ஒவ்வொரு மதம் அல்லது இனத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் மதத்திற்கு ஏற்றவாறு சின்னங்கள் அல்லது குறியீடுகளை தங்கள் உடலில் நெற்றியில் மார்பில் பூசிக்கொள்கிறார்கள்.
அந்த வகையில் சிவனை வழிபடுபவர்கள் விபூதியை அவசியம் தரித்துக் கொள்கிறார்கள். நமது சரீரத்தில் சிவ சின்னமாக பூசுவது விபூதி ஆகும். இதனை திருநீறு என்றும் கூறுவார்கள். விபூதி என்பது பசுவின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதனை ரட்சை என்றும் கூறலாம். விபூதியை பூசுவதற்கும் சில அனுஷ்டானங்கள் மற்றும் விதிமுறைகள் உள்ளன.

வடக்கு அல்லது கிழக்கு முகமாக இருந்து விபூதி தரித்தல் வேண்டும்.
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை, உச்சந்தலை; நெற்றி; மார்புப் பகுதி; தொப்புளுக்கு சற்று மேல்; இடது தோள்பட்டை; வலது தோள்பட்டை; இடது கை மற்றும் வலது கையின் நடுவில்; இடது மற்றும் வலது மணிக்கட்டில்; இடது மற்றும் வலது இடுப்புப் பகுதியில்; இடது மற்றும் வலது கால் நடுவில்; முதுகுக்குக் கீழ் பகுதி; கழுத்து முழுவதும்; இரண்டு காதுகளின் பின்புறம் உள்ள குழியில்.
நிலத்திலே சிந்தாமல் அண்ணாந்து சிவ சிவ என்று கூறி வலது கை நடுவிரல் மூன்றினாலும் தரித்தல் வேண்டும். அல்லது நடுவிரல் மற்றும் மோதிர விரலில் எடுத்து தரிக்க வேண்டும். தலையைக் கவிழ்ந்து கொண்டு விபூதியை தரித்தல் ஆகாது. மோதிர விரல் மற்றும் கட்டை விரலை இணைத்து விபூதி எடுத்து தரிப்பதன் மூலம் காரிய சித்தி ஏற்படும்.விபூதியை நிலத்தில் சிந்தினால் அதனை எடுத்து விட்டு அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
விபூதியை ஒரு விரலில் வைத்து தரித்தல் அவ்வளவு உசிதமல்ல. அப்படி தரிக்க நேர்ந்தால் மோதிர விரலில் வைத்து தரிக்க வேண்டும். கட்டை விரலில் தரித்தால் தீராத வியாதியும் நடு விரலால் தரித்தால் நிம்மதியின்மையும் சுண்டு விரலால் தரித்தால் கிரக தோஷமும் ஏற்படும். விபூதியை எடுக்கும்போது, ‘திருச்சிற்றம்பலம்’ என்றும் விபூதியை தரிக்கும்போது பஞ்சாட்சர மந்திரத்தையும் ஜபிக்கவேண்டும்.பொதுவாக விபூதியை நெற்றி முழுவதுமோ அல்லது மூன்று படுக்கை வசக் கோடுகளாகவோ தரிக்கவேண்டும்.
சூரிய உதயத்திலும் சந்தியாகாலம் சூரிய அஸ்தமன சமயத்திலும் குளிப்பதற்கு முன்னும் பின்னும், பூஜைக்கு முன்னும் பின்னும் போஜனம் செய்வதற்கு முன்னும் பின்னும் மல ஜலம் கழிப்பதற்கு முன்னும் பின்னும் விபூதி தரிக்கலாம்.
விபூதி என்னும் திருநீறு அணிவதால் நமது மனதில் ஆன்மீக நாட்டம் மேலோங்கும். மனதில் கடவுள் மீதான பக்தி பெருகும். நமது மனதில் காணப்படும் தீய எண்ணங்களை விலக்கும்.மனம் ஒருமுகப்படும். நல்ல எண்ணங்கள் தோன்றும். நல்ல வழியில் செல்வத்தை சேர்ப்பதன் காரணமாக நிலையான செல்வமும் நல்ல குடும்பம் நல்ல நண்பர்களின் சேர்க்கை என்று அளவற்ற நற்பலன்களைப் பெறலாம்.
மேலும் உடல் ஆரோக்கியம் சிறக்கும். தகாத செயல்களைச் செய்வதில் இருந்து மனம் விலகிச் செல்லும். எந்த விதத்திலும் தொல்லைகள் நம்மை அணுகாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். பூச்சிக் கடி அல்லது விஷக்கடி போன்றவை நமது தோலை தாக்காமல் காத்துக் கொள்ள முடியும்.

October 27, 2025
September 19, 2025
September 17, 2025