ஒரே ராசி நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா? | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ஒரே ராசி, ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்யலாமா?

Posted DateAugust 4, 2025

விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இந்த காலத்திலும் ஜாதகம் பார்த்து திருமணம் நடத்துபவர்களும் இருக்கிறார்கள். காதல் திருமணம் என்றால் கூட, பல பெற்றோர்கள் ஒப்புதல் அளிப்பதற்கு முன் ராசி நட்சத்திர பொருத்தம் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். அதற்குக் காரணம்   திருமணம் என்பது கணவன்-மனைவி இருவரின் மகிழ்ச்சியான வாழ்க்கை மட்டும் அல்ல.  குழந்தை பிறப்பு, மாங்கல்ய பலம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், பிரகாசமான எதிர்காலம் போன்றவை எவ்வாறு இருக்கும் என்பதும் அதில் அடங்கும். மேலும் இரு வீட்டாரின் உறவும் சுமுகமாக இருக்க வேண்டும்.  எனவே தான் தம்பதிகளாகப் போகும் ஆண் பெண் இருவரின்  ஜாதகத்தின்படி, ஜோதிடர்கள் மேற்கண்ட அம்சங்களை கணித்துக்  கூறுகிறார்கள். ஆண் மற்றும் பெண் வீட்டார் இருவரும் தமக்கு முறையே  மருமகளும் மருமகனும் வருகிறார்கள் என்ற சந்தோஷத்தில் இருப்பார்கள். திருமண நாள் இனிய தருணம் என்றாலும் இந்த நாள் வாழ்க்கையில் ஒற்றுமை மற்றும் சகல க்ஷேமங்களையும் சந்தோஷங்களையும் அளிக்கும் நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் நாள் என்று இதனை வரவேற்பார்கள். எனவே தான் ஜோதிடம் பார்க்கிறார்கள்.

திருமணப் பொருத்தம்

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்றும் வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்றும் கூறுவார்கள். எனவே திருமணம் நடத்துவதற்கு முன் பல விஷயங்களை கருத்தில் கொள்வார்கள். அவற்றுள் ஒன்று தான் திருமணப் பொருத்தம். மனப் பொருத்தம் முக்கியம் என்றாலும் ராசி, நட்சத்திர, ஜாதகப் பொருத்தம் காண வேண்டியது அவசியம். கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு என்பார்கள். திருமணத்திற்கு தசவித பொருத்தம் என்னும் பத்து பொருத்தம் காண்பார்கள் என்பது நாம் அறிந்த ஒன்று. இந்தப் பதிவில் ஒரே ராசி, ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்யலாமா? என்பதைப் பற்றிக் காணலாம் வாருங்கள்.

ராசி மற்றும் நட்சத்திரம்

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு திருப்பு முனை என்றே கூற வேண்டும். திருமணம் செய்து கொள்ளும் இருவரும் மனமொத்த தம்பதிகளாக இருக்க வேண்டும். அது மட்டும் இன்றி ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும். தேவைப்படும் நேரத்தில் உதவிக் கரம் நீட்டத் தயாராக இருக்க வேண்டும். அதற்கு இருவரும் உடல் மற்றும் மனதளவில் தயாராக இருக்க வேண்டும். மற்றும் தங்கள் பொருளாதார நிலையிலும் வலுவாக இருக்க வேண்டும். ஜோதிடக் கூற்றுப் படி நமது வாழ்வின் இன்ப துன்பங்களை நவகிரகங்கள் தான் நிர்ணயிக்கின்றன. தசாபுத்தி, கிரகங்களின் கோட்சார நிலை, ஏழரை சனி, குருபலம், எனப் பல்வேறு அம்சங்கள் நமது வாழ்வின் நிகழ்வுகளுக்கு காரணமாக அமைகின்றன. இவை யாவும் நமது நட்சத்திரம் மற்றும் ராசியை அடிப்பையாக வைத்தே நடக்கின்றன. ஒருவர் பிறக்கும் போது சந்திரன் எந்த ராசியில் இருக்கிறதோ அதுவே அவரின் ஜென்ம ராசி ஆகும். அந்த ராசியில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ அதுவே அந்த நபரின் நட்சத்திரம் ஆகும். அந்த நட்சத்திரத்தை வைத்து தசா புத்தி என்ன  என்பதைக் கணிக்கலாம். நவகிரகங்கள் தாம் நம்மை ஆட்டுவிக்கின்றன. எனவே ஒருவரின் தசா புத்திக்கேற்பத் தான்  அவரவர் வாழ்வில் நன்மை மற்றும் தீமைகளை சந்திக்க நேரும்.

