புறநகர்ப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு மலை மற்றும் அதனைச் சார்ந்துள்ள பகுதியாகும்.தென்காசி புறநகர்ப் பகுதியிலிருந்து, கடையம் நோக்கி செல்லும் வழியில் தோரணமலை அமைந்துள்ளது. படுத்திருக்கும் யானை போல் காட்சியளிப்பதால் இம்மலை, ‘வாரணமலை’ என அழைக்கப்பட்டு, பின்னர் மருவி ‘தோரணமலை’ என்று கூறப்படுகிறது. வாரணம் என்பதற்கு யானை என்று பொருள். இந்த மலைக்கு தென்புறம் ராமா நதியும் வடக்கு பக்கம் ஜம்பு நதியும் தோரணம் போல சுற்றி ஓடுவதால் இதற்கு தோரணமலை என்ற பெயர் வந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.அறுபத்து நான்கு சுனைகள் கொண்ட தோரணமலையில், அந்த சுனைகளின் நீராலேயே, அங்குள்ள முருகன் கோயிலின் மூலவர் அபிசேகம் நடைபெறுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 432 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. புராண காலத் தொடர்புடைய தோரணமலை, அகத்திய முனிவர் மற்றும் அவருடைய சீடர் தேரையர் ஆகியோர் வாழ்ந்த பகுதியாகும். மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகள் நிறைந்த பகுதியாகும் தோரணமலை. அகத்தியர் மற்றும் தேரையர் ஆகியோரால் முதல் மண்டை ஓடு அறுவை சிகிச்சை நடைபெற்ற இடம் தோரணமலை.
ஒருமுறை மன்னர் காசி வர்மனுக்கு தீராத தலைவலி ஏற்பட்டது. எத்தனையோ வைத்தியர்கள் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இந்த நிலையில் தான் அகத்தியர் தனது சீடர்களுடன் தோரண மலைப்பகுதியில் முகாமிட்டிருப்பதை அறிந்தார். உடனே அகத்தியரைச் சென்று சந்தித்தார். காசிவர்மன் மன்னரின் நாடியை பிடித்து பார்த்து ” மன்னா உனது தலைவலி விசித்திரமானது . அந்த தலைவலிக்கு காரணம் ஒரு தேரை” என்றார். மன்னருக்கு மேலும் வியப்பு ஏற்பட அதோடு அச்சமும் தொற்றிக் கொண்டது. “என்ன சொல்கிறீர்கள் முனிவரே? என் தலைக்குள் எப்படி தேடி சென்றது?” என்று குழப்பத்துடன் வினா எழுப்பினர். ஒருமுறை வேட்டையாடச் சென்ற நீ வனத்தில் ஓய்வெடுத்த போது சிறிய தேரை ஒன்று உன் நாசி வழியாக தலைக்குள் புகுந்து விட்டது. அது தற்போது வளர்ந்த நிலையில் காணப்படுகிறது. அதனால்தான் உனக்கு இந்த தலைவலி. இந்த வலி நீங்குவதற்கு கபால அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார் அகத்தியர். அறுவை சிகிச்சை செய்ய அகத்தியர் தயாரான போது அவருக்கு உதவிகரமாக இருந்தவர் ராமதேவர். மூலிகை ஒன்றால் மன்னரை மயக்கம் அடையச் செய்த அகத்தியர் மன்னரின் தலையைப் பிளந்து அங்கு தேரை இருக்கும் இடத்தை கண்டுபிடித்தார். ஆனால் மூளைக்கோ, தலையில் உள்ள சிறு நரம்புகளுக்கோ எவ்வித பாதிப்பும் இன்றி தேரையை வெளியே எடுப்பது எப்படி என்று அகத்தியர் யோசித்தார். அப்போது ராமதேவர் , ஒரு சட்டியில் தண்ணீர் கொண்டு வந்து அதை மன்னரின் தலை அருகில் வைத்து ஒரு குச்சியால் தண்ணீரை அலசி சலசலவென சத்தம் வரும்படி செய்ததால் தண்ணீர் சத்தத்தை கேட்ட தேரை தாவிக் குதித்து வெளியேறி தண்ணீருக்குள் விழுந்தது. இதை அடுத்து ‘சந்தான கரரணீ’ என்ற மூலிகையைக் கொண்டு மன்னரின் பிளந்த தலையை அகத்தியர் ஒட்ட வைத்தார். மயக்கம் தெளிந்து எழுந்த மன்னர் தலைவலி குணமானதை உணர்ந்து அகத்தியருக்கு நன்றி தெரிவித்தார்.அறுவை சிகிச்சையின் போது சமயோஜிதமாக தண்ணீரை கொண்டு தேரையை வெளியேற்றியது ராமதேவன் தான் என்று பாராட்டிய அகத்தியர் அவருக்கு தேரையர் என்ற பட்டத்தையும் வழங்கினார். அதுவே ராமதேவரின் நிரந்தர பெயராக மாறிப்போனது.
