Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
திருவிடைமருதூர் வந்து பரிகாரம் செய்தாலே பாவங்கள் விலகும்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

திருவிடைமருதூர் வந்து பரிகாரம் செய்தாலே பாவங்கள் விலகும்

Posted DateNovember 7, 2023

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் என்ற ஊரில் ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோயில் உள்ளது. இது மகாலிங்க சுவாமிக்கும் அவரது துணைவி ஸ்ரீ பிருதசுந்தரகுஜாம்பிகைக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் காவிரி கரையில் அமைந்துள்ள 30ஆவது சிவத்தலமாகும்.. இத்தலம் திருவிசைப்பா , திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். கருவூர்த் தேவர், மாணிக்கவாசகர், பட்டினத்தார் ஆகியோரும் இத்தலத்தை பாடியுள்ளனர். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

ஸ்ரீ மகாலிங்க ஸ்வாமியின் கோவில் வாரணாசிக்கு இணையாக, ஒரு புனித தலமாக கருதப்படுகிறது. இக்கோயிலில் ஐந்து நிலை ராஜகோபுரங்கள் உள்ளன. இந்த கோவிலில் மேரு மலையின் பிரதி நிறுவப்பட்டுள்ளது. மூகாம்பிகை அம்மன் சன்னதி கொல்லூர் மூகாம்பிகை கோவிலின் சன்னதியை மிகவும் ஒத்திருக்கிறது. கிழக்குப் பகுதியில் உள்ள கோயில் கோபுரங்களில் ஒன்றில் ‘சோழ பிரம்மஹத்தி’ என்ற அரக்கனின் சிற்பம் உள்ளது.

thiruvidaimaruthur

பஞ்சலிங்க க்ஷேத்திரம் :

ஒரே கோவில் வளாகத்தில் சிவபெருமானின் ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இது “பஞ்சலிங்க க்ஷேத்திரம்” ஆகும். அவை நான்கு வெவ்வேறு திசைகளில் வைக்கப்பட்டுள்ளன, ஐந்தாவது சன்னதியின் மையத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள மற்ற சன்னதிகள் கிழக்கு வீதியில் விஸ்வநாதர், மேற்கு வீதியில் ரிஷிபுரீஸ்வரர், தெற்கு வீதியில் ஆத்மநாதர் மற்றும் வடக்கு வீதியில் சொக்கநாதர். இது புனித பட்டினத்தார் பிறந்த ஊர்.அதாவது தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மஹாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது.

தலச் சிறப்பு :

இந்த கோவிலின் புராணக்கதை, வரகுண பாண்டிய மன்னனுடன் தொடர்புடையது. ஒரு சமயம் வரகுண பாண்டியன் வேட்டையாட காட்டிற்குச் சென்றான். திரும்புவதற்கு கால தாமதமாகிவிட்டது. இரவு நேரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவ்வாறு திரும்பும் சமயத்தில் வழியில் ஒரு அந்தணன் உறங்கிக் கொண்டு இருந்தான். வரகுண பாண்டிய மன்னனின் குதிரை தற்செயலாக அந்த அந்தணனை மிதித்து விட்டது. இதனால் அந்த அந்தணன் இறந்து விட்டான். இது கொடூரமான குற்றங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அந்தணனை கொன்ற பாவத்தால் மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்து விட்டது. மேலும் அந்த அந்தணன் ஆவியும் அவன் உடலில் புகுந்து விட்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன், சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான்.

அப்போது திருவிடைமருதூர் சென்று அங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

கோவிலின் மூன்று பிரகாரங்கள்:

இக்கோவில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

அஸ்வமேதப் பிரகாரம்:

இது வெளிப் பிரகாரம். இந்த வெளிப் பிரகாரத்தை அஸ்வமேதப் பிரகாரம் என்று அழைப்பார்கள். அஸ்வமேத பிரகாரத்தை சுற்றுவது அஸ்வமேத யாகம் நடத்துவதற்கு சமம் என்பது நம்பிக்கை.

கொடுமுடிப் பிரகாரம்:

இது இரண்டாவதும், மத்தியில் உள்ள பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.

ப்ரணவப்பிரகாரம்:

இது மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

தலச் சிறப்பு

வரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய தலமென்பதால் “பிரம்மஹத்தி” தோஷ நிவாரண தலம் இது. அருள்மிகு மகாலிங்கஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். மகாலிங்கேஸ்வரர் திருத்தலத்தை சுற்றி நான்கு வீதிகளிலும் சிவ ஸ்தலங்கள் உள்ளதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலம் என்றும் அழைக்கப்படுகிறது.[1] இத்தலத்தின் தலவிநாயகர் ஆண்ட விநாயகர். இத்தலத்தில் சுவாமி, அம்பாள் இருவரது சந்நிதிகளும் கிழக்கு நோக்கியவை. 27 நட்சத்திர லிங்கங்கள் இங்கு அமைந்துள்ளன. தமிழ்நாட்டிலே மகாலிங்கேஸ்வரர் திருத்தேர் மூன்றாவது பெரியத் தேர் ஆகும். பட்டினத்தார் மற்றும் பத்திரகிரியார் ஆகியோர்க்கு கிழக்கு மற்றும் மேற்கு கோபுர வாசல்களில் சன்னதி உள்ளது.

