Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
ராமனை விட ராம நாமத்திற்கு மகிமை அதிகம். ராமனை பூஜிப்பதை விட, ராம நாமம் சொல்வது இன்னும் சிறப்பு
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ராம நாம மகிமை

Posted DateApril 9, 2024

“நாமம், நல்ல நாமம். நன்மையின் ரூபமாய் நானிலம் போற்றும், ராம நாமம், நல்ல நாமம்.”

ராம நாமம் ஒலிக்கும் இடத்தில், தான் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக, கிடைப்பதற்கு அரிய வைகுண்ட பதவியை மகா விஷ்ணுவே தருவதாக சொல்லியும், வர மறுத்தவர் அனுமன். அத்தகைய ராம நாமத்தின் மகிமையைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

ராம நாமமே அனுமனின் உயிர் மூச்சு. ராம நாமம், ராம பாணத்தைவிடச் சிறந்தது என்று நிரூபித்தார். சீதா தேவியை மீட்பதற்காக இலங்கைக்கு ராமனும் லட்சுமணனும் வானரப் படையுடன் செல்ல சேது பாலம் அமைக்கப்பட்டது. அதை அனுமன் தலைமையேற்று நடத்தி வந்தார். வானரங்கள் கற்களை கடலில் போட்டு பாலத்தை அமைத்தனர். அனுமன் ஒவ்வொரு கல்லிலும் ராம நாமத்தை எழுதி, ராம நாமத்தை ஜெபித்தபடி சுமந்து சென்று போட்டார். மற்ற வானரங்களும் அவரைப் பின்பற்றி அவ்வாறே செய்தன.

அப்போது ஸ்ரீ ராமரும் அந்த வேலையில் பங்கு கொள்ள விரும்பினார். எனவே அவரும் கற்களை எடுத்துச் சென்று கடலில் போட்டார். அனால் அந்த கற்கள் நிற்காமல் நீரால் மூழ்கின. ராமருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அவர் அனுமனிடம் தான் போடும் கற்கள் மூழ்குவதைப் பற்றிக் கூறி வருத்தப்பட்டார். உடனே அதற்கு அனுமன், நீங்கள் ராமராக இருந்தாலும், ராம நாமத்தை ஜெபிக்காமல் போட்டதால் அவை நீரில் மூழ்கின என்றார். இதில் இருந்து ராமரை விட ராம நாமமே சிறந்தது என்பதை நாம் அறியலாம்.

ராம ஆஞ்சநேய யுத்தம்

ஒரு முறை, விசுவாமித்திரர் தனது குடிலுக்கு நாசம் விளைவித்ததாக எண்ணி, காசி ராஜனுக்கு தக்க தண்டனை கொடுக்கும்படி ஸ்ரீராமனிடம் முறையிட்டார்.  தண்டனையில் இருந்து தப்பிக்க காசி ராஜன் நாரதரிடம் யோசனை கேட்டார். அவர் அஞ்சனையிடம் அடைக்கலம் செல்லக் கூறினார். அவரும் அஞ்சனையிடம் சென்றார். அஞ்சனை, தன் மைந்தன் அனுமனிடம் அரசனைக் காக்கும் பணியை ஒப்படைத்தாள். அனுமனும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

இராமபிரானே அந்த அரசனை ஆஞ்சனேயரிடமிருந்து மீட்க யுத்தம் மேற்கொண்டார். அது இராம ஆஞ்சனேய யுத்தமாக உருவெடுத்தது. ஆஞ்சனேயர் தன் வாலை சுருட்டியுள்ள கோட்டையில் அந்த அரசனை பத்திரப்படுத்தி, அந்த வாலின் மேல் அமர்ந்து கண்களை மூடி  “ராம ராம” என்று தியானம் செய்து கொண்டிருந்தார்.

ராமர் வேறு வழியின்றி அனுமன் மேல் போர்க் கணைகளை தொடுத்தார். அவரது பாணங்கள் ஆஞ்சநேயரை ஒன்றும் செய்யவில்லை. அதற்கு பதிலாக அவை அவரது உடலின்  மீது  பூமாலைகளாக விழுந்தன. இராமரே முன்னின்று போர் நடத்தியும், ‘ராம நாம ஜபம்’ செய்த ஆஞ்சனேயர் தான் வெற்றியடைந்தார்.

