Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
செவ்வாய் தோஷம் நிவர்த்தியாக சங்கு பூஜை
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

செவ்வாய் தோஷம் நிவர்த்தியாக சங்கு பூஜை

Posted DateFebruary 8, 2024

செவ்வாய் தோஷம் :

லக்னத்திற்கு 2,4,7,8,12 ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம்  என்பது விதி. ஆனால் ஆண்களுக்கு 2,7,8 லும் பெண்களுக்கு 4,8,12 லும் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு என்பது சிறப்பு விதி. விதி விலக்குகளும் உண்டு ஜோதிடம் அறிந்தவர்கள் அதனைப் பற்றி நன்கு அறிவார்கள்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் என்றதுமே ஒருவித பதற்றத்துக்கும் அவநம்பிக்கைக்கும் ஆளாகிவிடுகிறோம். காரணம், கல்யாணத் தடைக்குக் காரணமாகிவிடுகிறது இந்த தோஷம்.

செவ்வாய் தோஷம் முதலான தோஷம் ஏற்படக் காரணம்

பூர்வ ஜன்ம வினைகளும், பாவங்களும் தோஷங்களாக மாறுகின்றன என்கின்றன ஞானநூல்கள். அந்த வகையில் பூர்வ ஜன்மத்தில் பெற்றோரை சரியாகக் கவனிக்காதவர், முதிய வயதில் அவர்களை முறையாகப் பேணாதவர், மறுஜன்மத்தில் செவ்வாய் தோஷத்துக்கு ஆளாவர் என்கின்றன ஜோதிட நூல்கள். அதேபோல், சகோதர- சகோதரிக்குச் சேரவேண்டிய சொத்துக்களை ஒருவரே அபகரிக்கும் போதும், ஒரு நிலத்தை அநியாய விலைக்கு ஏமாற்றி விற்கும்போதும், அந்த நபரை பூமிகாரகனான செவ்வாயின் கோபம் தோஷமாக தாக்குகிறது.

செவ்வாய் தோஷந்தால் ஏற்படும் பிரச்சினைகள்

2-ல் செவ்வாய்:  இரண்டாம் இடம் தனம், குடும்பம், வாக்கு ஸ்தானம் ஆகும். இரண்டாமிடத்தில் செவ்வாய் இருந்தால், மற்றவர் மனத்தைப் புண்படுத்தும்படி பேச்சு வெளிப்படும். அதனால் பிரச்னைகள் எழும். குடும்ப ஒற்றுமை பாதிக்கப்படும்.

4-ல் செவ்வாய்:  நாலாம் இடம் சுக போக ஸ்தானம் ஆகும். இந்த இடத்தில் செவ்வாய் இருந்தால் கடுமையான பிடிவாதம் இருக்கும். அதுவே மற்றவர்களின் புறக்கணிப்புக்கு ஆளாக்கும்.

7-ல் செவ்வாய்: ஏழாமிடம் களத்திரம் என்னும் வாழ்க்கைத் துணையைக் குறிக்கும் ஸ்தானம் ஆகும். வாழ்க்கைத் துணையுடன் ஏட்டிக்குப் போட்டி யாகவே பேசிக் கொண்டிருப்பார். இவர்களுக்கு, 7-ல் செவ்வாய் இருக்கும் ஜாதகக்காரர்களையே மணம் செய்து வைப்பது நல்லது. இவர்கள் வியாபாரத்தில் பார்ட்னர்ஷிப்பைத் தவிர்ப்பது நல்லது.

8-ல் செவ்வாய்: எவ்வளவு செல்வம் சேர்ந்தாலும் திடீர் விரயம் ஏற்படும். பயணங்களால் அலைக்கழிப்புகள் அதிகமாகும். வாழ்வில் ஸ்திரத்தன்மை இருக்காது.

12-ல் செவ்வாய்: நிம்மதியான தூக்கம் இருக்காது. பழிவாங்கும் குணம் மிகுந்திருக்கும். இவர்களை வெளிப்படையாகப் பேச விடாமல் கல்லுளிமங்கனாக மாற்றிவிடுவார் செவ்வாய். சமூகம் தள்ளிவைக்கும் நபர்களிடம் இவர்கள் பழகி, கெட்ட பெயர் சம்பாதித்துக் கொள்வர்.

