Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
பௌர்ணமி தீபம் ஏற்றும் முறை | Pournami Deepam in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

பௌர்ணமி தீபம் ஏற்றும் முறை

Posted DateAugust 12, 2024

பொதுவாக நாம் அனைவரும் நமது வீட்டில் அன்றாடம் விளக்கு ஏற்றுவது வழக்கம். அவ்வாறு ஏற்றுவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித் தரும் என்பது ஐதீகம். லட்சமி கடாட்சம் என்பது வெறும் பணம் மட்டுமல்ல. அனைத்து செல்வங்களும் இருப்பது தான் லட்சுமி கடாட்சம் என்பார்கள். அதனால் தான் நமது முன்னோர்கள் வாழ்த்தும் போது கூட பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்பார்கள். கல்வி, புகழ், வலிமை, வெற்றி, நன்மக்கள். பொன், நெல், நல் விதி, நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் என்பன பதினாறு பேறுகள் ஆகும். என்றாலும் இந்த நவீன உலகில் பணம் ஒன்றே பிரதானமாக இருக்கிறது. அந்த பணத்தை சம்பாதிக்கத் தான் நாம் அனைவரும் அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறோம். பணம் இருந்துவிட்டால் எல்லாமே இருப்பது போன்ற நிலை இருக்கிறது. அந்த பணத்தை பெருக்கும் பரிகாரம் ஒன்றைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம் வாருங்கள்.

இந்த பரிகாரத்தை முழு நிலவு நாளான பௌர்ணமி அன்று செய்ய வேண்டும். பௌர்ணமி அன்று தீபம் ஏற்றி வழிபடுதலே இந்தப் பரிகாரம் ஆகும்.  பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த தீபத்தை ஏற்றலாம்.அல்லது மாலை நேரத்தில் இந்த தீபத்தை ஏற்றலாம் இந்த தீபத்தை ஏற்றுவதற்கு முன்பாக ஒரு சிறிய பித்தளை தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டிற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அலங்காரம் செய்யுங்கள். மொத்தம் ஐந்து பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். தட்டின் நடுவிலும் ஒரு பொட்டு இருக்க வேண்டும். நடுவில் வைத்திருக்கும் பொட்டிற்கு மேலாக ஒரு கண்ணாடி டம்ளரை வைக்க வேண்டும். இந்த பரிகாரத்திற்கு கண்ணாடி டம்ளர் தான் கண்டிப்பான முறையில் வேண்டும்.

வேறு எந்த டம்ளரையும் உபயோகப்படுத்த கூடாது. நடுவில் வைத்திருக்கும் குங்குமத்திற்கு மேலாக இந்த கண்ணாடி டம்ளரை வைத்து அது நிறைய கல் உப்பை கொட்டி கொள்ளுங்கள். பிறகு அதற்கு நடுவே மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இந்த குங்குமத்திற்கு மேலாக ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றை வைத்து அந்த ஐந்து ரூபாய் நாணயத்திற்கும் மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இந்த நாணயத்திற்கு மேலாக ஒரு நுனி கிழியாத நல்ல வெற்றிலையாக பார்த்து ஒரு வெற்றிலையை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த வெற்றிலைக்கு நடுவிலும் மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். வெற்றிலையின் நுனியானது வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு தான் இருக்க வேண்டும். அடுத்ததாக அந்த வெற்றிலைக்கு மேலே ஒரு அகல் விளக்கை வைத்து அந்த அகல் விளக்கிற்கும் மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த விளக்கை அகல் விளக்கில் தான் ஏற்ற வேண்டும். நெய் தீபம் ஏற்ற வேண்டும். வெண் திரி இல்லமால் மஞ்சள் திரியை பயன்படுத்த  வேண்டும். .இந்த தீபத்தை பௌர்ணமி தினத்தில் மட்டும் ஏற்றினால் போதும். விருப்பம் இருப்பவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் கூட ஏற்றலாம். அடுத்த பௌர்ணமி வந்த பிறகு இந்த கண்ணாடி கிண்ணத்தில் இருக்கக்கூடிய கல் உப்பை ஓடுகின்ற நீரில் போட்டுவிட்டு புதிதாக கல்லுப்பை எடுத்து வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

இப்படி தொடர்ந்து  மூன்று, ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் பௌர்ணமி தினங்களில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அவ்வாறு வழிபாட்டு வருவதன் மூலம் உங்கள் பிரச்சினைகள் தீரும். வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். பணம் கையில்  சரளமாகப் புழங்கும். மகாலட்சுமியின் திருவருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.