AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now
சனி பகவானின் பாதகமான தாக்கத்தில் இருந்து விடுபட எளிய வழிமுறை
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

சனி பகவானின் பாதகமான தாக்கத்தில் இருந்து விடுபட எளிய வழிமுறை

ஏழரை சனி, அர்தாஷ்டம சனி, அஷ்டம சனி, கண்ட சனி காலத்தில் நாம் சனி  பகவானின் சாதக, பாதக தாக்கங்களுக்கு ஆளாகிறோம். சாதகமான தாக்கங்களை எளிதாக ஏற்றுக் கொள்ள நம்மால் இயலும். ஆனால் பாதகமான தாக்கத்தில் இருந்து விடுபட நாம் பல முயற்சிகளை மேற்கொள்கிறோம். அவற்றுள் ஒன்று நவகிரகத்தில் சனி பகவானை வணங்குதல் ஆகும். ஆனால் சனி பகவானை நேரடியாக வணங்குவதை விட அவரை கட்டுப்படுத்தும் அனுமனை வணங்குவது சிறப்பு. சனி பகவானின் தாக்கத்தில் இருந்து விடுபட அனுமனை வணங்கினால் போதும். அனுமனின் எளிய வழிபாட்டின் மூலம் நாம் சனி பகவானின்  தாக்கத்தில் இருந்து விடுபட இயலும்.

அனுமனின் அவதார தினமான அனுமன் ஜெயந்தி அன்று அனுமனை வழிபடுவது சிறப்பு. என்றாலும் சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபட சனிபகவானின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

சொல்லின் செல்வன் அனுமன். சிறந்த ராம பக்தன். அனுமனுக்கும் சனிக்கும் என்ன சம்பந்தம்? அனுமன் எப்படி சனியை கட்டுபடுத்தும் ஆற்றலைப் பெற்றார். சனியின் தாக்கத்தில் இருந்து விடுபட அனுமனை வணங்கினால் போதுமா? இது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

அனுமனை ஏழரை சனி பிடித்த கதை :

 இராம காவியத்தில் மிகச் சிறந்த இடத்தைப் பிடித்தவர் அனுமன்.
இலங்கையில் அசோக மரத்தின் அடியில் சீதையைக் கண்டு வந்து செய்தியை சொன்ன பின் சீதையை சிறை மீட்க ஏதுவாக சேது பாலம் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது.  அந்தப் பணியில் சுக்ரீவன் தலைமையிலான வானரப் படைகள் தங்களால் முடிந்த வகையில் உதவிகளைப் புரிந்து வந்தன. அவை பாலம் அமைக்க  சிறிய மற்றும் பெரிய கற்களை கடலில் வீசிக் கொண்டிருந்தன. சில வானரங்கள் மரங்களை பெயர்த்து எடுத்து வந்து போட்டுக் கொண்டிருந்தன.

அனுமனைப் பிடிக்க அனுமதி  :

சேது பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட அனுமன், ஒவ்வொரு பாறையிலும் ஸ்ரீ ராம நாமத்தை எழுதி கடலில் போட்டுக் கொண்டிருந்தார். ராமனும், லட்சுமணரும் பாலம் அமைக்கும் பணிகளை  மேற்பார்வை பார்த்தபடி இருந்தனர். அந்த சயமத்தில் அவர்கள் முன் தோன்றிய சனீஸ்வரன், “சுவாமி, அனுமனுக்கு ஏழரை சனி பிடிக்கும் காலம் நெருங்குகிறது. உங்களின் அனுமதியுடன் அவரை நான் பிடித்து கொள்ளலாமா?” என அனுமதி கேட்டார். ராமனும், உங்கள் வேலையை நீங்கள் செய்ய வந்துள்ளீர்கள். உங்களால் முடிந்தால் அனுமனை பிடித்துக் கொள்ளுங்கள்” என்று அனுமதி அளித்தார்.

அனுமனிடம் சனீஸ்வரன் வேண்டுகோள்:

சனீஸ்வரர், அனுமனிடம் சென்று அவரை வணங்கி தங்களை ஏழரை சனி பிடிக்கும் காலம் நெருங்குகிறது. அதனால் உங்களை பிடித்துக் கொள்ள உங்கள் உடலில் ஏதாவது ஒரு இடத்தை கொடுங்கள்” எனக் கேட்டார்.  அதற்கு அனுமனோ, “சனீஸ்வரனே! நான் தற்போது சீதா தேவியை மீட்பதற்காக ராமனுக்கு உதவியாக பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இந்த பணிகள் முடிந்து சீதா தேவியை மீட்ட பிறகு நானே உங்களைத் தேடி வருகிறேன். அப்போது என் உடல் முழுவதையும் கூட நீங்கள் பிடித்துக் கொள்ளலாம்” என்றார்.

