Ashta Aishwarya Program: 9-Month Program to Manifest Eight Types of Wealth Join Now
மாங்கல்ய தோஷம் இருக்கும் பெண் வாழ்க்கைத் துணையானால் ஏற்படும் பேராபத்து!
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மாங்கல்ய தோஷமும் பரிகாரமும்

Posted DateNovember 16, 2024

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் நடப்பது நல்லது. அப்பொழுது தான் வாழ்க்கையை முழுவதுமாக அனுபவிக்க இயலும். ஆனாலும் அவ்வாறு எல்லோருக்கும் நடந்து விடுகிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.  இதற்கு ஜாதகத்தில் இருக்கும் தோஷம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. களத்திர தோஷம், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் என பல தோஷங்களை கூறுவார்கள். அவற்றுள் ஒன்று மாங்கல்ய தோஷம், இந்த தோஷம் பெரும்பாலும் பெண்களுக்கு தான் இருக்கும்.

 கிரகங்களின் சேர்க்கை, கோச்சாரநிலை, தசா புத்திகள் போன்ற காரணிகளால், திருமணம் தாமதமாகும் அல்லது தடை உண்டாகும். பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்க தடையாக இருக்கும் கிரக அமைப்புகளைத்தான் மாங்கல்ய தோஷம்  என்கிறோம். ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து எட்டாம் இடத்தை மாங்கல்ய ஸ்தானம் என்று சொல்கிறோம்.

மாங்கல்ய ஸ்தானம், ஆயுள் ஸ்தானம் இரண்டுமே ஜாதகத்தில் எட்டாம் பாவகம் ஆகும். இந்த எட்டாம் இடத்தில் ராகு, கேது, சூரியன், செவ்வாய், சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷம் ஆகும். இதுவே திருமண தடையை மிகைப்படுத்துவதாக கூறப்படுகிறது. நீச, அஸ்தங்கம் பெற்ற  கிரகங்கள் எட்டாம் இடத்தில் அமர்வதால் மாங்கல்ய தோஷம் உண்டாகிறது.

 தோஷங்கள் என்பது அவரவர் செய்த வினைகளுக்கு ஏற்ப பின் தொடர்ந்து வரும் பாவங்கள் என ஆன்மீகம் கூறுகிறது. பலரும் இதனை நிவர்த்தி செய்ய முடியாது என்று நம்புகின்றனர். ஆனால் அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகாரங்கள் உள்ளன.

 மாங்கல்ய தோஷ பரிகாரங்கள் மற்றும் அதனை நிவர்த்தி செய்யும் கோயில்கள் குறித்து இங்கே காண்போம்.

மாங்கல்ய தோஷ பரிகாரம்:

 எந்த கிரகத்தினால் மாங்கல்ய தோஷம் ஏற்பட்டுள்ளது என அறிந்து அந்த கிரகத்திற்குப் பரிகாரம் செய்து வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும்.

 ஜாதகத்தில் எட்டாம் இடத்தை சுப கிரகமான குரு பார்த்தால் அதன் பலம் பெருகி தோஷ நிவர்த்தி ஆகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் சுக்கிர ஓரை நேரத்தில் வயது முதிர்ந்த சுமங்கலி பெண்களிடம் மங்களப் பொருட்கள் கொடுத்து ஆசி பெற வேண்டும். அவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் தோஷம் நிவர்த்தி ஆகும் என ஜோதிடம் கூறுகிறது.

வன்னி மர விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் அன்று மனம் உருகி வழிபட்டு அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு வஸ்திர தானம் செய்தால் மாங்கல்ய தோஷம் நீங்கும் எனக் கூறப்படுகிறது.

 திருமணத்திற்குப் பிறகு மாங்கல்யத்திற்கு ஆபத்து வருமா என்று பயப்படும் பெண்கள் செவ்வாய்க்கிழமை எமகண்டத்தில் பைரவருக்குச் சந்தனக் காப்பு செய்து, விரலி மஞ்சள் மாலை சூட்டி, மஞ்சள் கயிறு வைத்து, சக்கரை பொங்கல், பால் பாயசம், பானகம் நிவேதனம் செய்து சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து பைரவரை வழிபட வேண்டும்.

 செவ்வாய்க்கிழமை தோறும் அல்லது சஷ்டி தோறும் முருக வழிபாட்டை விரதத்தோடு செய்ய வேண்டும்.

தங்கத்தில் தாலி அணியாத அல்லது அணிய வசதி இல்லாத பெண்களுக்கு மாங்கல்யம் வாங்கி தானம் கொடுக்கலாம்.

முருகனின் சன்னிதியில் வயதான சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம் வெற்றிலை பாக்குடன் தட்சணை கொடுத்து அவர்களையும் ஆலயத்திற்கு வெளியில் வணங்கினால் தோஷ நிவர்த்தி கண்டிப்பாக உண்டு.

 பெண்களின் மாங்கல்ய தோஷத்திற்கு ஸ்ரீ மகாலட்சுமியைப் பூஜை செய்தல் மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும். ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சையில் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம்.

 அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவிக்கலாம், எலுமிச்சை அன்னம் படைத்து வழிபாடு செய்வது தோஷ நிவர்த்திக்குச் சிறப்பாக அமையும் எனக் கூறப்படுகிறது.

 மாங்கல்ய தோஷ தாக்கம் குறைய செல்ல வேண்டிய கோயில்கள்

தஞ்சை மாவட்டம் திருமங்கலக்குடியில் எழுந்தருளியுள்ள மங்கள நாதரர் ஆலயம்.

 மதுரை மாவட்டத்தில் சோழவந்தானில் உள்ள பிரளய நாதர் திருக்கோயில்.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்யாண ராமர் திருக்கோயில்

 தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழவாசலில் வீற்றிருக்கும் வல்லப விநாயகர் திருக்கோயில்

 திண்டுக்கல் மாவட்டத்தில் சிரஞ்சீவியாக வீற்றிருக்கும் அபய வரத ஆஞ்சநேயர் கோயில்.

 சாத்தூரில் உள்ள ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயில்.

 மதுரை மாவட்டத்திலுள்ள கெங்கமுத்து பாலமேடு நாகம்மாள் திருக்கோயில்

 மதுரை மாவட்டத்தில் உள்ள தேவி கருமாரியம்மன் திருக்கோயில்

 மேலே சொன்ன கோவில்களுள் ஏதேனும் ஒரு கோவிலுக்குச்  சென்று வழிபட்டால் எப்படிப்பட்ட மாங்கல்ய தோஷமாக இருந்தாலும் அது விலகும் என்பது ஐதீகம்.