AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now
மார்கழி மாத சிறப்புகள் | Margazhi Month Special in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மார்கழி மாதத்தின் சிறப்புகள்

தமிழ் மாதங்கள் மொத்தம் பன்னிரண்டு ஆகும். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்த வகையில் மார்கழி மாதத்திற்கும் தனிச் சிறப்பு உண்டு. மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் கிருஷ்ணர் கூறுகிறார். அத்துனை சிறப்பு வாய்ந்தது மார்கழி மாதம். இதன் சிறப்பு தெரியாமல் சிலர் இதனை தமிழில் பீடை மாதம் எனவும் கூறுவார்கள். ஆனால் உண்மையில் அது பீடு உடைய மாதம் ஆகும். அதாவது சிறப்பு கொண்ட மாதம் என்று பொருள்.எனவே மார்கழி மாதம் இறைவனுக்கு உரிய மாதமாக விளங்குகிறது. மற்ற மாதங்களில் ஒரு நாளோ, ஒரு கிழமையோ மட்டுமே  இறைவனுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால் மார்கழியில் மட்டும் அந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது.

தேவர்களின் பிரம்ம முகூர்த்த்தம்

ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள். இதனை இரண்டு அயனங்களாக பிரித்து கூறுவார்கள். இரண்டு அயனங்களும் முறையே உத்தராயணம், தக்ஷிணாயணம் ஆகும். “தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய” உள்ள ஆறு மாதங்களுக்கு உத்தராயணம் எனவும், “ஆடி மாதம் முதல் மார்கழி முடிய” உள்ள ஆறு மாதங்களுக்கு தக்ஷிணாயனம் எனவும் பெயர்.

மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி  வரையுள்ள காலம் இரவு எனவும் ஆகும். இதன்படி தேவர்களுக்கு இரவுக் காலம் முடிகிற வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகின்றன. மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். சூரிய உதயத்துக்கு  முன்பான இந்தக் காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும்.

ஆண்டாள் புராண கதை:

ஒரு முறை பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமானுக்கு மாலை தொடுக்க வேண்டி, தான் வளர்த்து வந்த மலர்த்தோட்டத்தில், பூப்பறிக்கச் சென்றார். அப்போது துளசிச்செடியின் கீழே அவருக்கு கிடைத்த குழந்தைதான் ஆண்டாள்.பெரியாழ்வார் அந்தக் குழந்தையை எடுத்து `கோதை’ எனப் பெயரிட்டு வளர்த்தார். குழந்தைப் பருவத்தில் தந்தையிடம் கண்ணனின் கதைகளைக் கேட்டுக்கேட்டு வளர்ந்த கோதையோ, கண்ணன் மீது அபரிமிதமான அன்பும், காதலும் கொண்டு அவனையே தனது கணவனாகவும் நெஞ்சில் ஏற்கிறாள்.

தினந்தோறும் பெரியாழ்வார், பெருமாளுக்குத் தொடுக்கும் மாலைகளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாகச் சூடி, “இந்த மாலைக் கண்ணனுக்கு அழகாக இருக்குமா… இதைத் தானும் சூடி, அவனருகே நின்றால் இருவருக்கும் பொருத்தமாக இருக்குமா…’ என்று அழகுபார்த்த பின்னரே ஒவ்வொரு நாளும் மாலையைக் கடவுளுக்கு கொடுத்தனுப்புகிறாள்.

ஒருமுறை அதனை நேரில் கண்ட பெரியாழ்வார், மகளைக் கோபித்துக்கொண்டு மறுநாள் கோதை சூடாத மாலையை எடுத்துக்கொண்டு செல்கிறார். ஆனால், கடவுளோ அந்த வெறும் மாலையை மறுத்து, “அந்தப் பெண் சூடிய மாலைதான் எனக்கு ஏற்றது. அதை எடுத்து வாருங்கள்..” என்று பெரியாழ்வாரின் கனவில் தோன்றி கட்டளையிட, அன்று முதல் `சூடிக்கொடுத்த சுடர்க்கொடியும்’ ஆகிறாள் கோதை.

பாவை நோன்பு:

பக்தியின் மிகுதியால், தன்னையும் ஆயர்பாடியில் பிறந்த ஒரு பெண்ணாக பாவித்து, தான் மிகவும் நேசித்த கடவுளான கண்ணனையே தன்னுடைய கணவனாக அடையவேண்டி, பாவை நோன்பு மேற்கொண்டு கண்ணனை அடைந்தாள் ஆண்டாள்.  அதற்காக அவள் பாடிய பாடல்களே திருப்பாவை.

