AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now
திருவாப்புடையார் திருக்கோவில் | Thiruvappudaiyar Temple History in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

திருவாப்புடையார் திருக்கோவில்

தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் இத்தலம் 2 வது தலமாகும். இந்தக் கோவில் அருள்மிகு சுகந்த குந்தலாம்பிகை சமேத திருவாப்புடையார் திருக்கோவில் என்று அழைக்கப்படுகிறது. ஆப்புடையார், ஆப்பனூர் நாதர், விடபேச்வரர், ரிஷபுரேசர், அன்னவிநோதர் என்ற திருநாமங்கள் இங்குள்ள சிவனைக் குறிக்கும். அம்பிகை குழலம்மை என்று அழைக்கப்படுகிறாள். மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலுக்கு வடக்கே செல்லூர் எனும் பகுதியில், வைகைக் கரைக்கு அருகில் கோயில் கொண்டு, தன்னை நாடி வருவோர்க்கு அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் திருவாப்புடையார். தலவிருட்சம் வன்னி, கொன்றை, தீர்த்தம் வைகை, இடபதீர்த்தம்.

கோவில் பெயர்க்காரணம்

சங்க காலத்திலே ஒருமுறை பிரளயம் ஏற்பட்டுள்ளது. அப்போது பொங்கி வந்த ஆழிப்பேரலையானது தமிழகத்தையே அழித்து மேற்கே சென்றுள்ளது. பிரளயத்திற்குமேல் மற்றொரு பிரளயம் உண்டாகியுள்ளது. இதனால் எழுகடலும் பொங்கி எழுந்துள்ளன. அப்போது மதுரையின் வடக்கு எல்லையாக விளங்கும் யானைமலையும், தெற்கு எல்லையாக விளங்கும் திருப்பரங்குன்ற மலையும் தங்களது இடங்களிலிருந்து பெயர்ந்து ஆட்டம் கண்டுள்ளன. கடல் அலையானது பொங்கி எழுந்து வந்து யானைமலையையும் திருப்பரங்குன்ற மலையையும் மூழ்கடித்துள்ளன. மலைகளையெல்லாம் மூழ்கடித்த அந்த  ஆழிப்பேரலையானது மேற்குத் தொடர்ச்சி மலையையும் தாண்டிச் சென்று அரபிக்கடலில் கலந்துள்ளது.

மலைகள் எல்லாம் ஆடும்படியாக அடுக்கடுக்காகப் பிரளயம் உண்டானபோது பொங்கி எழுந்த கடல் அலையானது ஒரே சேறும் சகதியுமாக இருந்துள்ளது. இந்த அலையில் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால், ஒரேயொரு விருட்சம் (மரம்) மட்டும் இவ்வளவு பெரிய பிரளயத்திலும் ஆடாமல் அசையாமல் பூமி உருண்டையின் மேல் ஒரு ஆணியை அடித்து வைத்தது போல், அப்படியே நிலையாக ஆழிப்பேரலையை (சுனாமியை) எதிர்த்து நின்றது.

கடல் அலையால் அரிந்து வரப்பட்ட பொருட்கள் இந்த விருட்சத்தில் மேல் மோதி நிலைகொண்டு விருட்சத்திற்குப் பின்புறமாகச் சென்று, மணலும் சேறும் சகதியும் நிறைந்த ஒரு நீண்ட நெடிய மேட்டினை உருவாக்கிவிட்டது. இந்த மேட்டில் கடலிலிருந்து அடித்துவரப்பட்ட கடல்நீர், மணல், சகதி மற்றும் வரும் வழியில் இருந்த அனைத்து வகையான மரம் செடிகொடிகளும், மற்றும் உயிரினங்களும் படிந்து விட்டன.இவ்வாறு உண்டான மணல்மேட்டுப் படிமம் பலமைல் தூரத்திற்கு நீண்டு சென்றுள்ளது.

