புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை வழிபாடு | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை வழிபாடு

Posted DateSeptember 28, 2024

நமது இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அது மட்டும் அன்று, ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும், அதற்கென்று சில சிறப்புகள் உள்ளன. அவை நம் மனதில் பக்தியைத் தூண்டும் விதமாக அமைகின்றது எனலாம். அந்த வகையில் புரட்டாசி மாதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. புரட்டாசி என்றாலே பெருமாள் வழிபாடு தான் அனைவர் மனதிலும் நிறைந்து இருக்கும். விஷ்ணு பகவான் வேங்கடேஸ்வரராக இந்த பூமியில் தோன்றிய மாதம் புரட்டாசி மாதம் என்று கருதப்படுகிறது.

புரட்டாசி சனிக்கிழமை

புதனால் ஆளப்படும் கன்னி ராசியில், சூரியன் இருக்கும் மாதம் புரட்டாசி. புதனின் அதிபதி விஷ்ணு, செல்வத்தின் கடவுள். எனவே, புரட்டாசி மாதம் முழுவதும் மற்றும் குறிப்பாக சனிக்கிழமைகள் பக்தர்கள் விஷ்ணு பகவானை வழிபட வேண்டும். புரட்டாசி சனிக்கிழமைகளில் விஷ்ணு பகவானை வெங்கடேசப் பெருமானாக வழிபடுவது செல்வச் செழிப்பைப் பொழியும். மாதம் முழுவதும் பெருமாள் வழிபாட்டிற்கு உரியது என்றாலும் சனிக்கிழமை அவருக்கு உரிய, உகந்த, ஏற்ற கிழமை ஆகும். புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு மிகவும் உகந்த தினமாக கருதப்படுகிறது. அதிலும் இந்த இரண்டாவது சனிக்கிழமையுடன் ஏகாதசியும் இணைந்து வருவது இன்னும் சிறப்பு மிக்கது ஆகும். புரட்டாசி சனிக்கிழமையும் பெருமாளுக்கு உகந்த நாள். ஏகாதசியும் அவருக்கு உகந்த திதி ஆகும். இன்றைய தினம் பெருமாளை தவறாமல் வணங்க வேண்டும்.

ஏகாதசி இணைந்த சனிக்கிழமை விரதம்  

இந்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம்  28ஆம் தேதி  இரண்டாவது புரட்டாசி சனிக்கிழமை ஆகும். இந்த சனிக்கிழமையுடன் ஏகாதசி திதியும் இணைந்து வருகிறது. இந்த நாளை தவற விடாமல் பெருமாளை வழிபடுவதன் மூலம் நமது தீய வினைகள் நீங்கும்.முக்திக்கான வழிபிறக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே இன்றைய தினம் நாம் தவறாமல் பெருமாள் ஆலயம் சென்று அவரை வழிபட வேண்டும். ஏகாதசி திதி என்பதால் விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு. ஏகாதசி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிரியமான நாளாகும்.ஏகாதசி அன்று விரதம் இருப்பதன் மூலம் நாமும், நமது குடும்பத்தினரும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருவருளைப் பெறலாம். மருத்துவரீதியாக,மாதம் இருமுறை வரும் ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது நல்ல உடல் ஆரோக்கியத்திற்கும், மன நலத்திற்கும் உதவும்.ஏகாதசி விரதம் இருப்பதை எல்லா சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன. ஏகாதசி விரதம் இருப்பதால் மற்றெல்லா விரதங்களின் பலனையும் அடையலாம். ஆனால் மற்றெல்லா விரதங்களை கடைபிடித்தாலும் ஏகாதசி விரதத்தின் பலனை அடைய இயலாது. மேலும் ஏகாதசி விரதத்தினை கடைபிடிக்காமல் தானிய உணவினை உண்பது, பாவங்கள் செய்த கர்மத்தை உண்டாக்கும். எனவே தான் ஏகாதசி அன்று குறிப்பாக தானிய உணவு வகைகள் தவிர்க்கப்படுகின்றன.

எப்படி வழிபட வேண்டும்.

இன்றைய தினம் முழுவிரதம் இருப்பது நல்லது. காலையில் எழுந்து நீராடி சுத்தமான பூஜை அறையில் கடவுளுக்கு முன் விளக்கேற்றி வைக்க வேண்டும். பெருமாள் படம் இருந்தால் அதற்கு மஞ்சள், குங்குமம் சந்தனம் மற்றும் பூக்களை சாற்ற வேண்டும். துளசி  மாலை சாற்றுவது மிகவும் அவசியம். காலை அல்லது  மாலை அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். கோவில் கொடி மரத்திற்கு நமஸ்காரம் செய்த பிறகு கருடாழ்வாரை வணங்க வேண்டும். விளக்கு ஏற்ற வேண்டும். பின் பெருமாளுக்கு துளசி மாலையும் தாயாருக்கு வாசனை மிகுந்த மலர்களையும் வாங்கித் தர வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் மகாலட்சுமி தாயாருக்கு மஞ்சளை வாங்கி தருவது என்பது நம்முடைய வாழ்க்கையில் பல நன்மைகளை உண்டாகும். சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் ஆஞ்சநேயரையும் வணங்க வேண்டும். அவரை பதினோரு முறை சுற்றி வலம் வர வேண்டும்.  இப்படி செய்வதன் மூலம் நமது கர்ம வினைகள் யாவும் நீங்கும். நமது பாவங்கள் தொலையும். காலை மாலை இரண்டு வேளையும் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்வது சிறப்பு. 

ஏகாதசி அன்று செய்ய வேண்டியதும்,செய்யக் கூடாததும் என்ன?

ஏகாதசி முழுவதும் பகவானின் நாமம் சொல்வது, அதிலும் குறிப்பாக கலியுக தாரக மந்திரமான ஹரே ராம ஹரே ராம; ராம ராம ஹரே ஹரே” ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண; கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே;எனும் மஹாமந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிப்பது மிகவும் சிறந்தது. ஏகாதசி அன்று அவசியம் கோயிலுக்குச் சென்று ஸ்ரீகிருஷ்ணரை தரிசிக்க வேண்டும். ஸ்ரீமத்பாகவதம், பகவத் கீதை  நூல்களை படிப்பதும், கேட்பதும் மிகவும் நல்லது.