Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
3 நெற்கோட்டு நரசிம்மர் கோவில்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ஒரே நேர்க்கோட்டில் அமைந்த 3 நரசிம்மர் ஆலயங்கள்

Posted DateJuly 4, 2025

 நேர்கோட்டு நரசிம்மர் என்பது, ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள மூன்று நரசிம்மர் கோயில்களைக் குறிக்கும். சிங்கிரிக்குடி, பூவரசங்குப்பம், பரிக்கல் ஆகிய மூன்று கோயில்களும் இந்த வரிசையில் அமைந்திருக்கின்றன. இந்த மூன்று கோயில்களையும் ஒரே நாளில் தரிசிப்பது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது

நரசிம்மர் விஷ்ணுவின் நான்காவது அவதாரம் ஆகும். நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளார் என்பதை உணர்த்துவதாகும். பக்தி மட்டுமே பிராதானம் என்பதை உணர்த்தும் அவதாரம் ஆகும்.  பக்தர்கள் எப்பேர்பட்ட சிக்கலான சூழ்நிலையில் இருந்தாலும் அவர்களை உடனடியாக வந்து காப்பாற்றும் அவதார புருஷராக  அவர் விளங்குகிறார். மேலும் இந்த அவதாரம் பக்தர்களின் பக்தி,  பிறப்பால் வருவது அல்ல குணத்தால் வருவது என்பதை உணர்த்துகிறது. பிரகலாதன் அசுரனாகப் பிறந்தாலும் இறைவன் மீது இருக்கும் சிறநத பக்திக்கு உதாரணமாக விளங்குகிறார்.எப்பேர்பட்ட தடை, அவமானங்கள் வந்தாலும் நம்பிக்கையை விடவில்லை.

இவர் அவதரித்த தலமாக ஆந்திராவில் உள்ள அகோபில மடம் போற்றப்படுகிறது. நரசிம்மருக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆலயங்கள் அமையப்பெற்றுள்ளன. அவற்றுள் அட்ட நரசிம்ம தலங்கள் என்பவை மகாவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்ததாகக் கருதப்படும் எட்டு புனித தலங்களாகும். இவை தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. அவை சோளிங்கர், நாமக்கல், பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கிரிக்குடி, சிங்கபெருமாள் கோவில், அந்திலி, மற்றும் சிந்தலவாடி ஆகும்.

அவற்றில், ஒரே நாளில் தரிசிக்கக்கூடிய வகையில் ஒரே நேர்க்கோட்டில் மூன்று நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன. அவை, சிங்கிரிக்குடி, பூவரசங்குப்பம், பரிக்கல் ஆகிய தலங்களாகும். இந்த மூன்று ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

சிங்கிரிக்குடி

புதுச்சேரியில் இருந்து இந்த தலம் மிக அருகில் உள்ளது. எனவே ஒரே நாளில் 3 நரசிம்மரை வழிபட விரும்புபவர்கள், புதுச்சேரியில் இருந்து  நரசிம்மர் வழிபாட்டைத் தொடங்கலாம். சிங்கிரிக்குடியில் வீற்றிருக்கும் நரசிம்ம மூர்த்தியின் திருநாமம், ‘லட்சுமி நரசிம்மர்’ என்பதாகும். இங்கு இவர் உக்கிர நரசிம்மராக அருள்கிறார். இந்த நரசிம்மர் 16 கரங்களுடன் காட்சி தருகிறார். இரண்டு கரங்கள் இரண்யகசிபுவின் உடலை கிழித்த படியும், மற்ற கரங்களில் பதாககிஸ்தம், ப்ரயோக சக்கரம், ஷீரிகா எனும் குத்துக்கத்தி, காணம், ராட்சசனின் தலையை அறுத்தல், கத்தியால் அசுரன் ஒருவனைக் கொல்லுதல், இரண்யனின் காலை அழுத்தி பிடித்தல், சங்கம், வில், கதை, கேடயம், வெட்டப்பட்ட தலை, இரண்யனின் தலையை அழுத்திப் பிடித்திருப்பது, குடலைக் கிழிப்பது என்று காட்சி தருகிறார்.
தாயாரின் திருநாமம் கனகவல்லி ஆகும். திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள், இங்குவந்து லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த உக்கிர நரசிம்மரை வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும். இந்த ஆலயம் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும். புதுச்சேரியில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சிங்கிரிக்குடி.

பூவரசங்குப்பம்

சிங்கிரிக்குடியில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த ஊரை அடையலாம். நேர்கோட்டில் உள்ள லட்சுமி நரசிம்மர் தலங்களில் நாம் 2-வதாக வழிபட வேண்டியது இது. இந்த ஆலயத்திலும் இறைவன், ‘லட்சுமி நரசிம்மர்’ என்ற திருநாமத்துடனேயே அருள்பாலித்து வருகிறார். இத்திருத்தல மூலவர் லட்சுமி நரசிம்மர் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றன. ஒரு கையால் லட்சுமியை (அமிர்தவல்லித் தாயாரை) அணைத்துக் கொண்டிருக்கிறார். வலது கையால் பக்தர்களுக்கு அருள் வழங்குகிறார்.இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை வழிபாடு செய்து வந்தால், உடல்பிணி மற்றும் சகலவிதமான தோஷங்கள் நீங்கும். இந்த ஆலயம் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

பரிக்கல்

பூவரசங்குப்பத்தில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் இருக்கிறது. நரசிம்மர் ஆலயத்தில் மூன்றாவதாக வழிபட வேண்டிய கோவில் இது. இந்த ஆலய இறைவனின் பெயரும், ‘லட்சுமி நரசிம்மர்’தான். தாயாரின் பெயர் கனகவல்லி என்பதாகும். பதவி உயர்வு வேண்டும் என்று நினைப்பவர்கள், பதவி இழந்தவர்கள் அந்தப் பதவியை மீண்டும் பிடிப்பதற்கும் இங்கு வந்து வழிபாடு செய்யலாம். காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் இந்த ஆலயம் திறந்திருக்கும். விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில் விழுப்புரத்தில் இருந்து சுமார் 21 கிலோமீட்டரில் பரிக்கல் இருக்கிறது.

இந்த 3 லட்சுமி நரசிம்மர் கோவில்களும் மேற்கிலிருந்து கிழக்காக ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன. ஒரே நாளில் இந்த லட்சுமி நரசிம்மர் கோவில்களை தரிசிப்பது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. காலையில் சிங்கிரிகுடி, பகலில் பூவரசன்குப்பம், இறுதியில் பரிக்கல் என்ற வரிசைப்படி தரிசிக்க வேண்டும்.