இப்போது பல இலட்சக்கணக்கான ஆண்டுகள் கழிந்து, யுகங்கள் மாறிவிட்டன. இத்தனை ஆண்டுகளில், பூமியின் மேற்பரப்பில் ஏற்பட்ட அழுத்தத்தினாலும் மற்றும் பல இயற்கைக் காரணங்களாலும் இந்தப் படிமமானது அப்படியே பாறைபோல் மாறிவிட்டது. இப்போது இந்த மேடானது, “நாகமலை“ என்று அழைக்கப்படுகிறது. யானைமலையும் திருப்பரங்குன்றமலையும் கடும்பாறைகளாக இருக்க, நாகமலைமட்டும் கடும் பாறையாக இல்லாமல், மணற்குன்றாக இருப்பதை இன்றும் காணலாம்.

பேரலையாலும் அசைக்க முடியாமல் பூமியின் மேல் ஆப்புப் (ஆணி அடித்தது) போன்று அசையாமல் நின்ற அந்த விருட்சமானது, காலப்போக்கில் படிமம் ஆகியுள்ளது. இப்போது “ஆப்புடையார்“ என்று அழைக்கப்படுகிறது. மிகப் பெரிய பிரளயத்திலும் அசையாமல் நின்ற திருவாப்புடையார் உள்ள பகுதியானது திருவாப்பனூர் என்று பெயர் பெயரலாயிற்று.

கோயில் அமைப்பு :

இக்கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை அதற்கு பதில் ஒரு முகப்பு வாயில் உள்ளது. அந்த முகப்பு வாயிலில் சுதை வடிவமாக சிவன் ரிஷபாரூடராக பார்வதி ,முருகர் மற்றும் விநாயகர் ஆகியோர் உள்ளார்கள். உள் நுழைந்தால் நாம் கொடிமரம் மற்றும் பலிபீடத்தை காணலாம் . இறைவன் சன்னதிக்கு முன் உள்ள மண்டபம் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது , இறைவன் சன்னதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது . கோயிலை வலம் வந்தால் விநாயகர் ,காசி விஸ்வநாதர் கோயில் ,பஞ்ச லிங்கம் ,சோழர் காலத்து சண்டீகேஸ்வரர் ஆகியவர்களை தரிசனம் செய்யலாம் . மற்றும் முருகர் சன்னதி அதற்கு முன் தலவிருட்சம்  வன்னி மரம் உள்ளது , வன்னி மரத்தின் அருகில் தாயார் சன்னதி உள்ளது . தயார் சன்னதிக்கும் இறைவன் சன்னதிக்கும் இடையில் முருகர் சன்னதி உள்ளதால் இவ்வமைப்பை சோமஸ்கந்தர் அமைப்பு என்பர்.

இங்கு தனி மண்டபத்தில் கல் சிற்பமாக நடராஜர் ,சிவகாமி அருகில் மத்தளம் வாசிக்கும் நிலையில் நந்திதேவர் காட்சியளிக்கிறார் . இச்சிலைகள் மிக அற்புதமான சிற்பவேலைப்பாடுகளுடன் உள்ளது இங்குள்ள தூண்களில் அழகிய சிற்பங்கள் உள்ளது .

பின்பு நவகிரக சன்னதி ,கைலாசநாதர் மற்றும் பைரவர் ,பழனி முருகர் ஆகியோர் சிறிய சன்னதிகளில் காட்சிதருகிறார்கள்.

தல புராணம் :

