Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
கர்ம வினைகளில் இருந்து விடுபட என்ன செய்யலாம்?
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கர்ம வினைகளில் இருந்து விடுபட என்ன செய்யலாம்?

Posted DateJuly 5, 2024

நமது வாழ்வில் நடக்கும் நன்மை மற்றும் தீமைகள் அனைத்திற்கும் நமது கர்ம வினைகளே காரணம் என்று நாம் அறிவோம். கர்ம வினைகள் நம்மை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். நாம் செய்யும் நல்ல செயலாக இருந்தாலும் சரி, தீய செயலாக இருந்தாலும் சரி அதற்குரிய பலனை நாம் கண்டிப்பாக பெற்றுத் தான் ஆக வேண்டும் என்பது இயற்கை நியதி. கடந்த பிறவிகளில் செய்த கர்ம வினைகளுக்கேற்ப நம்மை இன்ப துன்பங்கள் தொடரும். இதனை சஞ்சித கர்மா என்று கூறுவார்கள். முற்பகல் செயின் பிற்பகல் விளையும் என்ற சொலவடை நாம் அறிந்த ஒன்று. மகிழ்ச்சியான வாழ்வு, நிறைந்த செல்வம், கடன் தொல்லை, எதிரிகள் தொல்லை, புத்திர தோஷம், நோய் என நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் அனைத்திற்கும் அடிப்படை கர்மா தான்.

அவரவர் செய்த கர்மாவை அவரவர் அனுபவித்து தான் தீர்க்க வேண்டும் என்பார்கள். நாம் அதிகமான பாவ செயலை செய்து இருந்தால் அதன் விளைவாக துன்பங்களை அதிகம் அனுபவிக்க வேண்டி இருக்கும். இந்த பாவ கணக்கு குறைந்தால் மட்டுமே தற்போது அனுபவிக்கும் துன்பங்களில் இருந்து விடுபட முடியும். இதனால் முன் பிறவியில் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களில் இருந்தும், இந்த பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கும் நாம் பல கோவில்களுக்கு செல்கிறோம். தான, தர்மங்கள் செய்கிறோம்.

கர்மாவை அனுபவித்துத் தான் தீர்க்க வேண்டும் எனும் போது நாம் செய்யும் பரிகாரமோ, தானங்களோ நமது கர்மாவை முற்றிலும் நீக்கி விடும் என்பது பொருள் அல்ல. அவை அனைத்தும் நாம் நமது கர்மாவை எளிமையான முறையில் கடக்க உதவி புரியும். உதாரணமாக நாம் பயணத்தின் போது நமக்கு தேவைப்படும் பணத்தை  சில்லரையாக எடுத்து சுமந்து செல்வதை விட அதனை ரூபாயாக மாற்றி எடுத்து சென்றால் சுமை குறைவது மட்டும் அன்றி எடுத்துச் செல்வதும் எளிதாகிறது அல்லவா?. அதனைப் போன்றது தான். இப்பொழுதெல்லாம் நாணயங்களும் தேவை இல்லை, ரூபாய் நோட்டும் தேவை இல்லை, கை பேசி இருந்தாலே போதும் என்ற நிலை வந்து விட்டது அல்லவா? அது ஒன்றையே சுமந்து சென்றால் போதும். அது போன்று கர்ம வினை நீங்க நாம் பரிகாரம் அல்லது தானம் செய்யும் போது, நமது கர்ம வினையை நாம் துன்பமின்றி கடந்து செல்ல முடியும்.

கர்ம வினை குறைக்கும் பொதுவான பரிகாரம்:

  • தினமும் நெய் விளக்கு ஏற்றலாம்

  • பசுக்களுக்கு உணவு அளிக்கலாம்

  • காகத்திற்கு உணவு அளிக்கலாம்.

  • எறும்புகளுக்கு உணவு அளிக்கலாம்

  • குழந்தைகளுக்கு இனிப்பு வாங்கித் தரலாம்.

  • ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் அளிக்கலாம்

பரிகாரம் 1

திங்கட்கிழமையில் வெள்ளை சர்க்கரை, பொரிகடலை ஆகிய இரண்டையும்  பொடியாக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றுடன் சிறிதளவு நெய் விட்டு, சிறிய உருண்டையாக பிடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உருண்டையை வீட்டின் தலைவாசலுக்கு சென்று, வெளியில் இருந்து உள்ளே நுழையும் போது உங்களுக்கு வலது புறம் இருக்கும் நிலைப்படிக்கு அருகில் வாசலில் வைத்து விட வேண்டும். இரவு தூங்கி விட்டு, காலையில் எழுந்து பார்க்கும் போது அந்த இனிப்பு கலந்த உருண்டையை எறும்புகள் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து போய் கொண்டிருந்தால் உங்களுடைய கர்மா கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம். வீட்டில் செய்ய இயலாதவர்கள் இதனை கோவிலில் மரத்தடியில் இருக்கும் எறும்புகளுக்கு உணவாக அளிக்கலாம்.

பரிகாரம் 2

ஏகாதசி அன்று விரதம் இருந்து ஏழை எளியவர்களுக்கு தண்ணீர், தானிய வகைகள், பழங்கள், எள், வஸ்திரம் என இந்த ஐந்து பொருட்களையும் தானம் செய்யலாம். அல்லது இந்த ஐந்தில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது நாம் தானம் செய்யலாம். தொடர்ச்சியாக ஒவ்வொரு ஏகாதசியும் இந்த பொருட்களில் ஏதாவது ஒரு பொருளை யாருக்காவது தானம் செய்து கொண்டே வர உங்களுடைய கர்ம வினைகள் படிப்படியாக குறையும்.