வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க அடிகளார்
ஆன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிட, எவருக்கும் ஆண்டவர் ஒருவரே, எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே, அவரே அருட்பெருஞ்ஜோதி என்று கூறி மற்றும், அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்திடை செலுத்த இவ்வுலகில் இறைவனால் வருவுவிக்க வுற்ற அருளாளர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள்.
ஜோதி தரிசனம்
தைப்பூசத் திருநாள் முருகப் பெருமானின் ஆலயங்களில் மட்டுமல்ல வடலூரில் உள்ள சத்திய ஞான சபையிலும் வெகு விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரால் நிறுவப்பட்ட அருட்பிரகாச சத்திய ஞான சபை உள்ளது. “இறைவன் அன்பு வடிவமானவன்; அவன் எங்கும் ஜோதி வடிவமாக நிறைந்திருக்கிறான்” என்று கூறியவர் மற்றும் சன்மார்க்கத்தை தோற்றுவித்தவர் வள்ளலார். அவர் ஏற்படுத்திய சத்திய ஞான சபையில் தைப்பூச விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஒரு தைப் பூச நாளில் தான் வள்ளல் பெருமான் சித்திவளாகக் கூடத்தில் அமர்ந்திருந்த அன்பர்களை பெருங்கருணையோடு நோக்கி, “அருட்பெருஞ்சோதி ஆண்டவரை வழிபட்டு உய்யுங்கள்” என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டார். பின் இரண்டரை நாழிகை அளவில் அருட் பெருஞ்சோதியாகிய ஆண்டவனோடு ஐக்கியமாகி விட்டார். வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் மாதந்தோறும் வரும் பூசம் நட்சத்திரம் மிக முக்கியமானதாக கொண்டாடப்படும். அன்றைய தினம் ஆறு திரை விலக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். ஆனால் ஆண்டுதோறும் தைப்பூசம் அன்று மட்டும் ஏழு திரை விலக்கி, ஜோதி தரிசனம் காட்டப்படும்.
தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாகும். தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள். மகரம் என்பது முடிந்த நிலையினை குறிப்பதாகும்.அகரம் -உகரம்- மகரம்= ஓம்-தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற நாள் சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில் இருக்கும். அப்போது ஞான சபையில் இருந்து அக்கியான ஜோதி காண்பிக்கப்படும் அதாவது சூரிய சந்திர ஜோதியுள் சந்திரன் என்பது “மன அறிவு” சூரியன் என்பது “ஜீவ அறிவு” அக்னி என்பது “ஆன்ம அறிவு” சந்திரன் சூரியனுள் அடங்கி, சூரியன் அக்னியில் அடங்கி, ஆகாயத்தில் அடங்கும் என்பதை தைப்பூசம் எனலாம். மனம் ஜீவனில் அடங்கி ஜீவன் ஆன்மாவில் அடங்கி, ஆன்மா சிவத்துடன் ஒன்றாக கலந்து விடும் என்பதை காட்டவே தைபூசம் வள்ளல் பெருமானால் அளிக்கப்பட்டது.
ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம்
தைப்பூசம் அன்று ஏழு திரைகள் விலக்கி, ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம். இதை காண ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் கூடுவது உண்டு. எதற்காக இந்த ஏழு திரை? இந்த ஏழு திரைகளும் எதை குறிக்கின்றன? இதன் அர்த்தம், காரணத்தை தெரிந்து கொள்ளலாம். 1874 ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி, வெள்ளிக்கிழமை புனர்பூசமும் பூசமும் இணைந்த நாளில் ஸித்தி அடைந்தார் வள்ளலார். உடம்போடு, இறைவனோடு ஜோதி வடிவமாக கலந்தார். இதனை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பூசம் நட்சத்திரம் அன்று ஏழு திரை விளக்கி, ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த ஏழு திரைகளும் ஏழு விதமான நிறங்களில் அமைந்திருக்கும். இந்த ஒவ்வொரு திரைக்கும் பூஜை நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டு, ஒவ்வொரு திரையாக விலக்கப்படும். ஒவ்வொரு திரையும் ஒவ்வொரு விதமான சக்தியை குறிப்பதாகும். வடலூர் சத்திய ஞான சபையில் அமைக்கப்பட்டுள்ள ஏழு திரைகளின் நிறங்கள் மற்றும் அவற்றிற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம்.
ஏழு திரை விளக்கம்:
1. கருப்பு திரை – மாயா சக்தி
2. நீலத்திரை – கிரியா சக்தி
3. பச்சைத் திரை – பராசத்தி
4. சிவப்புத் திரை – இச்சா சக்தி
5. பொன்மைத் திரை – ஞான சக்தி
6. வெண்மைத் திரை – ஆதி சக்தி
7. கலப்புத் திரை – சிற்சக்தி
மனிதராகப் பிறந்த நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வில் இந்த ஏழு நிலைகளைக் கடந்ததால் தான் ஜோதி வடிவமாக இருக்கும் இறைவனை அடையவோ அல்லது ஜோதியுடன் இரண்டற கலக்கவும் முடியும் என்பதை இந்த திரை விலக்கி, ஜோதி தரிசனம் காட்டும் நிகழ்வு உணர்த்துகிறது. தைப்பூசம் அன்று அதிகாலையில் நடைபெறும் இந்த ஜோதி தரிசனத்தை காண்பதன் மூலம் இறையருள் நமக்கு கிடைக்கும்.
கொடியேற்றத்துடன் துவங்கும் இவ்விழாவில், தைப்பூசத்திற்கு இரண்டு நாட்கள் கழித்து வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்தில் திரு அறை தரிசனம் நடைபெறும். இந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி தைப்பூச ஜோதி தரிசனமும், பிப்ரவரி 13ம் தேதி திருஅறை தரிசனமும் நடைபெற உள்ளது. இவை இரண்டையும் தரிசிப்பதால் மனதில் நிம்மதி, தெளிவு ஆகியவை ஏற்படும் என்பது நம்பிக்கை.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025