அதை இராமரே ஒப்புக்கொண்டார். இதில் இருந்து அந்த ராம மந்திரமே தாரக மந்திரமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தாரக மந்திரம் :

இராவண சம்ஹாரம் முடிந்த பின் இராம பட்டாபிஷேகத்தில் பங்கு கொள்ள விபீஷணன்  புஷ்பக விமானத்தில் அயோத்தி மாநகருக்கு வந்திருந்தார். சில நாட்கள் தங்கி பின் இலங்கை திரும்பும் வேளையில் அயோத்தயில் இருந்த அவருடைய நண்பர் ஒருவர்  இலங்கையைச் சுற்றிப் பார்த்திட ஆசையுள்ளது என்று சொன்னதால், புஷ்பக விமானத்தில் அவரையும் அழைத்துக் கொண்டு இலங்கைக்குச் சென்றார்.

அரசரின் விருந்தினராக பலநாள்கள் இலங்கையில் தங்கி எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்த பின்னர், அயோத்திக்குச் செல்ல ஆசைப் பட்டார்.ஆனால் எப்படி கடல் கடந்து செல்வது  என்று விபீடணனிடம் வினவ, அதற்கு விபீடணன் “ஒரு மகா மந்திர ஓலையை உன் அரைக்கச்சத்தில் கட்டி விடுகிறேன். அது உன்னை கடலின் அக்கரைக்குக் கொண்டு சேர்க்கும்.” என்று சொல்லி மகா மந்திரம் எழுதிய ஓலையை அவனுடைய கச்சத்தில் கட்டி விட்டார்.

எக்காரணம் கொண்டும் அந்த ஓலையை வழியில் எடுத்துப்பிரித்துப் படிக்காமல் கரை சேரவும். கரை சேர்ந்ததும் கடலில் அந்த ஓலையை எறிந்து விடவும்” என்றும் சொன்னார். அப்படிப் பிரித்துப் பார்த்தால் வழியிலேயே கடலில் மூழ்கிவிடுவாய்.” என்றும் கூறினார்.

அவன் புறப்படும் சமயம் அந்த மந்திர ஓலையை நன்கு முடிந்து கொண்டான். கடற்கரையை அடைந்தான். ஒவ்வோர் அடியாக கடலில் அடியெடுத்து வைத்தான். அவன் தரையில் நடப்பது போலவே உணர்ந்தான்.

அப்படி என்ன மந்திரம் தான்  இந்த ஓலைச் சுவடியில் உள்ளது! அது என்னை இந்த மகாசமுத்திரத்தையே கடக்க வைத்து விட்டதே! உண்மையிலேயே இது ஒரு மகாமந்திரம்தான். அதன் மகிமை பெரியதுதான்’ என்று வியந்தான். தூரத்தில் கரை தெரிய ஆரம்பித்தது. ‘இன்னும் சில காத தூரமே தானிருக்கிறது. நான் மந்திர ஓலையால் மா கடலை கடந்து வந்து விட்டேன்.

அவனுக்குள் ஓர் ஆர்வம். இந்த மகா மந்திரம் என்னவாக இருக்கும். அப்படிப்பட்ட மகிமையுள்ள மந்திரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று ஏற்பட்ட ஆவல் உந்துதலால் அந்த ஓலையை எடுத்துப் பிரித்து உரக்கவே படித்தான்.

அதில் ராம் ராம் என்று பலமுறை எழுதியிருந்ததைக் கண்டான்.

ஆச்சர்யத்துடன் ‘பூ’ இவ்வளவுதானா? இந்த ராம மந்திரம் தான் எனக்கும் தெரியுமே! இதில் ரகசியம் என்ன?’ என்று நினைப்பதற்குள், அவன் தண்ணீரில் மூழ்கினான்.

இந்தக் கதையின் மூலம் ராம நாமத்தின் அற்புதத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.