மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கிருஷ்ண பகவான் கூறுகிறார். மார்கழி மாதம் நல்ல விஷயங்களை செய்யக் கூடாது என்பார்கள். ஆனால் மார்கழி மாதம் மிகச் சிறப்பு மிக்க மாதம் ஆகும். அது பகவானுக்கு உரிய மாதம் ஆகும். அவன் சிறப்பைக் கூறி அவனைக் கொண்டாட வேண்டிய மாதம் ஆகும். முழுக்க முழுக்க அவனுக்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டிய மாதம் ஆகும். மார்கழியில் சுப காரியங்கள் செய்தால் நாம் இறைவனை நாடாமல் அதில் சமயத்தைக் கழிப்போம். எனவே தான் மார்கழியில் சுப காரியங்களை விலக்க வேண்டும். என்று கூறுகிறார்கள்.
மார்கழி மாதம் என்பது தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். எனவே இதனை தேவர்களுக்கு உரிய மாதம் என்றும் கூறுவார்கள். மார்கழி மாதம் அதிகாலையில் வீட்டு வாசலில் கோலமிட்டு விளகேற்ற வேண்டும் என்பது ஐதீகம். பூமிப்பிராட்டியும், பெரியாழ்வாரின் மகளான, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்றும், கோதை என்றும் அழைக்கப்படும் ஆண்டாள், பாவை நோன்பு நோற்ற காலம் ஆகும். சைவ, வைணவ பாகுபாடு இல்லாமல் அனைத்து ஆலங்களிலும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடி வழிபடும் காலமாகும்.
மார்கழி மாதம் அதிகாலையில் எழுந்து பஜனை செய்தல், கோலமிடுதல் ஆகியவற்றிற்கு அறிவியல் ரீதியாகவும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதிகாலையில் ஓசோன் படலம் அதிகரித்து காணப்படும். அதிக அளவில் ஆக்சிஜன் கிடைக்கும் என்றும் கூறுவார்கள். மேலும் மார்கழி மாதம் பனி நிறைந்து காணப்படும். அதிகாலைப் பணி நம்மை பாதிக்காது என்பதால் மார்கழியில் அதிகாலை எழ வேண்டும் என்று கூறுவார்கள்.
கஷ்டம் நீங்கி,வாழ்வில் மேன்மை பெற மார்கழி வழிபாடு
குளிர் காலத்தின் ஆரம்ப காலமாக சொல்லப்படும் மார்கழி மாதத்தில் தான் பெருமாளுக்குரிய வைகுண்ட ஏகாதசி விழாவும், சிவனுக்குரிய ஆருத்ரா தரிசன விழாவும், அனுமன் ஜெயந்தியும் நடத்தப்படுகிறது. பல சிறப்புகள் கொண்ட இந்த தெய்வீக மாதத்தில் ஜோதிட ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் சிற குறிப்பிட்ட வழிபாடுகளை செய்தால் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும்.
மார்கழி வழிபாடு :
தமிழ் மாதம் மொத்தம் பன்னிரண்டு. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்த வகையில் மார்கழி மாதத்திற்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. மார்கழி மாதம் என்பது மிகவும் புண்ணியமான காலமாகும்.பீடு நடை போட்டு பக்தியில் நாம் திளைக்க வேண்டிய மாதம் ஆகும்.தேவர்கள் கண் விழிக்கும் காலத்தில் நாம் வழிபாடு செய்தால் உடனடியாக பலன் கிடைக்கும். சூரியன் குரு பகவான் வீட்டில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் இந்த மாதம் பிரம்ம முகூர்த்த வழிபாடு அதீதமான பலன்கள் கிட்டும். எனவே இந்த மாதம் இறைவனை வழிபட்டு அவரவர்க்கு தேவையானதை இறைவனிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். எனவே தமிழ் மாதங்களிலேயே இந்த மாதத்தில் தான் நாம் செய்கின்ற வழிபாடுகள், பிரார்த்தனைகள் அனைத்தும் பல மடங்கு அதிகமாக பலன்களை தரக் கூடியது. மார்கழியின் 30 நாட்களும் ஒரே ஒரு வழிபாட்டினை நம்முடைய வீட்டில் தவறாமல் செய்து வந்தால், நம்முடைய வாழ்விலும், வீட்டிலும் இருக்கும் அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி, வளர்ச்சியும், மலர்ச்சியும் ஏற்படும்.
கஷ்டத்தை போக்கும் வழிபாடு :
மார்கழியின் 30 நாட்களும் காலையில் பிரம்ம முகூர்த்த எனப்படும் 04.30 மணி முதல் 6 மணிக்குள் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் பூஜை செய்ய வேண்டும்.ஆண்டாள் நமக்கு காட்டிய பாவை நோன்பு நோற்கலாம். வீட்டிற்குள் பூஜை அறையில் பூஜை செய்வதற்கு முன், வாசலில் சாணத்தால் மெழுகி, பச்சரிசி மாவினால் கோலிமிட வேண்டும். சாணம் இல்லாவிடில் மஞ்சள் தூளில் சிறிது பச்சைக் கற்பூரம் மற்றும் ஏலக்காயை பொடி செய்து கலந்து, சாணத்தால் மெழுகுவதை போல் வாசலில் மெழுகி, அதன் மீது அரிசி மாவினால் கோலமிட வேண்டும்.நிலை வாசலுக்கு முன் இரண்டு விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். இறைவனுக்கும் விளக்கு ஏற்றி இறைவனை வேண்டி வந்தால் உங்கள் கஷ்டங்கள் தீரும். அன்று முடிந்தால் அன்னதானம் செய்வது சிறப்பு.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025