ஆடி அமாவாசை என்பது தமிழ் மாதமான ஆடி மாதத்தில் வரும் அமாவாசை நாளாகும். இது இறந்தவர்களுக்கு சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் போன்ற சடங்குகளைச் செய்வதற்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. மாதா மாதம் அமாவாசை வந்தாலும் ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்தது. அன்று தான் நமது முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூ லோகத்திற்கு தங்கள் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். எனவே தான் ஆடி அமாவாசை அன்று கண்டிப்பாக முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை தவறாமல் செய்ய வேண்டும் என்பது நியதி.
ஆடி அமாவாசை தேதி ஜூலை 24 2025 ஆகும். நேரம் ஜூலை 24 அன்று அதிகாலை 2:00 மணி முதல் ஜூலை 25 அன்று அதிகாலை 12:36 மணிக்கு முடிவடைகிறது.
தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசையே ஆடி அமாவாசை ஆகும். இந்த காலக்கட்டத்தில் நமது முன்னோர்கள் நாம் சமர்பிக்கும் எள்ளும் நீரும் பெற பூமிக்கு இறங்கி வருவார்கள் என்பது ஐதீகம். நமது முன்னேற்றத்திற்கு பாதை வகுக்கும் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் எனப்படும் பித்ருகடனை செலுத்தி அவர்கள் மோட்சம் பெற வழி வகுக்க வேண்டும்.
புனித தீர்த்தங்கள் மற்றும் நதிக்கரைகளில் இறந்த மூதாதையர்களுக்கு சடங்குகள் செய்வது மற்றும் புனித நதிகள் மற்றும் தலங்களில் புனித நீராடுவது ஆகியவை இந்த நாளில் முக்கியமான சடங்குகளில் அடங்கும்.தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஆறுகள், கடல்கள் மற்றும் புனித குளங்கள் அல்லது தீர்த்தங்களில் பக்தியுடன் இந்துக்கள் புனித நீராடுகிறார்கள். ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தம், கன்னியாகுமரியில் உள்ள திரிவேணி சங்கமம் மற்றும் காவிரி நதிக்கரையில் உள்ள பல்வேறு புனித தலங்களில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் புனித நீராடி இறந்த மூதாதையர்களுக்கு சடங்குகளைச் செய்கிறார்கள்.
ஆடி அமாவாசை அன்று விரதம் இருப்பது மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, மேலும் சிலர் அன்று ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவார்கள். தாய் தந்தையை அல்லது இருவரில் ஒருவரை இழந்த ஆண்கள், வாழ்க்கைத் துணையை இழந்த ஆண்கள், வாழ்க்கைத் துணையை இழந்த பெண்கள் விரதம் இருக்கலாம். சுமங்கலிப் பெண்கள் விரதம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இதில் பங்கு கொள்வதன் மூலம் முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடையும். அவர்களின் அருளாசிகள் மூலம் வாழ்வில் அனைத்து வளமும் நலமும் பெருகும்.
ஆடி அமாவாசை முருகன் வழிபாடு:
ஆடி மாதம் முருகப் பெருமானுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, அமாவாசை நாளில் சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடத்தப்படுகின்றன. ஆடி அமாவாசை நாளில் பழனியில் உள்ள சண்முகா நதியில் புனித நீராடினால் ஒருவர் தூய்மையடைவார் என்றும், அனைத்து பாவங்களும் நீங்கும் என்றும் முருக பக்தர்களால் பரவலாக நம்பப்படுகிறது.மரியாதை மற்றும் நன்றி செலுத்தும் அடையாளமாக மக்கள் அன்றைய தினம் பழனி முருகன் கோயிலில் தலைமுடியை மொட்டையடித்துக் கொள்கிறார்கள்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025