அதற்கு சனி பகவான், அஞ்சனை மைந்தனே எதற்கும் ஓரு கால வரையறை உண்டு என்பதை தாங்கள் அறிவீர் அல்லவா? எனவே யாராக இருந்தாலும் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். அதனால் காலம் தாழ்த்தாமல் விரைவில்  உங்களுடைய உடலில் எந்த பாகத்தை நான் பிடிக்க வேண்டும் என சொல்லுங்கள்” என்றார் சனீஸ்வரன்.

சனிக்கு தலையில் இடம் தந்த அனுமன் :

இதை கேட்ட அனுமன், “சரி நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். நான் இப்பொழுது ராம காரியத்தில் ஈடுபட்டுள்ளேன். எனது கைகள்  தற்போது ராமருக்காக பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது அதனால் அங்கு இடம் தர முடியாது. பாதத்தில் இடம் கொடுத்தால் அது உங்களை அவமரியாதை செய்தது போலாகி விடும். எண் சாண் உடம்பிற்கு சிரமே பிரதானம். அதனால் எனது தலையில் அமர்ந்து கொள்ளுங்கள்” என்றார். அனுமன் அனுமதி அளித்ததால் அவரிடம் தலையில் ஏறி அமர்ந்து கொண்டார் சனீஸ்வரன்.அதுவரை சிறிய பாறைகளை தூக்கிச் சென்ற அனுமன், சனீஸ்வரன் தனது தலை மீது ஏறிக் கொண்ட பிறகு பெரிய பெரிய மலைகளை புரட்டி, தனது தலையில் சுமர்ந்து எடுத்துச் சென்று கடலில் போட துவங்கினார். அனுமனின் தலையில் அமர்ந்திருந்ததால் மலைகளின் பாரத்தை சனீஸ்வரன் சுமக்க வேண்டியதாயிற்று. சனீஸ்வரர், ஒரு கட்டத்தில் மலைகளின் பாரத்தை தாங்க முடியாமல் அனுமனின் தலையில் இருந்து கீழே இறங்கி விட்டார் சனீஸ்வரன்.

தோல்வி அடைந்த சனி பகவான்:

இதை கண்ட அனுமன்  “என்ன சனீஸ்வரரே…என்னை ஏழரை ஆண்டுகள் பிடிக்க போவதாக சொல்லி இடம் கேட்டீர்கள். ஆனால் இவ்வளவு சீக்கிரமாக இறங்கி விட்டீர்களே” என்றார். அதற்கு சனீஸ்வரன், “நீங்கள் கைலாயத்தில் சிவனாக இருக்கும் போது உங்களை பிடித்து வெற்றி கண்டேன். ஆனால் இப்போது உங்களை பிடிக்க முடியாமல் தோற்று விட்டேன்” என்றார். அதற்கு ஆஞ்சநேயர், “நீங்கள் தோல்வி அடையவில்லை. ஏழரை ஆண்டுகள் என்னை பிடிக்க வந்த நீங்கள் ஏழரை நாழிகைகள் என்னை பிடித்து உங்கள் பணியை சரியாக செய்து விட்டீர்கள்” என்றார்.

அனுமனுக்கு சனி கொடுத்த வரம் :

ஆஞ்சநேயரின் இனிய சொற்களால் மகிழ்ந்த சனீஸ்வரன், “ஆஞ்சநேயா! உன்னை பிடிக்க வந்து உன் தலையில் அமர்ந்து உனக்கு பதில் சேது பாலம் அமைப்பதற்கான பாறைகளை என் தலை மீது தாங்கியதால் நானும் உன்னால் புண்ணியம் அடைந்து விட்டேன். “அனுமனே! உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்” என்றார்.

“ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை, உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும்” என வரம் கேட்டார் ஹனுமான். சனி பகவானும் அந்த வரத்தை தந்து அருளினார்.

ஆஞ்சநேயருக்கு அளித்த வரத்திற்கு கட்டுப்பட்டே, அனுமனை வணங்குபவர்களையும், ராம நாமத்தை சிந்திப்பவர்களையும் சனியின் கெடு பார்வை ஒன்றும் செய்வதில்லை. சனியின் பிடியில் சிக்கி தவிப்பவர்கள், அனுமனை வழிபட்டு ஸ்ரீ ராம நாமத்தை உச்சரித்து வந்தால் எந்த சூழலிலும் அவர்களை எந்த துன்பங்களும் நெருங்காது.

எனவே ராமநாமம் சொல்லி அனுமனை வழிபட்டால், சனி பகவானால் ஏற்படும் துன்பத்தை ஓரளவு குறைத்துக்கொள்ள நமக்கு வழிபிறக்கும்