ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் விரத நாட்களாகக் கருதி முருக பக்தர்கள் முருகனை வழிபடுவார்கள். இந்த ஆண்டு நவம்பர் 02ம் தேதி துவங்கி, நவம்பர் 08 ம் தேதி வரை கந்தசஷ்டி விழாக் காலம் ஆகும். விழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 07ம் தேதி நடைபெற்றது. முருகப் பெருமான் திருக்கல்யாண வைபவம் இன்று அதாவது நவம்பர் 08ம் தேதி நடைபெற உள்ளது.
இன்றைய தினம் கந்த சஷ்டி விழாவின் கடைசி நாளாகும். இன்று முருகனுக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெறும். சூரனை முருகப் பெருமான் வதம் செய்ததால் மனம் மகிழ்ந்த இந்திரன் தன்னுடைய மகளான தேவயானையை முருகப்பெருமானுக்கு திருமணம் செய்து வைப்பார். இந்த திருமண வைபவம் அனைத்து முருகன் ஆலயங்களிலும் வெகு விமரிசையாக நடைபெறும். அற்புதமான இந்த நல்ல நாளில் செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை பற்றி இந்தப் பதிவில் நாம் காணலாம்.
முருகர் திருக்கல்யாணம் ஒவ்வொரு முருகன் கோவிலிலும் வெகு விமரிசையாக நடைபெறும். முருகர் திருக்கல்யாணத்திற்கு தங்கத்தில் தாலி வாங்கி தரலாம். முருகர் திருக்கல்யாண வைபவத்தில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். எனவே அதற்குரிய மாலை வாங்கித் தரலாம். திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் முருகப்பெருமானுக்கு அபிஷேகத்திற்காக பஞ்சாமிர்தம் சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கித் தர வேண்டும். பணமாக தராமல் பஞ்சாமிர்தத்திற்கு தேவையான பழ வகைகளை வாங்கித் தருவது நல்ல பலனை தரும். அபிஷேகத்திற்கு பால் , தயிர், தேன், இளநீர், சந்தனம் பன்னீர் போன்றவைகளை வாங்கி அளிக்கலாம். இவை அனைத்தையும் செய்ய முடியாவிட்டால் கூட தங்களால் இயன்ற அளவு செய்வதன் மூலமும் நல்ல பலன்களைப் பெறலாம்.
முருகர் திருக்கல்யாண தினத்தன்று முருகர் ஆலயம் சென்று வழிபட வேண்டும். மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் அடங்கிய திருமாங்கல்ய செட்டை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வாங்கி வந்து திருக்கல்யாணம் நடைபெறும் பொழுது அங்கு இருக்கக்கூடிய சுமங்கலி பெண்களிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளலாம். முருகனின் அருள் என்றென்றும் நம் வாழ்வில் நிலைத்து இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சுப்பிரமனிய சுவாமி எனப்படும் முருகர் கல்யாணத்தை தரிசித்து விட்டு வந்து வீட்டிலும் முருகர் வழிபாடு செய்ய வேண்டும். முருகரை மனமார வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த வழிபாடு திருமணமத்தில் இருக்கும் தடைகளை நீக்கும். திருமண வாழ்வில் காணப்படும் பிரச்சினைகளை நீக்கும். கணவன் மனைவி ஓற்றுமை கூடும். குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். முருகப்பெருமானை மனதார நம்பி செய்பவர்களுக்கு தடைப்பட்டு இருக்கக்கூடிய சுபகாரியங்கள் அனைத்தும் தடையின்றி நடைபெறும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025