அகத்தியரும் தேரையரும் தோரணமலையில் இருக்கும்போது தமிழ் கடவுளாம் முருகனை சிலை வைத்து வணங்கி வந்தனர். அவர் இங்கேயே சமாதி நிலையை அடைந்தார். காலப்போக்கில் அங்கு வழிபாடு நின்றுபோனதோடு முருகன் சிலையும் காணாமல் போனது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் ஆதிநாராயணன் அவர்களது மூதாதையர் ஒருவர் கனவில் முருகப்பெருமான் வந்து தான் தோரணமலையில் இருப்பதாகவும் அங்கு சுனையில் மறைந்து கிடக்கும் சிலையை குகையில் நிறுவி வணங்கும்படியும் கூறினார். அதன்படி அவர் அங்கு வந்து சுனையில் மறைந்திருந்த முருகனை மீட்டு குகையில் ஸ்தாபித்து வணங்கி வந்தார். சித்தர்கள் வழிபட்ட முருகன் என்பதால், தோரணமலை முருகனை வணங்கினாலே எந்த தோஷமும் நம்மை நெருங்காது என்பது ஐதீகமாகும்.
கோவிலின் சிறப்பம்சங்கள்
இக்கோயில் 64 சுனைகள் கொண்ட மலையில் அமைந்துள்ளது.கோவிலின் முக்கிய தெய்வம் பல சித்தர்களால் வழிபட்டதாக நம்பப்படுகிறது.பக்தர்களுக்கு மன அமைதியை தரும் இடமாக இக்கோயில் திகழ்கிறது.பக்தர்கள் நோயிலிருந்து நிவாரணம் பெறும் தலமாக இக்கோயில் விளங்குகிறது.இக்கோயில் பக்தர்களுக்கு துன்பங்களைத் தவிர்க்கும் இடமாக விளங்குகிறது.
பிற சந்நிதிகள்
தோரணமலை முருகனைப் பார்க்க ஆரம்பத்தில் மலைப்பாதை கரடுமுரடாக இருந்தது, ஏறிச்செல்வது என்பது கடினமாக இருந்தது ஆனால் முருகனை வழிபட்டு பலன் பெற்ற பக்தர்கள் பலர் தந்த நன்கொடையால் இன்று எளிதில் மலைக்கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகளும், நடு நடுவே ஒய்வெடுக்க மண்டபமும் அமையப்பெற்றுள்ளது.மலை மீது ஏற முடியாதவர்களுக்காக மலை அடிவாரத்திலேயே ஒரு முருகன் சன்னதியும் உள்ளது.மகனுக்கு அருகில் அன்னை இருப்பது போல் இங்கு முருகன் சன்னதிக்கு எதிரே பத்திரகாளியம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். மலையேறி வரும் பக்தர்கள் அன்னையை வழிபட்ட பின்னரே முருகனை தரிசிக்க வேண்டும். மலையடி வாரத்தில் வல்லப விநாயகர், பாலமுருகன் சன்னதிகள் உள்ளன. உற்சவ மூர்த்தியும் இங்கேதான் உள்ளது. மலையேற முடியாதவர்கள் உற்சவ மூர்த்தியை வழிபட்டு செல்வார்கள். சிவன், கிருஷ்ணன், லட்சுமி, சரஸ்வதி மற்றும் நாகர், சப்த கன்னியர், கன்னிமாரம்மன், நவகிரக சன்னதிகளும் இங்கு உள்ளன. மலைக்கோவிலுக்கு செல்வதற்கு அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
திருவிழாக்கள்
இந்த கோவிலில் தைப்பூச திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தை யாத்திரையுடன் கொண்டாடுவது வழக்கம்.வைகாசி விசாகம்,கடைசி வெள்ளி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.நாள்தோறும் அன்னதானம் உண்டு.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025