சோழாந்தக மன்னன் என்பவன் மிகச்சிறந்த சிவபக்தனாக இருந்தான். அவன் எப்போதும் சிவனை வழிபாடு செய்த பின்புதான் சாப்பிடுவான். ஒரு முறை அவன், தனது அமைச்சர் மற்றும் படைவீரர்களுடன் அருகிலிருந்த காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அப்போது, அழகிய மான் ஒன்று அவன் கண்ணில் பட்டது. உடனே அவன், அந்த மானை விரட்டிக் கொண்டு நடுக்காட்டிற்குள் சென்று விட்டான். அந்த மான் அவனது பிடியில் சிக்காமல் காட்டிற்குள் சென்று மறைந்து விட்டது.
மானை விரட்டிச் சென்ற மன்னன் களைப்பால் அவதியுற்றான். அப்படியே அந்தக் காட்டிற்குள் சோர்ந்து போய் அமர்ந்து விட்டான். அவன் பின்னால் சென்ற பாதுகாப்பு வீரர்கள், மன்னனின் சோர்வு நீங்க ஏதாவது சாப்பிடும்படி சொன்னார்கள். ஆனால் மன்னன், ‘சிவனுக்கு வழிபாடு செய்த பின்பே சாப்பிடுவேன்’ என்று சொல்லி மறுத்து விட புத்திசாலி அமைச்சர் ஒருத்தர், அந்த காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து தரையில் ஆப்பு அடித்தார். அதைக்காட்டி, “மன்னா, இங்கே ஒரு சுயம்பு லிங்கம் உள்ளது. நீங்கள் அதை பூஜை செய்த பின் உணவருந்தலாமே,” என்று யோசனை கூறினார். களைப்பிலிருந்த மன்னனும் அந்த ஆப்பை சுயம்புலிங்கம் என நினைத்து வணங்கி உணவருந்தி விட்டான். களைப்பு நீங்கிய பிறகு தான், தாம் வணங்கியது லிங்கம் அல்ல, அது ஒர் ஆப்பு என்பதை உணர்ந்து மிக வருந்தினான். சிவபூஜை செய்யாமல் உணவருந்திய வருத்தத்தில் இறைவனிடம் தான் இதுநாள் வரை இறைவனை பூஜித்தது உண்மையானால் இந்த ஆப்பில் வந்து என்னை அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்டினான். அப்படி இல்லாவிட்டால் உயிர் துறக்கவும் தயாரானான். மன்னனின் பக்திக்கு மகிழ்ந்த இறைவன் அந்த ஆப்பிலே தோன்றி அருள்பாலித்தார். சிவன் ஆப்பு உடையார் ஆனார். அந்த ஊர் ஆப்பனூர் ஆனது. கோவிலும் ஆப்புடையார் கோவில் என்று சிறப்புற்றது.

குபேரன்

பிரம்மனின் வழியில் வந்த புண்ணியசேனன் என்கிற சிவபக்தன், தான் பல கோடி செல்வத்திற்கு உரிய வராக வேண்டும் என்று நினைத்து, இந்தக் கோவிலுக்கு வந்து கடும் தவம் இருந்து வந்தான். அவனுடைய தவத்தில் மகிழ்ந்த ஆப்புடையார், சுகந்த குந்தளாம்பிகையுடன் அவன் முன்பாகத் தோன்றினார்.

புண்ணியசேனன் தன் முன்பாகத் தோன்றிய இறைவனிடம், தன்னைப் பெரும் செல்வமுடையவராக்க வேண்டுமென்று வேண்டினான். இறைவனும் அவனைப் பெரும் செல்வமுடையவனாக ஆக்கினார். பெரும் செல்வம் கிடைத்தவுடன், அவனிடம் ‘தான்’ எனும் ஆணவமும் சேர்ந்து கொண்டது. அந்த ஆணவத்தின் காரணமாக அவன், இறைவனின் அருகிலிருந்த அம்பிகையின் அழகில் மயங்கினான்

அதனை அறிந்த அம்பிகை அவனுடைய உயிரைப் பறித்தார். தன்னுடைய பக்தன் தெரியாமல் செய்த தவறை மன்னித்து, அவனை மீண்டும் உயிர்ப்பிக்க உதவும்படி அம்பிகையிடம் சொன்னார். அம்பிகையும் அதற்குச் சம்மதிக்க, இறைவன் அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தருளினார். இறைவனின் கருணையால் உயிர் பெற்ற அவன், தனது தவறுக்கு இருவரிடமும் மன்னிப்பு கேட்டான்.

