இருபத்தியேழு நட்சத்திரங்களுள் உத்திராடம் இருபத்தியொன்றாவது நட்சத்திரம் ஆகும். இது சூரியனின் நட்சத்திரம். சூரியனுக்கு உரிய நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம் உத்திராடம். இது உடைபட்ட நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் முதல் பாதம் தனுசு ராசியிலும், அடுத்த மூன்று பாதங்கள் மகர ராசியிலும் வரும்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் அன்பும் இரக்கமும் கொண்டவர்களாக இருப்பீர்கள். உண்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மற்றவர்களுக்கு அடிபணிய மாட்டீர்கள். எதையும் ஆழ்ந்த கவனமுடன் செய்வீர்கள். வேலை செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருப்பீர்கள். உள்ளதை உள்ளபடி பேசுவீர்கள். நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டிருப்பீர்கள். நல்ல குண நலன்கள் இருக்கும். உங்கள் நடத்தை, சொல், செயல் ஆகிய அனைத்தும் எல்லோராலும் விரும்பப்படுவதாக இருக்கும்.மன உறுதி மிக்கவர்களாக இருப்பீர்கள். உங்களுக்கு இரக்க குணம் அதிகமாக இருக்கும். ஏழை எளியவர்களிடம் அன்பு காட்டுவதுடன் அவர்களின் நலனுக்காகப் போராடவும் தயங்கமாட்டீர்கள். உங்களால் முடிந்த உதவியை அவர்களுக்குச் செய்வதில் மகிழ்ச்சியடைவீர்கள். வாழ்க்கைத் துணையிடம் அளவுக்கதிகமான பாசம் கொண்டிருப்பீர்கள். எந்தத் துறையில் இருந்தாலும், மற்றவர்களை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருப்பீர்கள். யாரையும் எளிதில் நம்ப மாட்டீர்கள். அவர்களுடன் பழகி அவர்களின் குண நலன்கள் அதறிந்த பின்னர் தான் அவர்களிடம் நட்பு பாராட்டுவீர்கள். உங்களுக்கு அதிக நண்பர்கள் சேர்க்கை இருக்கும். நீங்கள் நல்ல பேச்சுத் திறமை கொண்டிருப்பீர்கள். அடுத்தவர்கள் சொத்துக்கு ஆசைப்பட மாட்டீர்கள். நல்ல உணவுகளை ருசித்து ரசித்து உண்பீர்கள். உங்களுக்கு உதவுபவர்களிடம் நன்றி உணர்வுடன் இருப்பீர்கள். சட்டம் ஒழுங்கை மதித்து நடப்பீர்கள். எங்கும் எதிலும் தலைமை ஸ்தானத்தில் இருப்பீர்கள். மற்றவர்களைப் பல வகைகளிலும் கவர்ந்து விடுவீர்கள். பல கலைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றிருப்பீர்கள். உழைத்து சொத்து சேர்க்கவேண்டும் என்று விரும்புவீர்கள்.
இனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம்…
நட்சத்திர அதிபதி – சூரியன்; ராசி அதிபதி – குரு; நவாம்ச அதிபதி – குரு
அழகான தோற்றம் கொண்டவர்களாக இருப்பீர்கள். அன்பும் சகிப்புத் தன்மையும் கொண்டவர்களாக இருப்பீர்கள். கல்வி கற்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பீர்கள். மேலும் மேலும் படிக்கவேண்டும் என்று விரும்புவீர்கள். புராண, இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். வேத சாஸ்திரங்களில் தேர்ச்சியும், அவை வலியுறுத்தும் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதில் உறுதியும் கொண்டிருப்பீர்கள். அபாரமான நினைவாற்றலைப் பெற்றிருப்பீர்கள். ஒருமுறை கேட்டாலே அப்படியே மனதில் பதிய வைத்துக்கொள்வீர்கள். கலைகளில் ஆர்வம் உடையவர்களாக இருப்பீர்கள். திறமை கொண்டவர்களாக இருப்பீர்கள். ஆசாரியர்களிடமும், பெரியோர்களிடமும் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்வீர்கள். எந்த விஷயத்திலும் பொறுமையுடன் செயல்படுவீர்கள்.இரக்க குணமும் தொண்டுள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பீர்கள். விசாலமான மனம் படைததவர்களாகவும் புகழ் பெற்றவர்களாகவும் இருப்பீர்கள். வாழ்க்கைத் துணையிடம் அன்பு கொண்டவர்களாக இருப்பீர்கள். அவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள்.