செவ்வாய் தோஷத்துக்குப் பரிகாரம்தான் என்ன?

செவ்வாய்க்கிழமை அன்று சங்கை வைத்து வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் பூஜை செய்தால் செவ்வாய் தோஷம் நீங்கும். தேவர்களும் அசுரரக்ளும் பாற்கடலைக் கடைந்த பொழுது வெளிப்பட்ட 16 வகைப் பொருட்களில் சங்கும் ஒன்று.

அந்த பூஜையை பற்றி இந்த  பதிவில் பார்க்கலாம்.

.ஜாதகத்தில் செவ்வாய் அமரும் நிலையைப் பொறுத்து அதன் பாதிப்பு மற்றும் தாக்கம் ஜாதகருக்கு இருக்கும். இந்த தோஷம் ஆண் பெண் என யாரு பாலாருக்கும் பொதுவானது. செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீட்டில் ஒரு சங்கை வைத்து பூஜை செய்தால் செவ்வாய் தோஷத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். 

இந்த பூஜையை செவ்வாய் அன்று தான் செய்ய வேண்டும். செவ்வாய் ஹோரை உள்ள நேரத்திலும் இந்த பூஜையை செய்யலாம். பூஜை செய்யுன் நாள் அன்று வீட்டை சுத்தம் செய்துவிட்டு காலையிலேயே எழுந்து உடல் தூய்மை செய்து கொள்ள வேண்டும். ஒரு வெள்ளி தட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.   அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். வெள்ளி தட்டை வீட்டில் இருக்கும் அம்மன் படத்திற்கு முன்பாக வைக்க வேண்டும். அம்மன் படத்தையும் சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். அம்மனுக்கு நெய்வேத்தியமாக இரண்டு வாழைப்பழத்தை வைக்க வேண்டும். இப்பொழுது சங்கை சுத்தம் செய்து அதற்கும் சந்தனம் குங்குமம் வைத்து அந்த சங்கை வெள்ளித்தட்டின் மேல் வைத்து விட வேண்டும். பிறகு அதற்கு பூ வைக்க வேண்டும். பிறகு அந்த சங்கில் காய்ச்சாத பசும்பாலை ஊற்ற வேண்டும். அதற்கு மேல் இரண்டு துளசி இலைகளை வைக்க வேண்டும். அடுத்ததாக சங்கு மந்திரத்தை கூற வேண்டும்.

“ஓம் பவன ராஜாய வித்மஹே பாஞ்ச ஜன்யாய தீமஹி தந்நோ சங்க ப்ரசோதயாத்”

இந்த மந்திரத்தை 27, 54, 108 என்ற எண்ணிக்கையில் கூற வேண்டும். பூஜை செய்து முடித்த பிறகு சங்கில் இருக்கக்கூடிய பாலை பூஜை செய்தவர்களும் வீட்டில் இருப்பவர்களும் பிரசாதமாக கொடுத்து அருந்த வேண்டும். பிறகு சங்கை சுத்தம் செய்து நீர் உலர்ந்த பிறகு ஒரு பட்டு துணியால் சங்கை சுற்றி பூஜை அறையில் வைத்து விட வேண்டும். இப்படி தொடர்ந்து 27 செவ்வாய்க்கிழமை சங்கை வைத்து பூஜை செய்வதன் மூலம் செவ்வாய் தோஷம் நீங்கும்.

இந்த பூஜையை தொடர்ந்து 48 நாட்கள் செய்தால் எந்த நோக்கத்திற்காக நாம் செய்கிறோமோ அந்த நோக்கம் நடைபெறும். இந்த பூஜையை செய்யும் பொழுது கண்டிப்பாக அசைவத்தை தவிர்க்க வேண்டும். மேலும் இந்த பூஜையை வெள்ளிக்கிழமை தோறும் நாம் சுக்கிர ஹோரையில் செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருளை பரிபூரணமாக பெற முடியும். ஏகாதசி நாட்களில் செய்யும் பொழுதும் புதன்கிழமை தோறும் செய்யும்பொழுதும் மகாவிஷ்ணுவின் அருளைப் பெற முடியும்.