ஒரே ராசி, ஒரே நட்சத்திரக்காரர்களுக்கு ஏன் திருமணம் செய்யக்கூடாது?

ஒரே ராசியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால், அதுவும் ஒரே நட்சத்திரமாகி விட்டால்  பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும் என்பது நம் முன்னோர்களின் கூற்று. ஒரே ராசியில், ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால், இருவருக்கும் தசா புத்தி ஒரே மாதிரியாக இருக்கும். அந்த நேரத்தில் இருவருக்கும் ஒரே மாதிரியான பிரச்சினை இருக்கும். ஒருவருக்கொருவர் உதவ இயலாமல் போகலாம். உதாரணமாக ஏழரை சனி இருவருக்கும் ஒரே நேரத்தில் வந்தால் அதனால் ஏற்படும் துன்பங்கள் ஒருவருக்கு மட்டும் இன்றி இருவருக்கும் இருப்பதால் இரட்டிப்பான துன்பம் இருக்கும். அதனால் நன்மை என்றாலும் இரட்டிப்பாகும்.  அதாவது வருமானம் என்றாலும் இரட்டிப்பாகும், செலவு என்றாலும் இரட்டிப்பாகும். கோச்சார கிரகங்களின் பாதிப்புகள் மற்றும் சாதகமற்ற சஞ்சாரம் காரணமாக ஒரே நட்சத்திரத்தில் ஒரே பாதத்தில் இருப்பவர்களுக்கு மன உளைச்சல் மற்றும் பணப் பிரச்சனைகள் ஏற்படும். அதைக் கருத்தில் கொண்டு ஒரே ராசியில் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் செய்வித்தல் கூடாது என்று நம் முன்னோர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், ஒரே ராசியில் வெவ்வேறு நட்சத்திரத்தில் திருமணம் புரியலாம். அப்பொழுது திசா புத்தி மாறி வரும். எனவே ஓரளவு சமாளித்து வாழ்க்கை நடத்த முடியும்.

 திருமணம் செய்ய போகும் ஆண் / பெண் இருவருக்கும்

ரோகினி, திருவாதிரை, மகம், அஸ்தம், உத்திரட்டாதி, ரேவதி, விசாகம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களில் ஆண், பெண இருவருக்கும் ஒரே மாதிரியான நட்சத்திரம் இருந்தது என்றால் திருமணம் முடிப்பது நல்லது. இவை தசா சந்திப்பு தோஷத்தை ஏற்படுத்தாது.

அஸ்வினி, கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூரம், பூசம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம் போன்ற நட்சத்திரங்கள் இருவருக்கும் ஒரே நட்சத்திரங்கள் கொண்டவர்களாக இருந்தால் பரிகாரத்திற்கு பின்பு திருமணம் செய்து கொள்ளலாம்.

திருமணம் செய்யக்கூடாத ஒரே நட்சத்திரம்:

பரணி, ஆயில்யம், ஸ்வாதி, கேட்டை, மூலம்,  அவிட்டம், சதயம், பூரட்டாதி போன்ற நட்சத்திரம் ஆண், பெண் இருவருக்கும் ஒன்றாக இருந்தால் திருமணம் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது.