தமிழ் மாதங்கள் மொத்தம் பன்னிரண்டு. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்த வகையில் தை மாதம் பல சிறப்புகளைக் கொண்டது. தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதம். விழாக் கோலம் பூண்டிருக்கும் மாதம் ஆகும். பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் சேர்ந்து வரும் நாள் தைப்பூசத் திருநாள். தைப்பூசம் என்பது தென் இந்தியாவில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர்.
சூரபத்மன் என்னும் அசுரன் மிகவும் சக்தி வாய்ந்தவனாக இருந்ததால், தேவர்கள் அவனை வெல்ல முடியவில்லை. பிரபஞ்சத்தைக் காப்பாற்றும் முயற்சியில், தேவர்கள் சிவபெருமானிடம் உதவியை நாடினர், அவர் தனது தெய்வீக சக்திகளால் முருகனைப் பெற்றெடுத்தார். இவ்வாறு, போர்வீரன் கடவுள் தோன்றினார். இறுதியில், சூரபத்மன் வதம் செய்யப்பட்டான். தேவர்கள் தங்கள் துயரங்களிலிருந்து விடுபட்டனர். அமைதியும் தர்மமும் மீட்டெடுக்கப்பட்டன. எனவே, பக்தர்கள் தைப்பூச நாளில் முருகப்பெருமானை வழிபட்டு, முருகப்பெருமானின் அருளைப் பெறவும், தங்கள் இன்னல்களில் இருந்து விடுபடவும் வழிபடுகின்றனர்.
சூரபத்மன் என்ற அரக்கனின் கொடுங்கோன்மை யை முடிவுக்குக் கொண்டு வர பார்வதி தேவி தனது போர்வீரன் முருகனுக்கு (சுப்ரமணியன்/சண்முகம் என்றும் அழைக்கப்படுகிறார்) வேல் ஒன்றை பரிசாக அளித்த நாளாக தைப்பூசம் கருதப்படுகிறது.
முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் . மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுக்கு பிறகு கோவிலில் அன்னதானம் வழங்கப்படும் . மக்கள் கோவில்களில் முருகனை வேண்டி வழிபடுவது வழக்கம். தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது. பழனி திருத்தலத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை செல்வது வழக்கம். ஆண்டுதோறும் தைப்பூச விழாவின் 10 நாட்களும் பக்தர்கள் கொண்டு வரும் பால்குடங்களைக் கொண்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும்.
தைப்பூச விரதம் என்பது முருகப் பெருமானுக்கு இருக்கக் கூடிய மிக முக்கியமான விரதமாகும். இந்த ஆண்டு தைப்பூச விழா ஜனவரி 25ம் தேதி வியாழக்கிழமை வருகிறது. தைப்பூசம் என்பது முருகனின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி திருத்தலத்தை அடிப்படையாக கொண்டாடப்படும் விழாவாகும். பழனியில் 10 நாள் விழாவாக தைப்பூச பெருவிழா கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச விழா துவங்க உள்ளது.
தைப்பூசத்தன்று மக்கள் பழனியில் குவிவது வாடிக்கை. பக்தர்கள் பல பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக பழனிக்கு வருகிறார்கள். நேர்த்திக் கடனாக முருகனுக்கு காவடி எடுக்கிறார்கள். பக்தர்கள் பலநாட்கள் விரதமிருந்து காவடி எடுக்கிறார்கள். காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்று அழைக்கப்படுகின்றன. காவடிகளில் பல வகை உண்டு.
பொதுவாக முருகனுக்கு விரதம் இருப்பவர்கள் இரண்டு விதமாக இருப்பார்கள். ஒன்று மாலை அணிந்து விரதம் இருப்பது, மற்றொன்று காப்புக் கட்டி விரதம் இருப்பது. இதில் ஐப்பசி மாதம் வரும் கந்தசஷ்டி விழாவின் போது காப்புக் கட்டி விரதம் இருப்பார்கள். தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவற்றிற்கு மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். பாத யாத்திரை மேற்கொள்வார்கள்.
ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் விரதம் ஆரம்பித்தால் தொடர்ந்து எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம். ஆனால் பெண்களின் நிலை அப்படி அல்ல. எனவே பெண்கள் விரதம் இருக்க வேண்டும் என்றால் வீட்டு விலக்கான ஐந்தாவது நாளில் மாலை போட்டு 21 நாட்கள் வரை விரதம் இருந்து முருகனை வழிபடலாம். தினமும் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிபட வேண்டும். முருகனுக்கு பூஜை ஆரத்தி செய்து பூக்கள் சாற்றி வழிபடவேண்டும். கந்தர் ஷஷ்டி கவசம், கந்தர் அநுபூதி போன்ற பாசுரங்களை பாடவோ கேட்கவோ செய்ய வேண்டும். முடிந்தவர்கள், ஆரோக்கியம் அனுமதித்தால் ஒரு முறை மட்டும் உண்டு விரதம் இருக்கலாம். முயடியாதவர்கள் தங்கள் சக்திக்கு ஏற்றார் போல விரதம் மேற்கொள்ளலாம். அசைவ உணவை தவிர்க்க வேண்டும்.
முருகனுக்க மாலை அணிந்து, பாத யாத்திரை செல்ல வேண்டும் என விரும்பும் பெண் பக்தர்கள், மாதவிடாய் முடிந்த 5வது நாளில் மாலை அணிந்து விரதத்தை துவக்கலாம். வழக்கம் போல் விரதம் இருப்பவர்கள் காலையிலும், மாலையிலும் குளித்து விட்டு கந்தசஷ்டி பாராயணம் செய்ய வேண்டும். ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொண்டோ அல்லது பகல் ஒருவேளை உணவை மட்டும் தவிர்த்தோ விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் மூன்று வேளையும் சைவ உணவாக சாப்பிட்டுக் கொண்டும் விரதம் இருக்கலாம்.
மாலை அணியாமலோ, காப்பு கட்டாமலோ வீட்டிலேயே விரதம் இருக்க நினைக்கும் பெண்களுக்கு விரதத்திற்கு நடுவே மாதவிடாய் வந்து விட்டாலும் ஐந்து நாட்கள் விட்டு விட்டு பிறகு தொடரலாம்.
September 12, 2025
September 12, 2025
September 11, 2025