அவனை மன்னித்த ஆப்புடையார், அவனுக்குக் ‘குபேரன்’ என்று புதுப்பெயரிட்டுப் புதிய வாழ்வு தந்தார். மேலும் பெரும் செல்வத்துடன் வடக்கு திசையைக் காத்து வரும்பணியை அவனுக்கு வழங்கிப் பெருமை சேர்த்தார். தன்னுடைய பக்தன் தவறு செய்த போதும், அவனை மன்னித்து, அவனுக்குப் பெரும்பணி கொடுத்த பெருமை இறைவனுக்கும் கிடைத்தது.

அன்னவினோதன்

சோழாந்தகனின் மரபு வழியில் வந்த சுகுணபாண்டியன் என்பவனது ஆட்சியில் கடுமையான பஞ்சம் நிலவியது. அப்போது இக்கோவில் அர்ச்சகர், நெல்லுக்குப் பதிலாக, வைகை ஆற்று மணலைக் கொண்டு சமைத்தார். அப்போது அந்த மணல் அன்னமாக மாறியது என்றும், அதனால் இத்தல இறைவனுக்கு ‘அன்னவிநோதன்’ என்கிற பெயர் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

இறைவனின் சிறப்பு!!

இந்தக் கோவில் மூலவரான சுயம்புலிங்கம் சிறியதாக இருப்பினும், இவரது பெருமை உயர்ந்தது என்கின்றனர். மலைகளில் மேருவைப் போலவும், பசுக்களுள் காமதேனுவைப் போலவும், விண்மீன்களுக்கிடையே சந்திரனைப் போலவும், ஒளியுடைய பொருட்களுள் சூரியனைப் போலவும், கொடையாளிகளுள் மேகத்தைப் போலவும், புருஷர்களுள் விஷ்ணுவைப் போலவும், இது போன்று எவையெல்லாம் சிறப்புடையதோ, அதே போல் இங்குள்ள இறைவனான ஆப்புடையார் மற்ற சுயம்புலிங்கங்களை விடச் சிறப்பு மிக்கவர் என்றும், இவரை வணங்கினால், அனைத்துத் தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்று இக்கோவிலுக்கான தலபுராணம் கூறுகிறது.

தல வழிபாட்டுப் பலன்கள்!!

இத்தலத்து இறைவனுக்கு ஒரு நெய்விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால் அது ஆயிரம் பசுக்களைத் தானம் செய்ததால் கிடைக்கும் பலனுக்கு இணையானதாகும்.

இத்தலத்து இறைவனை இளநீர் கொண்டு நீராட்டி வழிபட்டால், அது நூறு அசுவமேத வேள்வி செய்வதால் கிடைக்கும் பலனைத் தரக்கூடியது.

தாங்கள் செய்த தவறுகளால் அனைத்தையும் இழந்து வறுமைக்குள்ளானவர்கள், தங்களது தவறுகளை உணர்ந்து, இங்கு வந்து இறைவனை வழிபட்டால், அவர்கள் இழந்த அனைத்தையும் மீண்டும் பெறுவார்கள்.

இக்கோவிலில் இருக்கும் முருகப்பெருமானை செவ்வாய் தோஷமுடையவர்கள் வழிபட்டால், அவர்களுடைய தோஷம் நீங்கிச் சிறந்த பலன் கிடைக்கப் பெறுவார்கள்.

இக்கோவிலில் இருக்கும் இறைவியான சுகந்த குந்தளாம்பிகையை வழிபடுபவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாகும் பலனைப் பெறுவார்கள்.

கோவிலுக்கு செல்லும் வழி:

மதுரை மாநகரில் செல்லூர் பகுதியில் அமைந்திருக்கும் இத்தலத்திற்குச் செல்லூர் செல்லும் அனைத்து நகரப்பேருந்துகளிலும் செல்ல முடியும். கோரிப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் சிறிது தூரம் நடந்தும் இத்தலத்திற்குச் செல்லலாம்.