மனிதராகப் பிறந்த யாவரும் தனித் தனியானவர்கள் என்றாலும் பெரும்பாலும் ஒவ்வொருவரும் தனக்கேற்ற துணையுடன் வாழ விரும்புகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை ஆகும். ஒரு குறிப்பட்ட வயது வரை தான் தனியாக வாழ்வது இனிக்கும். பருவ வயது வந்து விட்டால் நமது மனம், உடல் மற்றும் ஆன்மா நமக்கேற்ற துணைக்கு ஏங்கும். இந்த ஏக்கம் திருமணம் என்னும் உறவின் மூலம் முடிவுக்கு வந்து விடும். இரு மனம் இணையும் திருமண உறவில் நாம் நம் குடும்பம் நம் குழந்தைகள் என்று வரும் போது தான் வாழ்க்கை முழுமை அடைகிறது. வாழ்வின் நிறைவை நோக்கிய பயணமான திருமணம் ஒரு சிலருக்கு குறிப்பிட்ட வயதில் அதிக முயற்சி இன்றி நடந்து விடுகிறது. ஒரு சிலருக்கு அதிக முயற்சிகள் தேவைப் படுகிறது. ஆனால் வேறு சிலருக்கோ பல காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
இன்றைய நாட்களில் பலரும் சந்திக்கும் பிரச்சினைகளில் திருமணத் தடையும் ஒன்றாகும். திருமணத் தடை என்பது பல காரணங்களால் ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு வீட்டுச் சூழ்நிலை காரணமாக இருக்கலாம். ஒரு சிலருக்கு வேலை காரணமாக இருக்கலாம். ஜோதிட ரீதியாக திருமணத் தடை என்பது ஜாதகத்தில் காணப்படும் தோஷங்கள் காரணமாக இருக்கலாம்.களத்திர தோஷம், பித்ரு தோஷம், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் போன்ற தோஷங்கள் காரணமாக திருமணத் தடை ஏற்படலாம். இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வாக அமைவது குல தெய்வ வழிபாடு ஆகும்.
குலத்தை காக்கும் தெய்வமே குலதெய்வமாகும். குல தெய்வம் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். காரணம் அவரவர் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வமே ஒருவரின் குல தெய்வமாக இருக்கும். காலம் காலமாக நமது முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வத்தை நாமும் குல தெய்வமாக ஏற்று தவறாமல் வழிபட வேண்டும். எந்த தெய்வத்தை வணங்கினாலும் வணங்கா விட்டாலும் குல தெய்வத்தை வணங்க தவறுதல் கூடாது. வருடம் ஒரு முறையாவது கண்டிப்பாக குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். அவ்வாறு செல்லும் போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி செல்ல வேண்டும். அது மிகுந்த நற்பலன்களை அளிக்கும். பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் இரண்டு குல தெய்வங்களையும் வணங்குவது சிறப்பு.
திருமணத் தடை நீங்க குல தெய்வ வழிபாடு நல்லது. திருமணம் தள்ளிப் போகிறதா? திருமண முயற்சிகளில் தடைகளை சந்திக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தினமும் குல தெய்வத்தை வணங்கி வாருங்கள். அதன் பிறகு படிப்படியாக நேர்மறை மாற்றம் ஏற்படுவதை நீங்கள் கண்கூடாகக் காணலாம். குல தெய்வம் தெரியவில்லையா? அது பற்றி ஆருடம் கூறும் ஜோதிடர்களை அணுகி தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் குல தெய்வத்தைக் கண்டு கூறும் திறமை மிக்க ஜோதிடர்களும் இருக்கிறார்கள். இல்லையெனில் ஒரு தீபத்தை ஏற்றி அதனையே குல தெய்வமாக பாவித்து வணங்கி வாருங்கள். அவ்வாறு செய்வதன் மூலம் ஏதாவது ஒரு வழியில் கூடிய விரைவில் உங்கள் குல தெய்வத்தை நீங்கள் கண்டு கொள்ளலாம். திருமணத் தடை சந்திப்பவர்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி, குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். மேலும், ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் மேற்கொள்ளுங்கள். இது திருமணத் தடைகளை நீக்கும்.
குலதெய்வ வழிபாடு செய்வதற்கு, குடும்பத்தினருடன் சேர்ந்து, குலதெய்வ கோயிலுக்குச் செல்ல வேண்டும். அவரவர் குல வழக்கப்படி நேர்த்திக்கடன்களை செலுத்த வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கொண்டாடலாம். ஒரு சிலருக்கு பொங்கல் வைக்கும் வழக்கம் இருக்கும். உங்கள் வீட்டில் பொங்கல் வைக்கும் பழக்கம் உள்ளது என்றால் பௌர்ணமி அன்று குல தெய்வ கோவிலுக்குச் சென்று பொங்கல் வைத்து வழிபடுங்கள். வேறு சிலருக்கோ விளக்கேற்றி பூஜை, அர்ச்சனை அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றும் பழக்கம் இருக்கலாம். எனவே அவரவர் குல வழக்கப்படி வழிபடுவது சிறப்பு. கோவில் செல்ல இயலாதவர்கள் வீட்டில் குலதெய்வத்திற்கு, விளக்கு ஏற்றி தீபாராதனை காட்டி நைவேத்தியம் செய்ய வேண்டும்.
இவ்வாறு குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் படிப்படியாக நேர்மறை அலைகள் இருக்கும். உங்கள் எண்ணங்கள் தடையின்றி ஈடேறும். மேலும் குடும்ப ஒற்றுமை ஓங்கும். நல்வாழ்வும், மகிழ்ச்சியும் உறுதிப்படும். குடும்பத்தின் பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக திருமணத் தடைகள் நீங்கும். வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.
September 11, 2025
September 10, 2025
September 10, 2025