நட்சத்திர அதிபதி – சூரியன்; ராசி அதிபதி – சனி; நவாம்ச அதிபதி – சனி
உத்திராடம் 2-ம் பாதத்தில் பிறந்த நீங்கள் சற்று மெதுவாகத்தான் செயல்படுவீர்கள். பெற்றோர்களிடம் அதிக பாசம் வைத்திருப்பீர்கள். தந்தையை விடத் தாயிடம் அதிக பாசம் கொண்டிருப்பீர்கள். ஆன்மிகச் சொற்பொழிவு மற்றும் கருத்தரங்கம் ஆகியவற்றில் பெயரும் புகழும் பெறுவீர்கள். கல்வியில் ஊக்கம் கொண்டிருப்பீர்கள். சகல சாஸ்திரங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொண்டிருப்பீர்கள். சில நேரங்களில் படபடப்பாகக் காணப்படுவீர்கள். ஒருவருக்கு நன்மை ஏற்படுமென்றால், அதற்காகப் பொய் சொல்லவும் தயங்கமாட்டீர்கள். வாழ்க்கையில் எதையேனும் சாதிக்கவேண்டும் என்று நினைப்பீர்கள். வாகனங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பீர்கள். ஊடகத் துறையில் பிரபலமாக விளங்குவீர்கள். தேவையில்லாமல் வாக்குறுதி கொடுத்துவிட்டு, பிறகு அதை நிறைவேற்ற முடியாமல் வருத்தப்படுவீர்கள். இளம் வயதிலேயே மற்றவர்கள் வியக்கும்படி எல்லா வசதிகளையும் பெற்றிருப்பீர்கள்.தரும சிந்தனை இல்லதாவர்களாகவும், ஈகை அற்றவர்களாகவும், பலசாலிகளாகவும் இருப்பீர்கள்.
நட்சத்திர அதிபதி – சூரியன்; ராசி அதிபதி – சனி; நவாம்ச அதிபதி – சனி
உத்திராடம் 3-ம் பாதத்தில் பிறந்த நீங்கள் பருமனான உடல் வாகு கொண்டிருப்பீர்கள். சுயமாகச் சிந்திப்பீர்கள். தவறோ சரியோ மனதுக்குச் சரியென்று பட்டதைச் சொல்வீர்கள்; செய்வீர்கள். தற்பெருமை பேசும் குணம் இருக்கும். ஒரே நேரத்தில் பலவிதமாக சிந்தனை செய்வீர்கள். சுய சிந்தனையுள்ளவர்கள். பிறர் கண்டு பிடிக்க முடியாதவாறு தவறுகளை சமார்த்தியமாகச் செய்வீர்கள். அடிக்கடி கோபப்பட்டு வருத்தமடைவீர்கள். சிலருக்கு கல்வியில் தடை ஏற்படலாம். மற்றவர்கள் உங்களிடம் சகஜமாக பழகுவதற்கு பயப்படுவார்கள். கடுமையாக உழைத்து முன்னேறுவீர்கள்.மற்றவர்கள் அறிவுரை சொல்வதை விரும்பமாட்டீர்கள். சிலருக்குக் கல்வியில் தடை ஏற்பட்டு விலகும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும் ஏற்படக்கூடும்.
நட்சத்திர அதிபதி – சூரியன்; ராசி அதிபதி – சனி; நவாம்ச அதிபதி – குரு
உத்திராடம் 4-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவாம்ச அதிபதி குரு. இந்தப் பாதத்தில் பிறந்த நீங்கள் தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்டிருப்பீர்கள். பெற்றோர்களிடம் அதிக பாசம் கொண்டிருப்பீர்கள். வாழ்க்கைத் துணையிடமும் பிள்ளைகளிடமும் அன்பும் அக்கறையும் கொண்டிருப்பீர்கள். நீங்கள் துணிச்சல் மிக்கவர்களாக இருப்பீர்கள். எதையும் சமாளிக்கும் மன தைரியம் கொண்டவர்களாக இருப்பீர்கள். ஆன்மிகப் பெரியோர்களுக்கு சேவை செய்வீர்கள். எப்போதும் சோர்வு என்பதே இல்லாமல் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். பெரிய பதவிகளை வகிக்கும் யோகம் உண்டாகும்.நீங்கள் செல்வந்தர்களாக இருப்பீர்கள். முகத்தில் எப்போதும் மலர்ச்சி நிலைத்திருக்கும். மற்றவர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் அதிகப் பாசமும், அவர்கள் நலனில் மிகுந்த அக்கறையும் கொண்டிருப்பீர்கள். வெளிநாடுகளிலும் நண்பர்களைப் பெற்றிருப்பீர்கள். அவர்கள் மூலம் ஆதாயமும் அடைவீர்கள்.
வழிபடவேண்டிய தெய்வம்: சூரியபகவான், தட்சிணாமூர்த்தி
அணியவேண்டிய நவரத்தினம்: மாணிக்கம்
சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடியில் அமைந்துள்ளது அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (மீனாட்சி சுந்தரேஸ்வரர்) திருக்கோயில். தாயார் பிரம்ம வித்யாம்பிகை (மீனாட்சி). தங்களது தோஷங்கள் நீங்க உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் இத்தலம் வந்து இறைவனை வழிபடுகின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டியும், குடும்ப ஒற்றுமைக்காகவும் அம்பிகையிடம் வேண்டிக் கொள்கின்றனர்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025