கோவிலின் தீர்த்தம்

காருண்யாமிர்த தீர்த்தம், சோம தீர்த்தம், கனக தீர்த்தம், கல்யாண தீர்த்தம், ஐராவத தீர்த்தம் என ஐந்து கோவில் குளங்கள் உள்ளன.

கோவிலின் தல விருட்சம்

அர்ஜுன மரம் (தமிழில் மருத மரம்) கொண்ட சிவபெருமானின் சன்னதிகளில் இதுவும் ஒன்று, ஸ்தல விருட்சம், புனித மரம்.மருத மரத்தைத் தல மரமாகக் (ஸ்தல விருட்சம்) கொண்டு சிறப்புற விளங்குகின்ற சிவன் கோயில்கள் இந்தியாவில் மூன்று. முதலாவது ஆந்திரப்பிரதேசம் கர்னூல் அருகே உள்ள மல்லிகார்ஜுனம் எனும் திருக்கோயில். இரண்டாவது மத்தியார்ஜுனம் எனப்படுகின்ற தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூரா. மூன்றாவது புடார்சுனம் எனப்படுகின்ற தமிழ்நாடு திருநெல்வேலிக்கு அருகே [அம்பாசமுத்திரம்] அருகில் உள்ள திருப்புடைமருதூர். இவை முறையே மல்லிகார்ஜுனம், மத்தியார்ஜுனம், புடார்சுனம் (தலைமருது, இடைமருது, கடைமருது) எனப் புகழப்பெறுகின்றன.

நட்சத்திர லிங்கங்கள்:

இங்கு 27 நட்சத்திரங்களுக்கும் 27 இலிங்கங்கள் உள்ள நட்சத்திர இலிங்க சந்நிதியும், பிற கோயிகளிலும் வேறுபட்டதாக இடம் மாறி நவக்கிரக விக்கிரகங்கள் உள்ள நவக்கிரக சன்னதியும் அமைந்துள்ளன.

கோவிலின் முக்கிய திருவிழாக்கள்

இக்கோயிலின் முக்கிய திருவிழாக்களில் கோவில் தேர் திருவிழாவும் ஒன்று. இது 89 அடிகள் கொண்ட தமிழ்நாட்டின் மிகப்பெரிய கோவில் தேர்களில் ஒன்றாகும். தை பூசம் தமிழ் மாதமான தையில் பத்து நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது, இது கிரிகோரியன் நாட்காட்டியின் படி ஜனவரி மாதத்திற்கு ஒத்திருக்கிறது. தைப்பூசத்தின் கடைசி நாளில் தீர்த்தவாரி விழா கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதமான வைகாசியில், திருக்கல்யாணம் எனப்படும் திருக்கல்யாணம், அம்மன் இறைவனை நோக்கி துறவறம் பூண்ட காலத்தைக் குறிக்கும் அம்பாள் தபஸ் போன்ற விழாக்கள் முக்கியமானவை. இது தவிர, கோவிலில் தீபாவளி, பொங்கல், கார்த்திகை தீபம், நவராத்திரி மற்றும் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

வழிபட்டோர்:

உமா தேவியார், விநாயகர், முருகன், திருமால், இலட்சுமி, காளி, சரஸ்வதி, வேதங்கள், வசிட்டர், உரோமச முனிவர், ஐராவணம், அகத்தியர், சிவவாக்கியர், கபிலர், வரகுண பாண்டியன் ஆகியோர் வழிபட்ட தலம்.

பாவங்களை நீக்கும் தலம்:

நம் பிறப்பே கர்ம வினைகளின் அடிப்படையில் தான் அமைகிறது. நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் அனைத்தும் கர்ம வினையின் காரணமாகத் தான். இன்பங்களை அனுபவிப்பது எளிதாக இருக்கிறது. ஆனால் துன்பம் என்று வரும் போது தான் நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. பாவத்தின் பலன் தான் துன்பம். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான துன்பங்கள். ஒரு சிலருக்கு திருமணம் ஆவதில் தாமதம். ஒரு சிலருக்கு குழந்தைப் பேறு கிடைப்பதில் தாமதம். ஒரு சிலருக்கு வேலை கிடைப்பதில் தாமதம். ஒரு சிலருக்கு பணப் பிரச்சினை. இப்படி ஏதாவது ஒரு துன்பம் வாழ்வில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் பாவ செயல்களின் காரணமாக ஏற்படும் சாபம் மற்றும் தோஷங்கள் தான். திருவிடை மருதூர் தலம் பாவம் நீங்க்கும் தலமாக விளங்குகிறது. வரகுண பாண்டிய மன்னரின் தோஷம் நீக்கியது போல இத்தலத்து இறைவன் தன்னை வேண்டி வழிபடும் பக்தர்களின் பாவங்களை நீக்கி அவர்தம் துன்பங்களை துடைக்கிறார் என்பது ஐதீகம்.

கோவில் திறந்து இருக்கும் நேரம்:

காலை 5.00 மணி முதல் மதியம் 12.30 வரை நடை திறந்து இருக்கும். மாலை 4.30 முதல் இரவு 8:00 மணி வரை நடை திறந்து இருக்கும்.