Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
முருகனுக்கு அலகு குத்தி வழிபாடு செய்வது ஏன்?
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

முருகனுக்கு அலகு குத்தி வழிபாடு செய்வது ஏன்?

Posted DateFebruary 15, 2024

விஞ்ஞானம், வான் தொடும் வரை வளர்ந்து இருந்தாலும், இன்றும் நம்மில் பலருக்கு இறை நம்பிக்கை உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த இறை நம்பிக்கை தான், நமது வாழ்க்கையில் பிற நம்பிக்கையின் அடிப்படையாக உள்ளது எனலாம்.  

இறைவன் மீது பக்தி கொண்ட பக்தர்கள், தங்கள் வேண்டுதலை இறைவன் முன் வைக்கிறார்கள். தங்கள் கோரிக்கையை வைக்கும் போதும், அது நிறைவேறிய பின்பு நன்றி செலுத்தும் போதும் செய்யம் வழிபாடு நேர்த்திக்கடன் எனப்படும். அந்த வகையில் ஒரு நேர்த்திக்கடன் தான் அலகு குத்துதல். அலகு குத்துதல் என்பது இறை நம்பிக்கை உடையவர்களால் செய்யப்படுகின்ற நேர்த்திக்கடன்களில் ஒன்றாகும். இந்த நேர்த்திக்கடன் உடலை வருத்தும் நேர்த்திக் கடன் வகையை சேர்ந்தது.

அலகு குத்தும் வழிபாடு

தெய்வங்கள் பல இருந்தாலும் வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத  வகையில் முருகனுக்கு மட்டும் காவடி எடுக்கும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விசேஷ வழிபாட்டு முறை உண்டு. அந்த முறையில் தான் முருகப் பெருமானுக்கு காவடி எடுக்கும் பழக்கம் மற்றும் அலகு குத்திக் கொள்ளும் பழக்கம் உள்ளது.  சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடி மாத உற்சவம், தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் என முருகனை போற்றி வழிபட பல முக்கிய விசேஷ நாட்கள் உள்ளன.  இயற்கையை போற்றிய தமிழரிடம் இறை உணர்வு அதிகம் இருந்தது.  நமது நாட்டில் தெய்வத் திருத்தலங்களில் அதிகம் காணப்படுவது முருகன் ஆலயமே.  முருகனை வழிபட விரதமிருந்து பாத யாத்திரை செல்வது, காவடி எடுப்பது அலகு குத்துவது என பல வகையிலும் வழிபாடு செய்கின்றனர். பிற தெய்வ வழிபாட்டில் அலகு குத்துதல் இருப்பதில்லை. ஐயனார் போன்ற சிறுதெய்வ வழிபாட்டிலும், முருகன், மாரியம்மன் போன்ற பெருதெய்வ வழிபாட்டிலும் இந்த அலகு குத்தும் நேர்த்திக்கடன்கள் செய்யப்படுகின்றன.

அலகு குத்துதல் என்றால் என்ன?

கோயில் திருவிழாவின் போது பக்தர்கள் சிலர் தங்களது நாக்கு அல்லது கன்னங்களில் வேறுபட்ட அளவிலான வேல்களைக் குத்திக் கொண்டு கோவிலை நோக்கி ஊர்வலமாகச் செல்வார்கள். இச்செயல் அலகு குத்துதல்  எனப்படுகிறது. சில கோயிற் திருவிழாக்களில் பாற் செம்பு, காவடி போன்றன எடுப்போர் தம் வாயில் கூரிய உலோக ஊசிகளால் குத்திக் கொள்ளுவதும் உண்டு.

அலகு குத்தும் முறை

இந்த அலகு குத்துதல் காவடி, பால் செம்பு எடுக்கு முன்னர் பூசை செய்து தீபாரதனை காட்டிய பின் நடைபெறுகிறது. பக்தரின் வாயில் ஒரு கன்னத்திலிருந்து மற்றொரு கன்னத்தை நோக்கி சிறிய ஊசியால் குத்தி விடுவார்கள். ஊசியின் ஒரு முனை திரிசூலம் அல்லது வேல் போல் இருக்கும். மற்றொரு முனையை ஒரு கன்னத்தில் குத்தி, மற்றக் கன்னத்தின் ஊடாக எடுப்பார்கள். அந்த முனையில் வேல் அல்லது திரிசூலம் சொருகுவார்கள்.

அலகு குத்தும் வகைகள்

நாக்கு அலகு – நாக்கை வெளியே எடுத்து மேலிருந்து கீழ் நோக்கி அலகு குத்துதல். இதனை தால் அலகு குத்துதல் என்றும் கூறுவர். நாக்கு அலகு, வாய் அலகு, முதுகு அலகு, காவடி அலகு, வயிற்று அலகு, அகு நடனம் இவ்வாறு உடல் உறுப்புகளில் அலகுகுத்தும் இடத்தை வைத்து அலகு குத்துதல் வகைப்படுத்தப்படுகிறது. வேல் அலகு, மயில் அலகு, வாள் அலகு, பறவைக்காவடி அலகு, தொட்டில் அலகு, குதிரை அலகு என சில அலகுகள் குத்தப்படும் பொருட்களை வைத்து வகைப்படுத்தப்படுகின்றன.

இது போன்று உடலை துளையிட்டு வேண்டுதல் நிறைவேற்றும் போது முதலில் வலிப்பதாகவும், பிறகு வலிப்பதில்லை என்றும் பக்தர்கள் கூறுவதுண்டு. அசைக்க முடியாத நம்பிக்கையும், தெய்வ பக்தியும், மனதில் வைராக்கியமும் இருந்தால் மட்டுமே இந்த வேண்டுதல்களை நிறைவேற்ற முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.