Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
வீட்டின் முன் காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்களா?
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

வீட்டின் முன் காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்களா?

Posted DateOctober 4, 2024

நமது அன்றாட வாழ்வில் நம்முடைய சுற்றுச் சூழலில் நாம் காணும் பறவைகளுள் ஒன்று காக்கை ஆகும். காக்கைகளை நாம் நமது முன்னோர்கள் வடிவில் காண்கிறோம். காக்கையை வைத்து பல சகுனங்களைக் கூறுவார்கள். அவற்றில் ஒன்று காகம் நமது வீட்டிற்கு அருகில்  வந்து கரைவது ஆகும். காகம் ஓயாது கரைந்தால், யாராவது விருந்தினர் வரப்போவதற்கான சகுனம் என்று கூற கேள்விப்பட்டிருக்கிறோம் காகம் செய்யும் சில செயல்களை கொண்டு, அவை நல்லதா கெட்டதா என கூறுவதுண்டு. மேலும் ‘காக்கைபாடினியார்’ எனும் சங்க காலப் புலவர், காகம் ஏற்படுத்தும் நல்ல சகுனங்களைப் பாடியுள்ளார்.

குறுந்தொகையில் இவர் தம் பாடல் ஒன்றில் ‘விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே’ என்று குறிப்பிட்டுள்ளமையால் இவரைக் காக்கை பாடினியார் என்று குறிப்பிட்டுள்ளனர். காக்கைக்கு உணவிடும் வழக்கம் சங்க காலத்தில் இருந்தது என்பதற்கு இப்பாடல் சான்று. அக்காக்கைக்கு வைக்கப்படும் சோறு ‘பலி’ எனக்குறிக்கப்பெற்றுள்ளது. காக்கை கத்தும் ஒலியைக் கரைதல் என்றும் இப்பாடல் குறிப்பிடுகிறது.

திண்தேர் நள்ளி கானத்து அண்டர்
பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிது – என்தோழி
பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே

என்பது காக்கைப் பாடினியார் பாடிய பாடல் ஆகும். இப்பாடல் முல்லைத் திணைப் பாடலாகும். இதன் துறை பிரிந்து வந்த தலைமகன் நன்கு ஆற்றுவித்தாய் என்றற்குத் தோழி உரைத்தது என்பதாகும். அதாவது தலைவன் பிரிந்து சென்றுவிட்டான். அவன் வரும்வரை தலைவிக்கு துன்பம் வராமல் பாதுகாத்து வந்தவள் தோழி. அவளின் பாதுகாப்பினைப் பாராட்டிய தலைவனுக்குத் தோழி சொன்ன பாடலாக இது அமைகின்றது. பொருள் தேடிக்கொண்டு தலைவன் திரும்பிவிட்டான். நான் திரும்புவரையில் தலைவியை நன்கு ஆற்றுவித்தாய் என்று தோழியைப் பாராட்டினான். அதற்குத் தோழி சொல்கிறாள். காக்கை விருந்து வரப்போவதை அறிவிக்கும் அறிகுறியாகக் கரையும். (இது ஒரு நம்பிக்கை) இங்குக் காக்கை ஒவ்வொரு நாளும் கரைந்தது. அதைக் காட்டி இதோ வந்துவிடுவரார் என்று கூறித் தலைவியைத் தேற்றிவந்தேன். உண்மையில் நீ அந்தக் காக்கையைத்தான் பாராட்ட வேண்டும். பாராட்டும் முகத்தான் அதற்கு விருந்தாகப் பலியுணவு தரவேண்டும்.

 முற்காலத்தில் ஆண்கள் பொருள் ஈட்டுவதற்காக கடல் கடந்து சென்றார்கள். அதனால் தான் திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். அந்தக் காலத்தில் தகவல் தொடர்பு சாதனங்கள் கிடையாது. பறவை விடு தூது தோழி விடு தூது என்று யார் மூலமாவது தூது அனுப்புவார்கள். மேலும் காக்கை கரைவதை வைத்தும் விருந்தினர் வருகையை அறிந்து கொள்வார்கள்.

 காகம் தொடர்ந்து ஒருவர் வீட்டின் வாயில் அருகில் வந்து கரைந்தால் அது விருந்தினர் வருவதற்கான அறிகுறி என்று நமது முன்னோர்கள் நம்பினார்கள். மேலே சொன்ன  பாடல் மூலம் நாம் சங்க காலத்தில் இருந்தே இந்த நம்பிக்கை இருந்து வந்துள்ளதை அறியலாம். காக்கை கரைவது விருந்தினர் வருகையை அறிவிப்பது என்பதை இன்றும் நாம் கவனித்தால் உண்மை என்பதை அறியலாம்.