Ashta Aishwarya Program: 9-Month Program to Manifest Eight Types of Wealth Join Now
பணம் சேமிக்கும் பரிகாரம் – செல்வ வளம் பெருகும் எளிய வழிகள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

பணம் சேமிக்கும் பரிகாரம்

Posted DateAugust 9, 2025

நமது தேவைகள் அனைத்தும் நிறைவேற பணம் அவசியம் தேவை. அதற்கு முதலில் பணத்தை சம்பாதிக்க வேண்டும். பணத்தை சம்பாதித்தால் மட்டும் போதாது. அதனை சேமிக்கவும் வேண்டும். பணத்தை சேமிக்க எல்லாராலும் இயல்வதில்லை. ஒரு சிலரால் மட்டும் தான் சிக்கனமாக இருந்து பணத்தை சேமிக்க முடிகிறது. பலருக்கு இது இயலாத காரியம் ஆகி விடுகிறது. அவ்வாறு சேமிக்க இயலாதவர்கள் ஆன்மீக ரீதியாக என்ன செய்தால் பணத்தை சேமிக்க இயலும் என்று இந்தப் பதிவில் காணலாம்.

நீங்கள் மாத ஊதியம் பெறுபவர் என்றால் உங்கள் சம்பளத்தில் முதல் தொகையாக ஒரு சிறு தொகையை முதலில் இறைவனுக்கு என்று தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த தொகை உங்கள் சக்திக்கு தகுந்தாற்போன்று இருக்கலாம். அதற்கென்று ஒரு தனி பர்ஸ் அல்லது உண்டியல் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சேமிக்கப் போகும் தொகையை சாமி முன் வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சேமிக்கும் தொகை பத்து ரூபாய், நூறு ரூபாய் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நல்ல நேரம் பார்த்து இந்த சேமிப்பை ஆரம்பியுங்கள். அதன் பிறகு நீங்கள் ஒவ்வொரு செலவை மேற்கொள்ளும் போதும் அதிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து இந்த உண்டியல் அல்லது பணப் பையில் போட்டுக் கொண்டே வாருங்கள். உதாரணமாக நீங்கள் வாடகைத் தொகை கட்டுகிறீர்கள் என்றால் அன்றைய தினம் ஒரு தொகையை-அது பத்து ரூபாயாக இருந்தால் கூட பரவாயில்லை. அந்த உண்டியலில் போட்டுக் கொண்டே வாருங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள். இதனை நீங்கள் தொடர்ந்து 21 நாட்கள் செய்து வர அது உங்களுக்கு பழகி விடும். மேலும் ஜோதிட ரீதியாக இந்த சேமிப்பு செய்வதை குளிகை நேரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அந்த நேரத்தில் செய்யும் செயல்கள் மீண்டும் மீண்டும் நடை பெறும் என்பது ஐதீகம். அதனால் உங்களால் தொடர்ந்து பணத்தை சேமிக்க இயலும்.

இந்த பணத்தை இறைவனுக்கு என்று நேமித்து விடுங்கள். பிறகு நீங்கள் குல தெய்வம் கோவிலுக்கு செல்லும் போது இந்தப் பணத்தைக் கொண்டு கைங்கரியம் மேற்கொள்ளுங்கள். அதாவது  அர்ச்சனை, அபிஷேகம், வஸ்திரம், பொங்கல் இடுதல் போன்ற காரியங்களுக்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை தொடர்ந்து செய்து வர உங்கள் சேமிக்கும் பழக்கம் மேம்படும். உங்கள் கையில் பணம் சேரும். வீண் விரயம் தடுக்கப்படும். குல தெய்வ அருளும் கிட்டும். உங்கள் வாழ்வில் நலம் பெருகும்.