பன்னிரண்டு ஆழ்வார்களில், ஆண்டாள் மட்டுமே பெண் என்பதால், மற்ற ஆழ்வார்களுக்கில்லாத சிறப்பாக, கண்ணன் மீது கொண்ட பக்தியை அவளால் காதலாகவும் வழங்க முடிந்தது.

பாவை நோன்பு என்பது உண்மையில் கன்னிப் பெண்களுக்கானது. தனக்கு ஏற்றார்போல் வாழ்க்கைத் துணையை அடையவும், தனது மனதிற்கேற்றார் போல் ஒரு வாழ்க்கை அமையவும், கண்ணனை வேண்டி கன்னிப் பெண்கள் மேற்கொள்வதுதான் இந்தப் பாவை நோன்பு.

அறிவியல் ரீதியாக மார்கழி மாதம்

மார்கழி என்றவுடன், நாம் அனைவரும் விடியற் காலையில் எழுந்து வாசல் தெளித்து பெரிய பெரிய கோலமிட்டு அதன் நடுவில் பூசணிப் பூவை வைப்பது நினைவிற்கு வரும். முற்காலத்தில் இந்தப் பூ யார் வீட்டு வாசலில் இருக்கிறதோ அங்கு ருதுவான பெண் திருமணத்திற்கு தயாராக இருக்கிறாள் என்று அர்த்தம். அதனைக் கண்டு மார்கழி முடிந்து தை பிறந்தவுடன் பெண் கேட்டு செல்வார்கள்.  தை பிறந்தாள வழிபிறக்கும் என்ற கூற்று நாம் அறிந்த ஒன்றாகும்.   மார்கழி குளிரில் குளிர்ந்த நீரில் குளித்து, சில்லென்ற பனிக்காற்றில் வேகநடை நடந்து, வழி முழுவதும்  திருப்பாவை பாசுரங்களைப் பாடி, திருக்கோயிலுக்குச் சென்று, பெருமாளை தரிசித்த பிறகு,  தீர்த்தப் பிரசாதம் பெற்று வருவதை பெரும் பேறாக கருதுவார்கள்.  இந்த நேரத்தில் ஒசோன் படலம் நம்மை காப்பதாக அறிவியல் ரீதியான காரணமும் கூறுவார்கள்.ஓசோன் உலகைப் பாதுகாப்பது மட்டுமன்றி, மருத்துவத்தில் காயங்களை ஆற்றவும், இருதய, நுரையீரல், கண், தோல் மற்றும் மூட்டு நோய்களைக் குணப்படுத்தவும், வயோதிகத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது.

இறைவனை வழிபடும் மாதம்

மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் சிவபெருமான் கோவில்களிலும் கூட சிறப்பு வழிபாடு நடைபெறும். பாவை நோன்பு, வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீஹனுமந்த் ஜெயந்தி, சிவபெருமானின் ஆருத்ரா தரிசனம் என அனைத்து இறைவழிபாடுகளும் மார்கழி மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. சபரி மலை விரதம், பூஜை, வழிபாடு என இவை அனைத்தும் கூட மார்கழி மாதத்தில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் தெய்வங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. மொத்தத்தில், தெய்வங்களை தொழுவதற்கென்றே உள்ள மாதம் தான் மார்கழி.

மார்கழி மாதத்தில் அதிகாலை கோலமிடுவது ஏன்?

மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்று கூறுவார்கள். இந்த மாதத்தில் சூரியன் குருவின் வீட்டில் (தனுசு ராசியில்) இருப்பார். இதன் காரணமாக சூரியக் கதிர்கள் பரவுவதற்கு முன் ஒரு தனி சக்தி உண்டாகும். இதன் காரணமாகவே அதிகாலையில் எழுந்து கோலமிட வேண்டும். அப்போது பெய்யும் பனிப்பொழிவானது தாக்கம் குறைந்ததாக, விஷத்தன்மையற்றதாக இருக்கும். சூரியக்கதிர் பரவுவதற்கு முன்னதாக வாசல் தெளித்து கோலமிடும்போது மார்கழி மாத தட்பவெப்பநிலைக்கு உடல் ஒத்துப்போகும். பெரிய நோய்கள் ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும். வாழும் சூழலுக்கு தகுந்தாற்போல் சீதோஷண நிலையை பயன்படுத்திக் கொள்ளவே, வாசலில் கோலமிட்ட பின்னர் விளக்கு வைத்து வழிபட வேண்டும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் விளக்கு வைப்பதால் அதிலிருந்து வெளியேறும் வெப்பம் வீட்டை கதகதப்பாக வைக்க உதவும். சீதோஷண நிலையும் சீராக இருக்கும்.