தன்னை அண்டி வருபவர்களுக்கு அருள் செய்பவர் பைரவர். படைத்தல், காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப் படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், பாவத்தை நீக்குபவர் என்று பொருள். தம்மை சரண் அடையும் பக்தர்களுக்கு அபயம் அளித்து நீண்ட ஆயுள் வழங்கும் தெய்வமும் இவரே என்கின்றன புராணங்கள்.
சனி பகவானின் குருவாகத் திகழ்பவர் பைரவர். தன்னை வழிபடும் பக்தர்களை, எக்காரணம் கொண்டு சனி தோஷம் பீடிக்கக்கூடாது என்று சனி பகவானுக்கு பைரவர் உத்தரவிட்டார், சனிபகவான் காரணமாக எவர் ஒருவர் துன்பத்தை அனுபவிக்க நேர்ந்தாலும், அவர் பைரவரை வழிபட்டு சரணடைந்து விட்டால், அவர்களுக்கு சனீஸ்வரன் நன்மைகளையே செய்ய வேண்டும் என்பது பைரவ மூர்த்தியால், சனி பகவானுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை என்று சொல்லப்படுகிறது.
எனவே நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் எல்லாம் உடனே நீங்கும். ஏழரைச்சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச்சனி என எல்லாவித சனி தோஷங்களுக்கும், பைரவரின் சன்னிதிக்குச் சென்று வழிபாடு செய்து வந்தால் அதில் இருந்து விடுபட வாய்ப்பு உருவாகும்.
சனியின் பார்வையால் பாதிக்கப்படுவோர், சனியின் தோஷத்தால் அவதிப்படுவோர் என அனைவரும், பைரவ மூர்த்தியை வழிபட்டு வந்தால் அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கும்.கால பைரவாஷ்டகம் சொல்லி வழிபடுபவர்கள் செய்வினை கோளாறுகளில் இருந்து விடுபடுவார்கள். நோய்கள் தீரும். வறுமை நீங்கி வளம் பெருக கால பைரவருக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும். தேய்பிறை அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி வழிபட கடன் பிரச்சினை நீங்கும். பயம் அகலும் எதிரிகள் தொல்லை நீங்கும். பைரவருக்கு வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அர்ச்சனை செய்து வணங்கினால் கடன் பிரச்சினைகள் நீங்கும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க தடைபட்ட திருமணம் நடக்கும், எதிரிகள் தொல்லை நீங்கும். நன்மை உண்டாகும். பில்லி, சூனியம் மற்றும் ஏவல் போன்ற செய்வினை கோளாறுகள் அகலும்.
September 12, 2025
September 12, 2025
September 11, 2025