Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
தெய்வீக சக்தி நிலைத்து இருக்க | Veetil Dheiva Sakthi Athikarikka
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

தெய்வீக சக்தி நிலைத்து இருக்க

Posted DateJune 27, 2024

ஒரு வீடு பெரியதோ, சிறியதோ, மாடி வீடோ கூரை வீடோ, சாதாரண வீடோ பங்களாவோ அந்த வீட்டில் தெய்வீக சக்தி நிறைந்து இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு அதிர்வலை உண்டு. அந்த அதிர்வலை தான் நம்மை அந்த வீட்டிற்குள் ஈர்க்கும் அல்லது வெளியேற வைக்கும். நல்ல அதிர்வலை இருந்தால் அங்கு தெய்வீக சக்தி நிறைந்து இருக்கும். தெய்வீக சக்தி நிறைந்து இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்று சென்ற பதவில் பார்த்தோம். தெய்வீக சக்தி நிறைந்து இருக்க வேண்டிய வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் நமது வீட்டில் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வர முடியும். இந்த தெய்வீக சக்தி நிலைத்து இருக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

தெய்வீக சக்தி வீட்டில் ஈர்க்க:

மந்திர ஓசைகள் ஒலிக்க வேண்டும். அதாவது தெய்வீக பாடலகளை ஒலிக்கச் செய்ய வேண்டும். உதாரணமாக காலையில் எழுந்து சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம், கந்தர் ஷஷ்டி கவசம், சிவபுராணம், விநாயகர் அகவல், கோளறு பதிகம், தேவாரம், திருவாசகம்  போன்ற பாடல்களை பாட வேண்டும். அல்லது ஒலிக்கச் செய்ய வேண்டும்.. இது மிக நல்ல தெய்வீக சக்தியை கொண்டு சேர்ப்பது மட்டும் இன்றி அதனை நிலைத்து இருக்கச் செய்யும்.

காலை மாலை இரண்டு வேலையும் சாம்பிராணி ஏற்றி அதில் குங்கிலியம் போட்டு  தூபம் கட்ட வேண்டும். இது நல்ல நறுமணத்தை வீட்டில் தக்க வைக்கும்.

மங்கல ஒலியைப் போலவே மங்கல ஒளியும் வீட்டிற்கு அவசியம். எனவே தினமும் காலை மாலை என இரு வேளையும் விளக்கு ஏற்ற வேண்டும்.

தினமும் மணி அடித்து கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும்.

தெய்வீக சக்தி வீட்டில் நிலைத்து இருக்க

நிலை வாசலை வழிபடுவதன் மூலம் வீட்டில் தெய்வீக சக்தி நிலைத்து இருக்கச் செய்யலாம்.

நாம் வீடு கட்டும் போது தெய்வீக சக்திகள் வீட்டில் நிலைத்து இருக்க பூமி பூஜைக்குப் பிறகு நிலை வாசல் பூஜை செய்யபப்டும். எனவே இந்த நிலை வாசலை நாம் தினமும்  பூஜை செய்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நிலை வாசல் மூலம் ஆகர்ஷன சக்தி வீட்டிற்குள் வரும். அந்த சக்தி நேர்மறை ஆற்றலாக இருக்க வேண்டும். நிலை வாசலில் குல தெய்வம் குடி கொண்டிருக்கும் என்று கூறுவார்கள். ஒரு வீட்டிற்கு காவலாக இருந்து காக்கும் தெய்வமான குல தெய்வம் நிலைப்படியில் இருந்து நம்மைக் காக்கும் என்பது ஐதீகம். தீய சக்திகளை தடுத்து நல்ல சக்திகளை வீட்டிற்குள் கடத்தும் தன்மை நிலை வாசலுக்கு உண்டு. எனவே இந்த நிலை வாசலை நன்கு பராமரிக்க வேண்டும்.

நிலை வாசலுக்கு தினமும் மஞ்சள் மற்றும் குங்குமம் தடவ வேண்டும். உங்கள்  வீட்டின் வழக்கப்படி இந்தப் பூஜையை அதாவது மஞ்சள் மற்றும் குங்குமப் பொட்டை வைக்கலாம். இது மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத் தரும்.  மாவிலை தோரணம் கட்ட வேண்டும். தினமும் மாவிலை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. மாவிலை காயந்தாலும் பரவாயில்லை.  அதை அப்படியே வைத்திருக்கலாம். நிலை வாசலுக்கு தினமும் ஊதுவத்தி காட்டுங்கள்.  சில உதிரிப் பூக்களை சாற்றுங்கள். இதை தினமும் செய்வதன் மூலம் நமது வீட்டில் தெய்வீக சக்தியை நிலைத்து இருக்கச் செய்யும்.

குல தெய்வக்  கோவிலில் இருந்து சிறிது மண்ணைக் கொண்டு வந்து அதை மூட்டையாகக் கட்டி வீட்டு வாசலில் கட்டுவதன் மூலம் குல தெய்வ அருள் நமக்கு  கிட்டும். அல்லது திருஷ்டி நீக்கும் பொருளைக் கட்டலாம். உதாரணமாக படிகாரம் கட்டலாம். அல்லது எலுமிச்சை மற்றும் மிளகாய் கட்டலாம்.

மேலே சொன்ன எளிய விஷயங்களை செய்வதன் மூலம் வீட்டில் தெய்வ சக்தியை ஈர்ப்பதுடன் அதனை தக்க வைத்துக் கொள்ளவும் முடியும்.