பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் தான் எத்துனை எத்துனை. ஒவ்வொரு வயதில் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள். ஒவ்வொருவரும் தங்கள் வயதுக்கு ஏற்றார் போல ஏதாவது ஒரு பிரச்சினையை வாழ்க்கையில் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இந்தப் பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய தெய்வமாக விளங்குபவர் கால பைரவர். அவருக்கு உரித்த நாளான காலபைரவாஷ்டமியில் அவரை வணங்குவதன் மூலம் அவரது அருளாசியால் நமது பிரச்சினைகளுக்கு நாம் எளிதில் தீர்வு காண இயலும்.
சிவ பெருமானின் ருத்திர அம்சமே கால பைரவர். சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர்.நாய் வாகனமும், கையில் திரிசூலமும் ஏந்தி காவல் தெய்வமாக விளங்கக் கூடியவர். பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். இவரின் அருள் இருந்தால் அஷ்ட சித்தியும் கைகூடும்.காலத்தின் கடவுளான கால பைரவர் நமது தலை விதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார். காசி நகரின் காவல் தெய்வம் இவர். நவ கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர் இவர்தான். சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார்.
காலபைரவர் அவதரித்த நாளே காலபைரவாஷ்டமி நாளாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டால் எல்லாவித கஷ்டங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.
காலத்தின் கடவுளான அவரை வணங்குவதன் மூலம் பல நாள் தீராத பிரச்சனைகள், நீண்ட காலமாக துன்பத்தை கொடுக்கும் நோய்கள், கடன் பிரச்சனை, எதிரிகள் தொல்லை, எம பயம் ஆகியவை நீங்கும். கால பைரவரை வழிபடுவதற்கு மிகவும் ஏற்ற நாள் காலபைரவாஷ்டமி ஆகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வரும் அஷ்டமியையே காலபைரவாஷ்டமி என்கிறோம். இது பைரவர் வழிபாட்டிற்கு மிகவும் விசேஷமான நாளாகும். அதுவும் இந்த ஆண்டு நவம்பர் மாதம் பைரவர் வழிபாட்டிற்கு மிகவும் ஏற்ற ஞாயிற்றுக்கிழமையிலேயே காலபைரவாஷ்டமி வருகிறது. இந்த ஆண்டு நவம்பர் 05 ம் தேதி காலபைரவாஷ்டமி வருகிறது. நவம்பர் 05ம் தேதி மாலை 03.13 மணிக்கு பிறகு துவங்கி, நவம்பர் 06ம் தேதி அதிகாலை 05.05 வரை மட்டுமே அஷ்டமி திதி உள்ளது. அதனால் நவம்பர் 05 ம் தேதி மாலை பைரவர் வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் சிறப்பானதாகும்.
பெரும்பாலும் கால பைரவரை கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்லது. அதிலும் தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வழிபடுவது சிறப்பு. அன்றைய நாளில் கோவிலில் பைரவருக்கு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் நடை பெறும். எனவே அதற்கு தேவையான பொருளை வாங்கி அளிப்பது சிறப்பு. மேலும் கால பைரவரை ஞாயிற்றுகிழமையில் மிளகு தீபம் ஏற்றி வைத்து வழிபடுவது மிகவும் சிறப்பானது. இதனால் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் உடனடியாக நீங்கி விடும் என்பத ஐதீகம். காலபைரவாஷ்டமி அன்று சிவபுராணம், கால பைரவர் மந்திரங்கள், கால பைரவர் போற்றி துதிகள் ஆகியவற்றை படிப்பது மிகவும் சிறப்பானதாகும். கால பைரவரின் வாகனமான கருப்பு நிற நாய்களுக்கு உணவு அளிப்பது உங்கள் தீய கர்ம வினைகளை போக்கும்.
கால பைரவரை வழிபடுபவர்கள் வாழ்வில் பிரச்சினைகளில் இருந்து வெளிவரலாம். வாழ்வில் காணப்படும் தடைகள் மற்றும் தாமதங்கள் நீங்கும். தீய சக்திகள் அண்டாது. கால பைரவரை முறையாக வணங்குவதின் மூலம் தீராத விவகாரங்கள் முடிவிற்கு வரும், வெளியூர்களுக்குப் போகும் முன் அவரிடம் வேண்டிக் கொண்டு சென்றால் தடங்கல் அற்ற பயணம் கிடைக்கும். தொல்லைகள் விலகும், எதிரிகள்நாசம் அடைவர். சண்டை சச்சரவுகள் குறையும். திருடர்கள் பயந்து ஓடுவர், வாழ்வில் பல விதமான நன்மைகள், இன்பங்கள், வளர்ச்சி ஆகியவற்றை பெற முடியும்.
இந்த அற்புதமான நாளை தவற விடாமல் பைரவர் வழிபாட்டினை மேற்கொண்டால் அளவில்லாத பலன்களை பெற முடியும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025