சங்கடஹர சதுர்த்தி என்றால் சங்கடங்கள் நீங்கும் சதுர்த்தி என்று பொருள். இந்த நாள் விநாயகருக்கு உரிய நாள் ஆகும் அன்றைய தினம் விநாயகரை வணங்குவதன் மூலம் நமது சங்கடங்கள் யாவும் தீரும் என்பது ஐதீகம். இந்த சங்கடஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் வரும். இந்த மாதம் சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தியானது நாளைய தினம் 24- 7-2024 ஆம் தேதி புதன்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. அன்றைய தினம் அனைத்து விநாயகர் கோவில்களிலும் விசேஷ பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினம் நீங்கள் விரதம் இருந்து விநாயகரை வேண்டிக் கொண்டால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். உங்களுடைய வேண்டுதல் நிறைவேற நாளை செய்ய வேண்டிய எளிமையான ஒரு ஆன்மீக பரிகாரத்தை பற்றிய விரிவான தகவலை இந்த பதிவின் மூலம் காணலாம். ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தியும் விநாயகருக்கு விசேஷம் என்பதால் இந்த பரிகாரத்தை எந்தவோரு சங்கட ஹர சதுர்த்தி நாளிலும் ஆரம்பிக்கலாம்.
சங்கடஹர சதுர்த்தி அன்று காலை எழுந்து நீராடி பூஜை அறை உட்பட வீட்டை சுத்தம் செய்து கொள்ளுங்கள். சுத்தமாக துவைத்த ஆடை அணிந்து கொள்ளுங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வையுங்கள். விநாயகர் படத்திற்கு மஞ்சள், குங்குமம், அட்சதை மற்றும் பூ சாற்றுங்கள். அருகம் புல் மாலை விசேஷமானது. அன்றைய தினம் மாலை வரை விரதம் இருந்து சந்திரனைப் பார்த்த பிறகு தான் உணவு உட்கொள்ள வேண்டும். இவை எல்லாம் நமது அன்றாட வாழ்வில் பொதுவாக நாம் கடைபிடிப்பது தான். இப்பொழுது பரிகாரம் பற்றிக் காண்போம்.
முதல் நாளே மட்டையுடன் கூடிய தேங்காய் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் அடையாளக் குறியீடு ஒன்றை போட்டுக் கொள்ளுங்கள். சங்கடஹர சதுர்த்தி அன்று உங்கள் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் கோவிலுக்கு அதனை எடுத்துச் செல்லுங்கள். கோவிலில் அந்த மட்டைத் தேங்காயை கட்டுவதற்கென ஒரு இடம் இருக்கும். ( இது ஒரு சில வியாயகர் கோவிலில் மட்டும் தான் இருக்கும்) அங்கு சென்று தேங்காயை கட்டி விட்டு வர வேண்டும். அதற்கு முன் ஒரு அர்ச்சனை தட்டு வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது வீட்டில் இருந்து அர்ச்சனைக்கு தேவைப்படும் பொருட்களை எடுத்துச் செல்லுங்கள். பிள்ளையாருக்கு அர்ச்சனை செய்து உங்களுக்கு வேண்டியதை வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு அந்த மட்டைத் தேங்காயை கட்டி விடுங்கள். (அதற்கென்று ஒரு இடம் இருக்கும்) ஏதாவது ஒரு வேண்டுதலாக மட்டும் இருக்க வேண்டும். முதல் வேண்டுதல் நிறைவேறியவுடன் நீங்கள் அடுத்தடுத்து வேண்டிக் கொண்டு பரிகாரம் செய்யலாம். ஆனால் ஒரு முறை ஒரு வேண்டுதல் தான் இருக்க வேண்டும்.
அடுத்த மாதம் வரும் சங்கட சதுர்த்தி அன்று இதே போல வேறொரு மட்டை தேங்காயை வாங்கிக் கொள்ளுங்கள். அதே கோவிலுக்கு சென்று கடந்த மாதம் நீங்கள் கட்டிய தேங்காயை உரித்து அதனைக் கொண்டு அர்ச்சனை செய்து விட்டு புது தேங்காயை கட்டி விட்டு வாருங்கள். உங்கள் வேண்டுதலை நிறைவேற்றுமாறு விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். அர்ச்சனை செய்த பழைய தேங்காயை உங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று இனிப்பு ஏதாவது செய்து நீங்கள் உண்ணலாம். இதே போல உங்கள் வேண்டுதல் நிறைவேறும் வரை மாதா மாதம் சங்கட சதுர்த்தி அன்று நீங்கள் இந்த வேண்டுதலை செய்யலாம். பொதுவாக ஆறு மாதங்களுக்குள் உங்கள் வேண்டுதல் நிறைவேறிவிடும்.
உங்கள் வீட்டு அருகில் இருக்கும் கோவிலில் இந்த வசதி இல்லை என்றால் நீங்கள் மட்டைத் தேங்காயை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வேண்டிக் கொள்ளலாம். அடுத்து வரும் சங்கட ஹர சதுர்த்தி அன்று அதனை கோவிலுக்கு எடுத்துச் சென்று அர்ச்சனை செய்து கொண்டு வரலாம். உங்கள் வேண்டுதல் நிறைவேறும் வரை இதனை தொடரலாம்.
நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை மேற்கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் நல்லதே நடக்கும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025