கர்ம வினை தீர பதிகம் – பாவ நிவாரணத்திற்கு சிறப்பு பாடல் | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கர்ம வினை தீர பதிகம்

Posted DateAugust 14, 2025

தேவாரம் என்றால், “தேவர்” (சிவபெருமான்) + “ஆரம்” (பாடல்/புகழ்ச்சி) என்பதாகும். அதாவது, சிவபெருமானைத் துதிக்கும் பாசுரங்கள். பதிகம் என்றால், ஒரு தொகுப்புப் பாடல். இது பொதுவாக 10 பாடல்களை உள்ளடக்கியதாக இருக்கும். தேவாரப் பதிகங்கள் மூன்று பெருமக்களால் பாடப்பட்டவை:திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (அப்பர்), சுந்தரர்

தேவாரப் பதிகங்களில் பெரும்பாலும் “பாசம் அறுக்கும்”, “வினை நீக்கும்”, “மீட்சியை தரும்” எனும் வரிகள் நிறைய உள்ளன. திருப்பதிகங்களை தினமும் காலை, மாலை சுத்தமான மனத்துடன் ஓதி சிவபெருமானுக்கு நிவேதனம் செய்தால் கர்ம வினைகள் குறையும் என சைவ சித்தாந்தம் கூறுகிறது.

முன் ஜென்ம பாவங்கள் தீரவும், அனைத்து வினை,வேதனைகள் நீங்கவும் பாட வேண்டிய பதிகம் பற்றி இந்தப் பதிவில் காணலாம். கர்ம வினைகள், முன் ஜென்ம பாவங்கள், தீராத பிணிகள் ஆகியவை நீங்க திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத்தில்  வரும்  இந்த பதிகம் ரொம்பவே சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.

இப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் வினை மாயுமே, வினை வீடுமே, வினை ஓழியுமே என்று திருஞான சம்பந்தர் பாடியுள்ளார். இது இந்தப் பாடலின் சிறப்பு ஆகும். எனவே இந்தப் பாடலை அனுதினமும் ஓதும் போது நமது   வினை,வேடனை, பிணி, ஊனம்  தீரும் என்பது நம் சம்பந்த பெருமானின் வாக்கு.  நீங்களும் இதனை தினமும் ஓதி நல வாழ்வுவாழுங்கள்.


1.மாது ஓர் கூறு உகந்து, ஏறு அது ஏறிய 
ஆதியான் உறை ஆடானை 
போதினால் புனைந்து, ஏத்துவார் தமை 
வாதியா வினை மாயுமே.
    
2.வாடல் வெண் தலை அங்கை ஏந்தி நின்று 
ஆடலான் உறை ஆடானை 
தோடு உலாம் மலர் தூவிக் கைதொழ, 
வீடும், நுங்கள் வினைகளே

3.மங்கை கூறினன், மான்மறி உடை 
அம் கையான், உறை ஆடானை 
தம் கையால் தொழுது, ஏத்த வல்லார் 
மங்கு நோய் பிணி மாயுமே.
    
4.சுண்ண நீறு அணி மார்பில் தோல் புனை 
அண்ணலான் உறை ஆடானை 
வண்ண மா மலர் தூவிக் கைதொழ 
எண்ணுவார் இடர் ஏகுமே.
    
5.கொய் அணி(ம்) மலர்க்கொன்றை சூடிய 
ஐயன் மேவிய ஆடானை 
கை அணி(ம்) மலரால் வணங்கிட, 
வெய்ய வல்வினை வீடுமே.
    
6.வான் இள(ம்) மதி மல்கு வார்சடை 
ஆன் அஞ்சு ஆடலன் ஆடானை 
தேன் அணி(ம்) மலர் சேர்த்த, முன் செய்த 
ஊனம் உள்ள ஒழியுமே.
    
7.துலங்கு வெண்மழு ஏந்தி, சூழ் சடை 
அலங்கலான், உறை ஆடானை 
நலம் கொள் மா மலர் தூவி, நாள்தொறும் 
வலம் கொள்வார் வினை மாயுமே.
    
8.வெந்த நீறு அணி மார்பில் தோல் புனை 
அந்தம் இல்லவன் ஆடானை 
கந்த மாமலர் தூவிக் கைதொழும் 
சிந்தையார் வினை தேயுமே.
    
9.மறைவலாரொடு வானவர் தொழு
அறையும் தண்புனல் ஆடானை 
உறையும் ஈசனை ஏத்த, தீவினை 
பறையும்; நல்வினை பற்றுமே.
    
10.மாயனும் மலரானும் கைதொழ 
ஆய அந்தணன் ஆடானை 
தூய மா மலர் தூவிக் கைதொழ, 
தீய வல்வினை தீருமே.
    
11.வீடினார் மலி வெங்கடத்து நின்று 
ஆடலான் உறை ஆடானை 
நாடி, ஞானசம்பந்தன் செந்தமிழ் 
பாட, நோய் பிணி பாறுமே.
    
திருச்சிற்றம்பலம்